வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (03/06/2017)

கடைசி தொடர்பு:15:40 (03/06/2017)

‘இந்தியா பாகிஸ்தானை வெல்லும்... ஆனால், சாம்பியன் ஆஸ்திரேலியா!' மெக்ராத் லாஜிக்

கிரிக்கெட் உலகின் டாப் - 8 அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் அசத்தலாக விளையாடி, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளை எளிதாக வென்றது. இதில் முக்கியமான விஷயம், இரு அணிகளையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்ததுதான். எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நடப்பு சாம்பியனாகக் களமிறங்கும் இந்தியா, நாளை நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி இலங்கை அணியையும், ஜூன் 11-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணியின் பலம்குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  கருத்து தெரிவித்துவருகின்றனர். 

குமார் சங்கக்காரா: 

``இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆசிய அணிகள் உள்ளன. இவற்றில் இந்திய அணிதான் சிறப்பானதாக இருக்கிறது. 2013-ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு, இந்திய அணிக்கே பிரகாசமாக உள்ளது. ஏனெனில், இந்திய அணியின் வலுவான பேட்டிங் - தீப்பொறி பறக்கும் வேகப்பந்து வீச்சு - ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என, பலமான அணியாகத் திகழ்கிறது இந்திய அணி. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் சொதப்பினாலும், கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் வலுவான அணியைத் தேர்ந்தெடுத்துத் தலைமை தாங்குவதில் விராட் கோலி நிச்சயம் தீவிரம் காட்டுவார். இந்திய அணி தேர்வுசெய்யப்பட்டவிதத்தில் சற்றே பழைமையான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பலம் வாய்ந்த அணியாகவே இந்தியா திகழ்கிறது. 

இந்தியா கேப்டன் விராட் கோலி

எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதை, இப்போதே கணிப்பது கடினம். ஆனால், அரை இறுதியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத வாய்ப்புள்ளன. ஒரு காலகட்டத்தில் இரு அணிகள் மட்டுமே லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல அணிகள் சாம்பியனாகும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஆடிவரும் ஆட்டத்தில் உண்மையான ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. ஏனெனில், மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் போட்டியை அணுகும் முறை மற்றும் அதற்கான உத்திகளில் இங்கிலாந்து அணி பின்தங்கியே இருக்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்த அணி, ஆக்ரோஷமாகவும் உற்சாகமாகவும் கிரிக்கெட்டை ஆடும் அணியாக முன்னேறியுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் சிலர், அந்த அணியை இந்த நிலைக்கு நடத்திவருகின்றனர். கடந்த சாம்பியன்ஸ் டிராபியைப்போலவே, இந்த முறையும் சொந்த மண்ணில் போட்டிகளில் பங்கேற்பது, அவர்களுக்குக் கூடுதல் ப்ளஸ்ஸாக அமையும்'' எனக் கூறியுள்ளார் சங்கக்காரா.

வி.வி.எஸ்.லட்சுமண்:

இந்தியா - வி.வி.எஸ்.லட்சுமண்

''8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா சிறப்பாக ஆடி கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு அவர்கள் தன் இரண்டு பயிற்சி ஆட்டங்களையும் ஆடியவிதம் சிறந்த உதாரணம். இரண்டு போட்டிகளிலும் ஷிகர் தவானின் பேட்டிங் என்னை ஈர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகச் சொதப்பினாலும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை, தினேஷ் கார்த்திக் அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார். கடைசிக்கட்டத்தில் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். இரண்டு போட்டிகளிலும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள், எதிர் அணியைத் திணறடிக்கக்கூடிய லைன் மற்றும் லெங்த்தில் தொடர்ச்சியாகப் பந்து வீசினர். மேலும், ரன்களைக் கட்டுப்படுத்துவதைவிட, ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை எடுப்பதில்தான் அவர்கள் குறியாக இருந்தனர்'' என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றிப் பேசுகையில், "நிச்சயம் அது சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். போட்டி நடைபெறும் பர்மிங்காம் மைதானம், கிரிக்கெட் ரசிகர்களாலும், கரவொலியாலும் நிரம்பி வழியப்போகிறது. நாம் நமது முழுத்திறமையைக் காட்டினால், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி வெற்றிபெறலாம்" எனத் தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

கிளென் மெக்ராத்:

ஆஸ்திரேலியா

"கடந்த மூன்று வருடங்களாக, இந்திய அணியின் பெளலர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் சுழல் - வேகப்பந்து வீச்சு கூட்டணி, மற்ற அணிகளைவிட சாதகமான விஷயமாக இருக்கிறது. எனவே, இந்திய அணியிடம் மிக வலிமையான பேட்டிங்குடன் தாக்குதல் பாணியிலான பெளலிங் இருப்பதாகவே நினைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பொறுத்தவரை, அது எப்போதும்போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். அதில் இந்த முறை இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கு முன் இருந்த அளவுக்குப் பலமாக இல்லாவிட்டாலும்,  பாகிஸ்தான் அணியில் தரமான சில பெளலர்களும், அனுபவமிக்க பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். ஆதலால், ஒருவேளை பாகிஸ்தானும் இந்தியாவை ஆச்சர்யப்படுத்தலாம்'' என்றார்.

அரையிறுதிக்குத் தகுதிபெறும் அணிகளைப் பற்றிக் கேட்டபோது ''இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் நிச்சயமாக  அரையிறுதில் இருக்கும். நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்துக்கு வாய்ப்புகள் அதிகம்'' என மெக்ராத் கணித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றி அவர் கூறியதாவது, "இந்தியாவின் பெளலர்கள் என்னை ஈர்த்துள்ளனர். தொடக்க ஓவர்களில் உமேஷ் யாதவ் சிறப்பாகப் பந்து வீசுகிறார். டெத் ஓவர்களில் அற்புதமாகப் பந்து வீசும் பும்ரா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான சிறந்த வீரராக இருக்கிறார். புவனேஷ்வர் குமார் சரியான லெங்த்தில் பந்து வீசுவதோடு, பும்ராவைப்போலவே நல்ல வேகத்தில் யார்க்கர்களையும் வீசுகிறார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து திறமைகளை மேம்படுத்துவார்கள்'' என மெக்ராத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோப்பை வெல்லப்போகும் அணியைப் பற்றி கேட்டபோது, "நான் என்றுமே ஆஸ்திரேலியாவுக்குத்தான் ஆதரவு தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்தான் இப்போதைக்கு கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்துவரும் சர்ச்சைக்கு, சீக்கிரமே நல்ல தீர்வு வரும். இங்கிலாந்து அணியை, அவர்களது ஊரில் தோற்கடிப்பது கடினமானதாக இருக்கலாம். ஏனெனில், இப்போதுதான் அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளனர். அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரராக இருக்கிறார்" என மெக்ராத் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்