வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (04/06/2017)

கடைசி தொடர்பு:14:50 (04/06/2017)

ரொனால்டோவின் மந்திர டச், மேஜிக் கோல்... யுவென்டஸ் கோட்டையைத் தகர்த்த ரியல் மாட்ரிட்! #ChampionsLeague #CristianoRonaldo #UCLFinal

இறுதியாக முடிவுக்கு வந்தது ஒரு வருடத் தவம். பரபரப்பான ஆட்டத்தில் ரொனால்டோ, யுவென்டஸ் அணியின் தடுப்பு மலைகளைத் தகர்த்து இரண்டு கோல்கள் அடிக்க, ரியல் மாட்ரிட் 4-1 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் அணியை தோற்கடித்து, 12 வது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் அதிக கோல் அடித்த வீரர், தனது கால்பந்து வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக 600 கோல் அடித்தவர் என்ற இரட்டைச் சாதனைகளுடன் கோப்பையை முத்தமிட்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. யுவென்டஸ் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஃபைனலில் தோற்று ஏமாற்றம் அடைந்தது. 

ரொனால்டோ


கார்டிஃப் நகரில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த பிரின்ஸிபாலிட்டி ஸ்டேடியத்தில் சாம்பியன்ஸ் லீக் ஃபைனல் நேற்றிரவு நடந்தது. தாக்குதல் ஆட்டத்தில் கில்லியான ரியல் மாட்ரிட், தற்காப்பு ஆட்டத்தில் மன்னனான யுவென்டஸ் அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி. ஆரம்பத்தில் இருந்தே அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் எதிரணிகளின் கோல் கம்பத்தை பலமுறை முற்றுகையிட்டனர். ஆனால் அட்டாக்கிங்கில் குறியாக இருந்த ரியல் மாட்ரிட் அணியின் கையில் ஆட்டம் மெள்ள மெள்ள வரத்தொடங்கியது. பந்து அடிக்கடி யுவென்டஸ் கோல் போஸ்டிற்கு செல்வதும் உடனே அந்த அணியின் டிஃபென்ஸ் கூட்டணியால் திருப்பி அனுப்பப்படுவதுமாக இருந்தது. 20-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு முதல் கோல் விழுந்தது. முதல் வெடியை கொளுத்திப் போட்டவர் CR7. ரொனால்டோ பாஸ் செய்த பந்தை வாங்கிய டேனியல் கார்வஹால் மீண்டும் அவருக்கே துரிதமாகக் கடத்த, அதை அற்புதமாக வலைக்குள் அனுப்பி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் ரொனால்டோ. அவர் அடித்த பந்து யுவென்டஸ் டிஃபண்டர் பொனுச்சியின் காலை உரசிக்கொண்டு கீப்பர் புஃபோனை ஏமாற்றிவிட்டு வலையின் கீழ் வலது மூலையில் தஞ்சம் புகுந்தது. இது ஒட்டுமொத்த ஐரோப்பிய போட்டிகளில் அவர் அடித்த 107-வது கோல்.

எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த யுவென்டஸ் அணியின் டிஃபன்ஸ் கூட்டணியை பதம் பார்த்தார் ரொனால்டோ. ‛இவ்ளோதான்... யுவென்டஸ் டிஃபன்ஸ்...இதுக்குப் போயி அலட்டிக்கிட்டு....’ எனும் விதமாக ரொனால்டோ பூனைக்கு மணி கட்டி விட்டார். ரியல் மாட்ரிட் வீரர்களுக்கு மனதளவில் உற்சாகம் இருந்தது. கால்பந்தில் முதல் கோல் அடிக்கும் அணி உளவியல் ரீதியாக உற்சாகம் அடைவது இயல்பு. அந்த வகையில் ரியல் மாட்ரிட் வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் துள்ளிக் குதித்தனர்.

ரியல் மாட்ரிட், ரொனால்டோ

அதேநேரத்தில், உடனடியாக தவறுகளை மறந்து ஆட்டத்தில் கவனம் செலுத்தினால், மேட்ச் வசப்படும் என்பதே கால்பந்தின் பியூட்டி. அதைப்புரிந்து கொண்ட, யுவென்டஸ் அணி 27-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. அந்த அணியின் நடுகள வீரர் அலெக்ஸ் சாண்ட்ரோ கொடுத்த கிராஸை ஹிகுவைன் மண்ட்ஜுகிச்சிற்கு பாஸ் செய்ய அதை அசாத்தியமான ஓவர்ஹெட் கிக்கால் கோலாக மாற்றி  ரசிகர்களை மெரசல் செய்தார் மண்ட்ஜுகிச். இந்த பதிலடியை ரியல் மாட்ரிட் எதிர்பார்க்கவே இல்லை. ரசிகர்கள் கொஞ்சம் பதறித்தான் போயினர். 45வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை வலைக்கு வெளியே அடித்து நழுவ விட்டார் காஸ்மிரோ. இரு அணி வீரர்களும் கிடைத்த சில வாய்ப்புகளை தவற விட்டனர். முதல் பாதி முடிவில் 1-1 என சமநிலை. ‛அடடா செம மேட்ச், செம ஃபைனல்’ என நிமிர்ந்து உட்கார்ந்தான் ரசிகன். 

