இந்தியா - பாகிஸ்தான் கிளாசிக் மேட்ச் ரிவைண்ட் #IndiaVsPakistan #INDVSPAK #ChampionsTrophy | India vs Pakistan classic matches rewind

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (04/06/2017)

கடைசி தொடர்பு:12:50 (04/06/2017)

இந்தியா - பாகிஸ்தான் கிளாசிக் மேட்ச் ரிவைண்ட் #IndiaVsPakistan #INDVSPAK #ChampionsTrophy

கிரிக்கெட் என்றில்லை, எந்த ஒரு விளையாட்டு போட்டியாக இருந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும். களத்துக்கு வெளியிலும் அனல் பறக்கும். வீரர்கள், ரசிகர்கள் கடந்து இரு நாட்டு மக்களிடையிலும் பெரும் பதற்றமும் எதிர்பார்ப்பும் நிலவும். அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் எனில் சொல்லவே வேண்டாம். சாம்பியன்ஸ் டிராபி அதற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. 

இந்தியா- சச்சின்

இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடக்கும் என்றாகிவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டி - 20 உலககோப்பையில்தான் இரு அணிகளும் சந்தித்தன. அதாவது இரு அணிகளும் மோதி ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின், சாம்பியன்ஸ் டிராபியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதுகிறது. நிச்சயம் இந்த மேட்ச் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   

ஒட்டுமொத்தமாக இந்தியா - பாகிஸ்தான் மோதல்களைப் பார்த்தால், ஒருநாள் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி பாகிஸ்தான் அணியே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது.  டி - 20 போட்டிகளில் மட்டும் தான் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆனால் ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20) இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் வென்றதே இல்லை. அதேநேரத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானை வென்றதே இல்லை என்ற நிலை இருந்தது. கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மேலும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா இருமுறை வென்றுள்ள நிலையில் பாகிஸ்தான் ஒரு முறைகூட இந்தக் கோப்பையை வென்றதில்லை. இதுவரை ஐசிசி தொடர்களில் இவ்விரு அணிகள் மோதிக் கொண்டதில் சில முக்கியமான போட்டிகளைப் பார்ப்போம். 

உலகக்கோப்பை 2003

ஒரு முக்கியமான லீக் ஆட்டத்தில் மோதின இரு அணிகளும். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி சயீத் அன்வரின் சதத்தின் உதவியுடன் 274 என்ற இலக்கை நிர்ணயித்தது. பாகிஸ்தானின் அபார பந்துவீச்சுடன் ஒப்பிடும்போது இது இந்தியாவுக்கு சவாலான இலக்கு. ஏனெனில், அந்த பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர் ஆகிய மூவரும் வேகத்தில் மிரட்டும் ராட்சஷர்கள். ஆனால் லிட்டில் மாஸ்டர் சச்சினிடம் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. சோயிப் அக்தரின் முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ், பளிச் பளிச்சென 2 பவுண்டரி உள்பட 15 ரன்கள் விளாசி தனி முத்திரை பதித்தார் சச்சின். அதிலும் அக்தரின் ஷார்ட் பாலில்  ஆஃப் சைடில் அவர் அடித்த சிக்ஸர் எல்லாம்... ப்பா... இன்னும் கண்ணுக்குள்... மிரட்டலாக விளையாடி 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து 2 ரன்களில் சதத்தை மிஸ் செய்து சச்சின் அவுட்டானபோது என்னவோ போலிருந்தது. பின்னர் டிராவிட் -  யுவராஜ் கூட்டணி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துவந்தது. இந்த உலககோப்பையில் இறுதி வரை சென்று தோல்வியுற்றது இந்தியா.

டி-20 உலகக்கோப்பை 2007

இந்தியா

முதல் டி-20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய இரு போட்டிகளும் எளிதில் மறக்கக்கூடியதல்ல. முதலில் லீக் போட்டி ஒன்றில் மோதின. டையில் முடிந்து முதல்முறையாக ‛பவுல் அவுட்’ நடந்தது இப்போட்டியில்தான். ஏற்கெனவே ஒரு போட்டி மழையில் ரத்தான நிலையில் ‛பவுல் அவுட்’ முறையில் இந்த இக்கட்டான போட்டியை வென்றது இந்தியா. அதன்பின் மீண்டும் இந்த இரு அணிகள் இறுதிப்போட்டியில் சந்தித்தன. கடைசி கட்டத்தில் மிஸ்பாவின் அதிரடியால் பாகிஸ்தான் வென்றுவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், தோனி வைத்திருந்த அந்த ‛அதர் ஐடியா’ பக்காவாக கைகொடுத்தது. இந்தியாவும் 5 ரன் வித்தியாசத்தில் வென்று கோப்பையை முத்தமிட்டது.

உலகக்கோப்பை 2011

மிக முக்கியமான அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து ஆடியது இந்தியா. இம்முறை சொந்த மண் மொஹாலியில். முதலில் பேட் செய்த இந்தியா சேவாக்கின் அதிரடியால் நல்ல தொடக்கத்தைப் பெற்றது. 2003 போலவே இதிலும் சச்சின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 85 ரன்கள் எடுத்தார். 261 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய பாகிஸ்தான் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இறுதிபோட்டிக்கு சென்ற இந்தியா கோப்பையையும் வென்றது. 

கடந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் இதே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்தான் இரு அணிகளும் மோதின. மழை பாதித்த இப்போட்டியில் 10 ஓவர்கள் குறைக்கபட்டது. நிர்ணயிக்கப்பட்ட 40 ஒவர்களில் 165 ரன்களே எடுத்தது பாகிஸ்தான். இந்திய அணி விளையாடும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால், டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவருக்கு 102 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை எளிதாக சேஸ் செய்தது இந்தியா. அதோடு, சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை முதல்முறையாக வீழ்த்திய பெருமையையும் பெற்றது.

இந்தமுறை மீண்டும் பாகிஸ்தான் கை ஓங்குகிறதா? இல்லை இந்தியா மீண்டும் வெல்கிறதா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

ம.காசி விஸ்வநாதன்

மாணவ பத்திரிகையாளர்


டிரெண்டிங் @ விகடன்