வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (03/06/2017)

கடைசி தொடர்பு:13:44 (03/06/2017)

துப்பாக்கி முனை தோட்டாவாய் ரொனால்டோ... புல்லட் புரூஃப் ஜாக்கெட்டாய் யுவென்டஸ்! #ChampionsLeagueFinal #RealMadridvsJuventus

`பாகுபலி 2' க்ளைமாக்ஸில் பிரபாஸும் ராணாவும் மோதிக்கொண்டபோது தியேட்டர் அதிர்ந்ததுபோல் இன்று இரவு சாம்பியன்ஸ் லீக்  ஃபைனலில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள க்ளப் சாம்பியன்களான ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மோதும்போது கால்பந்து உலகமே அதிரும். இது கார்டிஃப்பில் நடக்கப்போகும் சாம்பியன்களின் சாம்பியனுக்கான யுத்தம்; ஒரு வருடத் தவம். ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பு எகிறப்போகும் அந்த ஆட்டத்தின் முன்னோட்டம் இங்கே...

ரொனால்டோ

சுவாரஸ்யமான இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதைக் கணிப்பது சிரமம். ஏனெனில், மோதப்போவது தலைகள் அல்ல... மலைகள். இரு அணிகளும் சாதாரண அணிகள் அல்ல... தத்தம் நாடுகளின் சாம்பியன்கள். ரியல் மாட்ரிட் அட்டாக்கில் கில்லி. யுவென்டஸ், டிஃபென்ஸில் வில்லன். ஆக, ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. ஓவர்நைட்டில் உச்சத்துக்கு வரப்போகும் சாம்பியன் யார் என்ற கேள்விக்கான விடை, இன்றிரவு தெரியும்.

ஃபேவரைட் ரியல் மாட்ரிட்

இந்த சீஸன் முழுவதுமே ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிக்கு ஏறுமுகம்தான். பரபரப்பான ரேஸில் தன் பரம எதிரியான பார்சிலோனாவை முந்தி லா லிகா சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போது சாம்பியன்ஸ் லீக் கோப்பையைத் தக்கவைக்க அசுர பலத்துடன் தயாராக இருக்கிறது. இதுவரை பதினொரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ரியல் மாட்ரிட், தொடர்ந்து நான்கு சீஸன்களில் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது. 

சாம்பியன் லீக் தொடரில் 12 போட்டிகளில் மொத்தம் 32 கோல்களைப் பதிவுசெய்து, அட்டாக்கிங்கில் சிறந்த அணியாகத் திகழ்கிறது. உலகின் சிறந்த அட்டாக்கிங் லைனைக்கொண்டுள்ள அணிகளில் ரியல் மாட்ரிட் அணியும் ஒன்று. கிறிஸ்டியானோ ரொனால்டோ சூப்பர் ஃபார்மில் இருப்பதால், கோல்களுக்குப் பஞ்சமிருக்காது. நடுகள வீரர்கள், பாஸ் மார்க் வாங்குகிறார்கள். முன் களம் பலம் என்றால், பின் களம்தான் ரியல் மாட்ரிட் அணியின் பலவீனம். தனது பன்னிரெண்டு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டும்தான் கோல் எதுவும் தரவில்லை என்பது சற்று வருத்தமான விஷயம். ரமோஸ், மார்செலோ எனச் சிறந்த வீரர்கள் இருந்தாலும், சுவரில் உள்ள ஓட்டைகளை அடைக்காவிட்டால் சாம்பியன் கனவில் மண் விழலாம். இருந்தாலும் இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் வெளுத்து வாங்கும் என்பது கால்பந்து ரசிகர்களின் நம்பிக்கை.

சர்ப்ரைஸ் யுவென்டஸ்

ரொனால்டோ Vs யுவென்டஸ்

இத்தாலியின் யுவென்டஸ்அணிக்கும் இந்த சீஸனில் ஏறுமுகம்தான். சீரி ஏ சாம்பியன் பட்டத்தை வாரிச்சுருட்டி தக்கவைத்துக்கொண்டதால், சாம்பியன்ஸ் லீக், பட்டத்தை கைப்பற்ற தனது தடுப்பு மலைகளை நம்பி களமிறங்குகிறது. இரண்டு முறை சாம்பியனான யுவென்டஸ், ஏற்கெனவே நான்கு முறை ஃபைனலில் தோல்வியுற்று பட்டத்தை நூலிழையில் தவறவிட்டிருக்கிறது. இந்த சீஸனில் 12 ஆட்டங்களில் ஒன்பது வெற்றி, மூன்று டிரா என தோல்வியே காணாத ஒரே அணியாக ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

இந்தத் தொடரில் வெறும் மூன்று கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ள யுவென்டஸ் அணியின் பலமே டிஃபென்ஸ்தான். பின்கள அணியான கெலினி, பொனுச்சி, டேனி ஆல்வ்ஸ் என அனைவருமே உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்கள். நடுகள, முன்கள வீரர்கள் தேவையான நேரத்தில் ஜொலிப்பது அணியின் அட்டாக் லைன் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. 39 வயதான கீப்பர் புஃபான்தான் அணியின் உயிர்நாடி. 12 ஆட்டங்களில் வெறும் மூன்று முறை மட்டுமே பந்து இவரைத் தாண்டி வலைக்குள் சென்றுள்ளது. `எப்படியும் இந்த முறை சாம்பியனாகப்போவது யுவென்டஸ்தான்' என்பது, கால்பந்து வல்லுநர்களின் நம்பிக்கை.

