வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (02/06/2017)

கடைசி தொடர்பு:13:16 (03/06/2017)

வங்கதேசத்தின் அந்த ஒரு தவறு... இங்கிலாந்துக்கு சாதகமானது எப்படி? #MatchAnalysis

2007 - 2009 காலகட்டத்தில் 23 முறை ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்தது இந்திய அணி. கங்குலி, டிராவிட், கும்ளே என சீனியர் வீரர்கள் ஒதுங்க, சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ், தோனி போன்ற வீரர்களுடன் விராட் கோலி, ரெய்னா மாதிரியான இளம் வீரர்களும் இந்திய அணிக்குள் நுழைந்தார்கள். அனுபவமும் இளமையும் நிரம்பிய இந்த அணி பல சாதனைகளை செய்தது. அதன் உச்சம் 2011 உலகக்கோப்பை. இன்றளவும் இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலம் என்றால் அது 2007 - 2011 தான்.

ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 2007 உலகக் கோப்பையில்  இந்திய அணி  வங்கதேசத்திடம் தோற்று எப்படி லீக் சுற்றோடு வெளியேறியதோ, அதே போல 2015 உலகக் கோப்பையில் வலிமையான இங்கிலாந்து அணி வங்கதேசத்திடம் தோல்வியடைந்து லீக் சுற்று முடிந்து பெட்டிப் படுக்கையோடு லண்டனுக்கு விமானம் ஏறியது. சொதப்பிய சீனியர்கள் நீக்கப்பட்டனர். இளங்கன்றுகள் அணியில் நுழைந்தன. அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்தது.

2011 உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தைத் தான் சந்தித்தது இந்திய அணி. எளிதாக வென்றது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று நடந்த முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது இங்கிலாந்து. அனாயசமாக வென்றது. 19  ஆண்டுகால சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நேற்று நடந்தது தான் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங். 

இந்த இரண்டு ஆண்டுகளில் 25 ஒருநாள் போட்டிகளில் முன்னூறு ரன்களை கடந்திருக்கிறது இங்கிலாந்து. வரலாறும் புள்ளிவிவரங்களும் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன. நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம் ஏன் தோற்றது? 

வங்கதேசம் கடந்த சில வருடங்களாகவே நன்றாக விளையாடிவருகிறது . இந்த முறை சில அணிகளுக்கு ஆப்பு வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வங்கதேசம் நிச்சயம் அரை இறுதி வரை செல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் நம்பினார்கள். நேற்றைய தினம் மைதானத்தில் சுமார் 40 % வங்கதேச ரசிகர்கள் நிறைந்திருந்தனர் . கோப்பையை வெல்ல வேண்டும் என உறுதியுடன் நின்ற மோர்கனுக்கு நேற்றைய தினம் டாஸிலேயே வெற்றி கிடைத்தது. காலை போட்டிகளில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வங்கதேசம் சுருண்டு விழும் என எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து பவுலர் வோக்ஸ் அபாரமாகவே பந்து வீசினார். மார்க் வுட்டும் அவருக்கு உறுதுணையாக நின்றார். எனினும் ஜேக் பால் நேற்று மோசமான லைனில் பந்து வீசியதால் வங்கதேசம் கவனமாக ஆடியது. ஜேக் பாலின் பந்துகளை மட்டும் துவைத்து எடுத்தது. ஓவல் மைதானத்தில் ஒரு பக்கம் பிட்சில் இருந்து எல்லைக் கோட்டின் தூரம் குறைவு என்பதால் கவனத்துடன் பந்து வீசியது இங்கிலாந்து. 

தமீம் இக்பால்

பொதுவாக நான்கு அல்லது ஐந்தாம் நிலையில் இறங்கும் முஷ்பிகுர் ரஹீம் நேற்று டூ டவுனாக இறங்கினார். தமீம் இக்பால் நல்ல டச்சில் இருந்தார். அவருக்கு  உறுதுணையாக ஆடினார் ரஹீம். ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. 25 - 44 ஓவர்களில் அருமையாக ஆடியது வங்கதேசம். 330 நிச்சயம் 350 லட்சியம் எனும்  இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 45 வது ஓவரில் பிளென்கட் பந்து வீச வந்தார். நான்காவது கியரில் இருந்து ஐந்தாவது கியருக்கு மாற்ற நினைத்தனர் தமீம் - ரஹீம். பிளென்கட் வெவ்வேறு லெந்த்தில் பந்து வீசினார். 44.3வது ஓவரில் தமீம் பேட்டில் பட்டு டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் பட்லரிடம் கையில் தஞ்சமடைந்தது பந்து. நான்கில் இருந்து ஐந்துக்கு செல்ல வேண்டியதற்கு பதில் மூன்றாவது கியருக்கு இறங்கியது. அடுத்த பந்தை ஆர்வக்கோளாறில் ஒரு மோசமான ஷாட் ஆடினார் ரஹீம். அவுட்! இந்த விக்கெட்டை பார்க்கும் போது கடந்த டி20 உலகக்கோப்பையில்  வெற்றியின் அருகில் வந்தபோது ஆர்வக்கோளாறில் ஷாட் ஆடிய ரஹீமின் நினைவு சடாரென வந்துபோனது. 