இரண்டாவது பாதியின் தொடக்கத்திலிருந்தே ரியல் மாட்ரிட் ஆட்டத்தை முழுமையாக தங்கள் வசப்படுத்தியது. தாக்குதலை தீவிரப்படுத்திய ரியல் மாட்ரிட் அணி எதிரணியின் தடுப்பு சுவர்களான கெலினி, டேனி ஆல்வ்ஸ் போன்ற வீரர்களை ஒரு கை பார்த்தனர். ரியல் மாட்ரிட் வீரர்களின் சில ஷாட்டுகளை புஃபோன் தடுத்து நிறுத்தினார்.  இதற்கிடையே கிடைத்த பொன்னான வாய்ப்புகளை யுவென்டஸ் வீரர்கள் வீணடித்தனர். மாறாக, ரியல் மாட்ரிட் வீரர்கள் யுவெண்டஸ் அணியின் பாதுகாப்பு சுவரை எளிதாக உடைத்தனர். அதோடு, யுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் டிபாலாவை டார்கெட் செய்து கிறங்கடித்தனர்.

ஜிடான், ரொனால்டோ

டிஃபன்ஸ், டிஃபன்ஸ், டிஃபன்ஸ் என்ற தியரியுடன் களமிறங்கிய யுவென்டஸ் அணியால், முழு வீச்சில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடவில்லை. முடிந்தவரை கோல் வாய்ப்புகளை உருவாக்கவில்லை. இலக்கை நோக்கிய ஷாட்கள் இல்லை. பெனால்டி பாக்ஸுக்குள் புகுந்து எந்த ஸ்ட்ரைக்கரும் மாயாஜாலம் நிகழ்த்தவில்லை. ஆனால் ரியல் மாட்ரிட் அணி சரியான முறையில் துரிதமான பாஸ்கள் மூலம் யுவென்டஸ் அணியின் ஏரியாவை அடிக்கடி முற்றுகையிட்டது. 61 வது நிமிடத்தில்  நடுகளவீரரான காஸ்மிரோ தூரத்திலிருந்து அடித்த பந்து யுவெண்டஸ் வீரர் கெதிராவின் காலில் பட்டு கீப்பர் புஃபோனை ஏமாற்றி வலைக்குள் தஞ்சம் புகுந்தது. 2-1 என ரியல் மாட்ரிட் முன்னிலை. காஸ்மிரோவால் நம்பமுடியவில்லை. ரியல் மாட்ரிட் ரசிகர்களால் நம்பமுடியவில்லை. யுவென்டஸ் வீரர்களால் ஏற்கமுடியவில்லை. அவர்களால் ஜீரணிக்கவும் முடியவில்லை. 

கோல் அடித்ததில் காஸ்மிரோவுக்கு அவ்வளவு உற்சாகம். இதுபோன்ற கோல் இனி சாத்தியமில்லை. அதுவும் யுவென்டஸுக்கு எதிராக சாத்தியமில்லை. சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் சாத்தியமில்லை... இப்படி என்னவென்னவோ அவர் நினைத்திருக்கலாம். ஆம், அந்த கோலை அவர் அப்படி கொண்டாடினார். வெற்றிக்குப் பின் சக வீரர்கள் ஒவ்வொருவரையும் அவ்வளவு ஆனந்தத்துடன் கட்டியணைத்து திருப்திபட்டுக்கொண்டார். காஸ்மிரோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரசிகர்களாலும் நம்பமுடியவில்லை. அது அட்டகாசமான கோல். பெனால்டி பாக்ஸுக்கு வெளியே இருந்து பவர்ஃபுல்லாக அடிக்கப்பட்ட ஷாட். புஃபோனால் அந்த ஷாட்டை கணிக்க முடியவில்லை. தடுக்க
முடியவில்லை. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த வெடியை கொளுத்திப் போட்டார் ரொனால்டோ. மோட்ரிச் கடத்தி கொடுத்த பந்தை தனது எளிய மந்திர டச்சால் கோலாக்கி அசத்தினார். இது இந்த சாம்பியன்ஸ்லீக் தொடரில் ரொனால்டோவின் 12-வது கோல். இதன்மூலம் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி இத்தொடரின் டாப் ஸ்கோரர் ஆனார். மூன்று நிமிடங்களில் இரண்டு கோல்களை விட்டுக்கொடுத்த யுவென்டஸ் அணி சத்தமே இல்லாமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டது; அந்த அணியின் ரசிகர்களும் தான். பின் வேறு வழியின்றி யுவென்டஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. ஆனால், அது டூ லேட். ப்ஜானிக், அலெக்ஸ் சாண்ட்ரோ, கடார்டோ என வரிசையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டார்கள். 

