வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (02/06/2017)

கடைசி தொடர்பு:17:00 (02/06/2017)

'நேரலையாக இல்லாவிட்டால் ஹாமுவை அறைந்திருப்பேன்!' - கொதிக்கும் பெண் நிருபர்

பெண் நிருபர்

லகமெங்கும் செய்தியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே இருக்கிறது. கலவரம், போராட்டம் போன்ற நிகழ்வுகளைப் பதிவுசெய்யும்போது, செய்தியாளர்கள் தாக்குதலுக்குள்ளாவது தொடர்ந்து நடக்கிறது. அதிலும், பெண் பத்திரிகையாளர்கள் என்றால், அவர்கள் சந்திக்கும் பிரச்னையே வேறு. பாலியல் சீண்டல்களுக்கும் துன்புறத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இது உலகெங்கும் நடக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது சமீபத்திய சம்பவம். 

பாரீஸ் நகரில், பிரெஞ்சு ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்றிலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேக்ஸிம் ஹாமு (Maxime Hamou) தோல்வி அடைந்தார். இது குறித்து அவரிடம் ‘யூரோஸ்போர்ட்’ என்ற செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பெண் செய்தியாளரான மாலி தாமஸ் பேட்டி எடுத்தார். அப்போது, மாலியைத் திடீர் திடீரென முத்தமிடுவதும் கழுத்தை இறுக்கிக் கட்டிப்பிடிப்பதுமாக இருந்தார் மேக்ஸிம் ஹாமு. நேரலை நிகழ்ச்சியிலேயே ஹாமு இப்படி நடந்துகொண்டதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்ட மாலி, அவரிடமிருந்து உடனடியாக விலகி தன்னைச் சுதாரித்துக்கொண்டார்.

பெண் நிருபர்இதில் கொடுமை என்னவென்றால், மேக்ஸிம் இப்படித் தகாதமுறையில் நடந்துகொண்டபோது, செய்தி அறையில் அமர்ந்திருந்தவர்கள் கைத்தட்டி சிரித்துள்ளார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, பிரெஞ்சு ஓப்பன் போட்டியிலிருந்து மேக்ஸிம் ஹாமு நீக்கப்பட்டார். அவரது செயலுக்குப் பிரெஞ்சு ஓப்பன் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்கது. 

இது குறித்து மாலி தாமஸ் கூறுகையில், “மேக்ஸிமின் நடத்தை எனக்கு அசெளகரியமாக இருந்தது. அது மட்டும் லைவ் நிகழ்ச்சியாக இல்லாதிருந்தால் அவரை முகத்தில் அறைந்திருப்பேன்” என்றார் ஆவேசமாக. 

இந்தச் சம்பவத்துக்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள மேக்ஸிம் ஹாமு, “மாலிமீது நான் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். நான் வேண்டுமென்றே செய்யவில்லை. தனிமனிதனாகவும் டென்னிஸ் வீரராகவும் என் தவறுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் பாடம் கற்றுக்கொள்கிறேன். அந்த நேர்காணலின்போது, என்னுடைய செயல் மாலியை மனதளவில் காயப்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கிறேன்” என்று தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் குறித்து பிரான்ஸ் விளையாட்டுத் துறை அமைச்சர் லாரா ஃப்ளெஸ்சல் தனது ட்விட்டரில், ”நேரலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை வேடிக்கையான விஷயமாக நினைக்கக் கூடாது. இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு அனுமதிக்கவே கூடாது” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோன்று பெண் செய்தியாளர்களைப் பாலியல் ரீதியில் கேலி செய்த சம்பவம் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், தன்னைப் பேட்டியெடுத்த பெண் செய்தியாளரிடம், “உங்கள் கண்கள் அழகாக இருக்கின்றன. நாம் ’டேட்டிங்’ செல்லலாம்” என்று கூறினார். அந்தச் சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்த, கிறிஸ் கெய்ல் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார். 

செய்தியாளர்கள் பெண்ணாக இருக்கும்பட்சத்தில், பிரபலங்களே அவர்களைப் பாலியல் ரீதியில் சீண்டிப் பார்ப்பதும், பிறகு கடமைக்காக மன்னிப்பு கேட்பதும் வழக்கமாகிவிட்டது. ஒரு பெண் பொதுவெளிக்கு வந்துவிட்டால், அவளைப் பாலியல்ரீதியில் எளிதாக அணுகலாம் என்கிற எண்ணம் உலகம் முழுக்க இருப்பதையே இந்தச் சம்பவங்கள் சொல்கின்றன. ஆண்கள் தங்களின் இந்த மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்! அப்போதே பெண்கள் தாங்கள் இயங்கும் உலகத்தைப் பாதுகாப்பானதாக உணர முடியும். புதிய துறைகளில் தடம் பதிக்க நினைக்கும் பெண்களின் எண்ணங்களும் நிறைவேறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க