முக்கியமான கட்டத்தில் இரண்டாவது கியருக்கு சென்றது ரன் ரேட். ஷகிப் நல்ல டச்சில் ஆரம்பித்தாலும் சிக்ஸர்கள் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு போட்டியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. 305 ரன்கள் குவித்தது வங்கதேசம். ஆசிய மண்ணுக்கு அப்பால், சர்வதேச போட்டிகளில் வங்கதேசத்தின் அதிகபட்ச ரன் இது. 

இங்கிலாந்து சேஸிங்கில் அபாயகரமான அணி. அதிலும் ஜேசன் ராய் அபாயகரமான வீரர். அவரை மூன்றாவது ஓவரில் வீழ்த்தியது வங்கதேசம். உலகக் கோப்பை போன்ற தொடர்களில் 300 ரன்கள் என்பது கடினமான இலக்கு . எனினும் இங்கிலாந்திடம் நீண்ட பேட்டிங் வரிசை இருந்ததால் பொறுமையாக ஆடினால் வெற்றி பெற முடியும் எனும் சூழ்நிலை இருந்தது. ஹேல்ஸ் வெளுத்தபோது ரூட் அமைதியாக இருந்தார். பின்னர் ஹேல்ஸ் வெளியேறிய பிறகு மோர்கன் வந்தார். இந்த இணை கவனமாக ஆடி நேர்த்தியாக வென்றது. கடைசி பத்து ஓவர்களில் 75 ரன்கள் தேவை. வெறும் 44 பந்துகளில் அந்த ரன்களை எடுத்து மோர்கன் - ரூட் கூட்டணி. ஜோ ரூட் அபாரமாக சதம் எடுத்தார். நேற்றைய போட்டியில்  வங்கதேசம் செய்த ஒரு மிகப்பெரிய  தவறு மெஹந்தி ஹாசனை அணியில் சேர்க்காததுதான். 

வங்கதேசம் அணியை வென்ற ரூட் - மோர்கன் கூட்டணி

கடந்த ஆண்டு இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 19 விக்கெட்டுகளை அள்ளி  புது ஹீரோவாக உருவெடுத்தார் மெஹந்தி ஹாசன். அவரது சுழலில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். நேற்றைய போட்டியில் பிட்சில் பந்து அதிகம் சுழலவில்லை. எனினும் மெஹந்தி ஹாசன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு  அபாயகரமான பவுலர்  என்பதால் அவரது ஓவரில் விக்கெட்டுகள் ஒரு வேளை கிடைக்காமல் போயிருந்தாலும் ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவரது ஓவரை இங்கிலாந்து பேட்ஸ்மென் கவனமாக விளையாடியிருக்கவே வாய்ப்பு அதிகம்.

ஏற்கவே டஸ்கின் அகமதுவும் இல்லாத சூழ்நிலையில் மெஹந்தி ஹாசனும் இல்லாததால் இங்கிலாந்தின் வெற்றி எளிதானது. முஸ்தாபிசுர் மட்டுமே தனது முதல் எட்டு ஓவர்களில் நேர்த்தியாக வீசினார். இந்தியாவுடன் பேட்டிங்கில் சொதப்பியதால் நேற்றைய தினம் சுமார் ஒன்பது பேர் பேட்டிங் செய்யும் அளவுக்கு அணியை கட்டமைத்திருந்தது வங்கதேசம். நல்ல பேட்ஸ்மேன்கள், நல்ல பவுலர்கள் என அணி சமநிலையில் வங்கதேசம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இப்போதுதான் வெற்றிப்படியில் ஏற ஆரம்பித்திருக்கிறது வங்கதேசம், உச்சிக்குச் செல்ல நிறைய தூரம் இருக்கிறது, இடையில் ஏகப்பட்ட தடை இருக்கிறது. ஆர்வ மிகுதியில் செய்யும் சிறு சிறு தவறுகளும் ஒரு அடி பின்னோக்கித் தள்ளும். ஆஸ்திரேலிய, நியூசிலாந்து போட்டிகளில் வங்கதேசத்துக்கு தேவை - அதிக கவனம்!


டிரெண்டிங் @ விகடன்