77 வது நிமிடத்தில் மாற்று வீரராக தனது சொந்த மண்ணில் களமிறங்கினார் கேரத் பேல். 81 வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் அலெக்ஸ் சாண்ட்ரோவின் ஹெட்டர் துரதிர்ஷ்டவசமாக வலைக்கு வெளியே சென்றது. அதோடு யுவென்டஸ் ரசிகர்களின் நம்பிக்கையும் பறந்தது. பத்து நிமிடத்தில் இரண்டு கோல்கள் சாத்தியமில்லை. அதுவும் ரியல் மாட்ரிட்டுக்கு எதிராக சாத்தயமில்லை. இது புரிந்து ரசிகர்கள், நடப்பதை மெளன சாட்சியாக வேடிக்கை பார்த்தனர். ஆட்டம் முடிவதற்கு பத்து நிமிடத்துக்கு முன்பிருந்தே, ‛தோற்றாலும், ஜெயித்தாலும் நாங்க இருக்கோம்’ என யுவென்டஸ் ரசிகர்கள் அணிக்கு ஆதரவாக பேனர் பிடிக்கத் தொடங்கி விட்டனர். 

84 வது நிமிடத்தில் ரமோஸ் மீது பெளல் செய்ததால், இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று, உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார் யுவென்டஸ் அணியின் கடார்டோ. வரிசையாக கிடைத்த பல வாய்ப்புகளை யுவென்டஸ் வீரர்கள் வீணடித்தனர். 90 வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. ரொனால்டோ அடித்த அந்த பந்து, யுவென்டஸ் வீரர்களின் உடம்பில் பட்டு தெறிக்க, அதை ரியல் மாட்ரிட் பின்கள வீரர் மார்செலோ திறமையாக கடத்தி கிராஸ் செய்தார். யாருமே எதிர்பாரா வண்ணம், அப்போதுதான் களம் புகுந்திருந்த அசென்சியோ அதை அற்புதமாக, ஃபினிஷ் செய்தார்.  கோல் அடித்தவரை விட, பாஸ் கொடுத்த மார்செலோ இந்த இடத்தில் பாராட்டுக்குரியவர். லெஃப்ட் விங்கில் இருந்து பந்தைக் கடத்தி வந்து பாஸ் கொடுத்த விதம் செம. அனுபவம் கைகொடுக்கும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். 

ஆட்டம் முடிந்தது. ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி. 12-வது முறையாக சாம்பியன். ரொனால்டோ களத்தில் விழுந்து உணர்ச்சிவசப்பட்டார். புஃபோன் கண்ணீர் விட்டார். இரு அணி வீரர்களும் கண்ணீர் சிந்தினர். ரியல் மாட்ரிட் வீரர்களின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். யுவென்டஸ் வீரர்களின் கண்களில் விரக்தி. ஏமாற்றம். மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஃபைனலில் வீழ்ந்ததன் சோகம். கழிவிரக்கம். இந்தமுறையும் புஃபோனின் சாம்பியன்ஸ் லீக் கோப்பை கனவானது. கானல் நீரானது. 

இறுதிப் போட்டிக்கு முன்புவரை ஒட்டுமொத்த சீசனிலும் மூன்று கோல்கள் மட்டுமே வாங்கியிருந்தது யுவென்டஸ். ஆனால், ஃபைனலில் அந்த அணி வாங்கியது நான்கு கோல்கள். கோப்பை நழுவியதை விட, டிஃபன்ஸ் ஏரியாவில் கில்லி எனப் பெயரெடுத்த யுவென்டஸ் அணிக்கு இது பெருத்த அவமானம். யுவென்டஸ் ரசிகர்களும் இதில் உடன்படுவர். ரொனால்டோ மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். சந்தேகமே இல்லை raising to the occasion என்பதற்கு ரொனால்டோ நல் உதாரணம். அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ரியல் மாட்ரிட் வீரர்களும் பாராட்டுக்குரியவர்கள். இந்த சீசன் முழுவதுமே பக்காவாக அணியை வழி நடத்திய பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானுக்கு வாழ்த்துகள்.

மு.சசிக்குமார்