வெளியிடப்பட்ட நேரம்: 23:59 (04/06/2017)

கடைசி தொடர்பு:07:59 (05/06/2017)

#indiavspak ஆரம்பமே அதிரடி... பாகிஸ்தானைப் புரட்டியெடுத்தது இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில், பாகிஸ்தானை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா வெற்றிபெற்றது.

India Paksitan


சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தியா தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வதால், இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது. 


ஆட்டத்தின் இடையிடையே மழை குறுக்கிட்டது. இதனால், போட்டி 48 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டது. தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா, 119 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார், மற்றொரு தொடக்க வீரரான தவான், 65 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். இறுதி வரை களத்தில் இருந்த கேப்டன் கோலி, 68 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். 


பரபரப்பான இந்த ஆட்டத்தில், 48 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 319 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர் விளாசினார் பாண்டியா. பாகிஸ்தான் தரப்பில், ஹசன் அலி, ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


இதையடுத்து மீண்டும் மழை குறுக்கிட்டதால்,  டக்வர்த் லூயிஸ் முறைபடி, பாகிஸ்தானுக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பேட்டிங்கில் கெத்து காட்டிய இந்தியா, பெளலிங்கிலும் அசத்தியது. இதனால், பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் சொதப்பினர். அந்த அணியின் அசார் அலி மட்டும் 50 ரன்கள் எடுத்தார்.


மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. காயம் காரணமாக, அந்த அணியின் வஹாப் ரியாஸ் களமிறங்கவில்லை. இதன்மூலம் இந்திய அணி, 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். யுவராஜ் சிங், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின்மூலம், குரூப் - பி பிரிவில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.