நேருக்கு நேர்

ரியல் மாட்ரிட், யுவென்டஸ் அணிகள் யூரோப்பியன் தொடரில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவது இது 19-வது முறை. கடைசியாக மோதிய நான்கு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 2015-ம் ஆண்டில் யுவென்டஸ், ரியல் மாட்ரிட் அணியை வெளியேற்றி ஃபைனலுக்கு முன்னேறியது. அதற்கு பழிதீர்க்க ரியல் மாட்ரிட்டுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்தி சாம்பியன் ஆகுமா... அல்லது இந்த முறையும் தோல்வியில் துவளுமா என்பதே ஒட்டுமொத்த கால்பந்து உலகின் எதிர்பார்ப்பு.

ரொனால்டோ Vs யுவென்டஸ்

மேனேஜர்கள்

ஜினாடின் ஜிடான் பதவியேற்றதிலிருந்தே ரியல் மாட்ரிட் காட்டில் அடைமழை. சென்ற வருடத்தின் சாம்பியன்ஸ் லீக் வின்னர், இந்த வருட லா லிகா சாம்பியன் எனத் தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி. கடந்த ஐந்து வருடங்களில் முதல்முறையாக லா லிகா டைட்டில், தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் என கெத்துகாட்டுகிறார் இந்த முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர்.

மாசிமில்லியனோ அலெக்ரியும் சாதாரண ஆள் அல்ல. இவரும் மூன்று சீஸன்களாக வெற்றிகளில் குளித்துக்கொண்டிருக்கிறார். யுவென்டஸ் அணி தொடர்ந்து மூன்று முறை சீரி ஏ சாம்பியனாக உருவெடுக்கவும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்குச் செல்லவும் இந்த இத்தாலி வீரர்தான் காரணகர்த்தா.

ரீவைண்ட்

செவியா, ஒலிம்பிக் லியான், போர்டோ, பார்சிலோனா, மொனாகோ என உலகின் சிறந்த அணிகளை துவம்சம் செய்து, தோல்வியே காணாத அணியாக ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது யுவென்டஸ் அணி. லீக் சுற்று முடிவில் இரண்டாவது இடம்பெற்றாலும் காலிறுதியில் எழுச்சி கண்டு லிஸ்பான், நாபொலி, பேயெர்ன் முனிச், அட்லெடிகோ மாட்ரிட் எனப் பெரிய அணிகளைச் சாய்த்தே ஃபைனலுக்கு வந்திருக்கிறது ரியல் மாட்ரிட் அணி.

ரொனால்டோ Vs புஃபான்

ப்ளஸ், மைனஸ்

ரியல் மாட்ரிட் அணியின் பலம் இடைவிடாத அட்டாக்கிங்தான். `பிபிசி' எனச் செல்லமாக அழைக்கப்படும் கேரத் பேல், பென்ஸிமா, ரொனால்டோ கூட்டணிதான் அட்டாக்கிங் லைன் அப். காயமடைந்த பேல் ஆடுவது சந்தேகமென்றாலும், ரொனால்டோ இருப்பதால் கோல்மழைக்குப் பஞ்சமிருக்காது. நடுகளத்தில் காஸ்மிரோ, டோனி க்ரூஸ், மோட்ரிச் கூட்டணி பாஸ் ரகம். பின்களம்தான் மிகவும் பலவீனமாக உள்ளது. மார்செலோ, ரமோஸ், ரஃபேல், டனிலோ என டிஃபென்ஸ் கூட்டணிதான் தங்கள் திறமையைக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கீப்பர் நவாஸும் நழுவ விடக் கூடாது. 

டிஃபென்ஸ்தான், யுவென்டஸ் அணியின் பலம். கெலினி, லியனார்டோ பொனுச்சி, பர்சாக்லி, டேனி ஆல்வ்ஸ் கூட்டணிக்குச் சறுக்கலே கிடையாது. ப்ஜானிக், கெதிரா, சாண்ட்ரோ என நடுகளம் பலமாக இருக்கிறது.  டிபாலா, ஹிகுவைன், மண்ட்ஜுகிச் ஆகியோர் அடங்கிய அட்டாக்கிங் கூட்டணி விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது. கீப்பர் புஃபான் மலைபோல எதிரணியின் திட்டங்களைத் தடுத்து நிறுத்துகிறார்.

வெற்றி என்பது விதியிடம்தான் என்பது, இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும்போது தெரிந்துவிடும். இருந்தாலும் ரொனால்டோ தெறிக்கவிடுவாரா அல்லது  புஃபான் தகர்த்துவிடுவாரா என்பதைப் பொறுத்தே ஆட்டத்தின் முடிவு இருக்கும்.

சாம்பியன் ஆகப்போவது யார்?

விழித்திருங்கள், ஒரு வரலாறு பிறக்கப்போவதைக் காண!

மு.சசிக்குமார்