வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (05/06/2017)

கடைசி தொடர்பு:15:09 (05/06/2017)

சந்தேகமே இல்லை... சச்சினுக்குப் பின் யுவராஜ்தான் பெஸ்ட் மேட்ச் வின்னர்! #YuvrajSingh

"Once a Champion, always a Champion" - இது பிலிப்பைன்ஸை 21 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் அடிக்கடி சொல்லும் வார்த்தை. இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, சிக்ஸர் இளவரசன் யுவராஜ் சிங்கிற்குப் பக்கா பொருத்தம். நேற்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியில் மோதிய நிகழ்வை பெரும்பாலும் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். போட்டி முடிந்த பின்னர் இந்தியாவின் வெற்றிக்கு யார் காரணம் என்ற கேள்வி விராட் கோலி முன் வைக்கப்பட்டது. அவர் சற்றும் யோசிக்காமல் யுவராஜ் சிங் என்றார். பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அது எங்கள் அணியில் யுவராஜ் இருந்ததே என்றார்.

ஆம், யுவராஜ் சிங்தான் நேற்றைய மேட்ச் வின்னர். 21 ஓவர்கள் வரை  நல்ல ரன் ரேட்டில் ஆடிக் கொண்டிருந்தது இந்திய அணி. ரன் ரேட் ஆறு என நெருங்கும் வேளையில், மூன்றாவது கியரிலிருந்து நான்காவது கியருக்குத் தட்ட வேண்டிய நிலையில், திடீரென பிரேக் அடித்து முதல் கியருக்கு ரன் ரேட்டை மாற்றினார்கள் இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனும். 22 - 35 ஓவர்களில்  இந்தியா குவித்த ரன்கள் வெறும் வெறும் 55. இந்த 14 ஓவர்களில் இந்தியாவின் ரன் ரேட் வெறும் 3.93 மட்டுமே. ரோஹித் ரன் அவுட் ஆனார். யுவராஜ் சிங் களம் புகுந்தார். அப்போது பாகிஸ்தான் பிடியில் தான் மேட்ச் இருந்தது. 36.4 ஓவர்களில் 192/2 என்பது இந்திய அணியின்  ஸ்கோர். யுவராஜ் ஸ்ட்ரைக் மாற்றிக் கொடுக்கும் வேலையைச் செய்வார். கோலி வெளுத்துக் கட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலிக்கு நல்ல லெந்த்தில் தொடர்ந்து பந்து வீசி திணறடித்தனர் பாக் பவுலர்கள். இதனால் அவரால் பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட முடியவில்லை. 

யுவராஜ் சிங்

கோலியின் தடுமாற்றத்தைக் கவனித்தார் யுவி. வஹாப் ரியாஸ் மற்ற பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கினாலும், யுவராஜை சற்றே தாக்கினார். அவர் நிலைகுலையும் பந்துகளை வீசினார். அவரது பந்துகளில் பெரிய ஷாட் ஆட திணறினார் யுவி. எனினும் அவரது டைமிங் ஷாட்களால் பவுண்டரிகள் வந்தன. சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானும் யுவியை இறுக்கிப்பிடித்தார். வெடித்துச் சிதற காத்திருந்த யுவராஜ் சாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் ஹசன் அலி பந்துவீச வந்தார். இவர்தான் ஏற்கெனவே யுவராஜின் கேட்ச்சை கோட்டை விட்டவர். ஹசன் பந்துவீசவரும்போதே சற்றே பதற்றத்தில் இருப்பதைக் கவனித்தார் யுவி. சிக்ஸர் இளவரசனுக்கு ஆஃப் ஸ்டம்ப்புக்கு அருகே அட்டகாசமான யார்க்கர் வீசினார் ஹசன் அலி. கொஞ்சம் விட்டிருந்தால் அந்த பந்து விக்கெட்டை தகர்த்திருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசத்தால் பவுண்டரிக்குச் சென்றது. யுவி உஷாரானார். ஹசன் அலியின் அடுத்த பந்தில் ஒரு ரன் மட்டும் தட்டிவிட்டார். அப்போது  யுவியின் ஸ்கோர் 14 பந்துகளில் 15 ரன்கள்.

42 வது ஓவரில் ஆமீர், யுவராஜின் பலவீன அம்சமான ஷார்ட் பால் வீசினார். மெதுவாக வந்த அந்த ஷார்ட் பாலில் அட்டகாசமான PULL ஷாட் ஆடினார் யுவி. இங்கிலாந்து மைதானத்தில் இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். சிரமமான பந்தை சிதறவிட்ட யுவராஜ் மீது கவனம் குவித்தனர். அடுத்த ஓவரை மீண்டும் ஹசன் அலி வீச வந்தார். யார்க்கர் வீச முயற்சித்தார். அந்த பந்தைப் பவுண்டரிக்கு அனுப்பி ‛இன்னைக்கு அதிரடி மூடில் இருக்கிறேன்’ என  ரசிகர்களுக்கும் பாகிஸ்தான் பவுலர்களுக்கும் சொன்னார் யுவி. அதே ஓவரில் ஆறாவது பந்தில் மீண்டும் ஸ்லோயர் ஷார்ட் பால் வீசினார் ஹசன் அலி. ‛இதுக்குத்தானடா காத்திருந்தேன்’ என்பது போல, மெதுவாக வந்த பந்தை நிதானத்துடனும் அதேசமயம் முழு சக்தியையும் தனது பேட்டுக்கு செலுத்தி பந்தை அறைந்தார். இந்த முறை வெள்ளைப் பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்பாமல் நேரடியாக பார்வையாளர்களிடம் அனுப்பினார்.  'வாட்  எ ஷாட்'  என டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட துள்ளிக்குதித்தனர். அப்படியெனில் மைதானத்தில் அந்த நிமிடங்களை நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் என்னவொரு உற்சாக மனநிலையில் இருந்திருப்பார்கள்!

வஹாப் ரியாஸின் அடுத்த ஓவர்களில் வீம்பு காட்டாமல் அடங்கிப்போய் இரண்டு ரன்கள் மட்டும் எடுத்தார் யுவி. மீண்டும் ஹசன் அலி வந்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ஃபுல் டாஸ் வீசினார். அதை லாங் ஆனில் ஒரு பவுண்டரி அடித்தார். அதே ஓவரில் ஆஃப் ஸ்டம்ப் அருகே மீண்டும் ஃபுல் டாஸ் வர , இம்முறை அலட்டிக் கொள்ளாமல் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை வஹாப் ரியாஸ் வீசினார். பவுன்சரில் ஒரு பவுண்டரி அனுப்பி தன் அரைசதத்தை நிறைவு செய்தார் யுவராஜ். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய வீரர் ஒருவரின் அதிவேக அரை சதம் என்ற சாதனையையும் படைத்தார். 

யுவராஜ் சிங்

யுவராஜின் ஷாட்டை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மட்டும் எனெர்ஜி கிடைக்கவில்லை. கோலிக்கும் உற்சாகம் கரைபுரண்டது. ஒன்றிரண்டு ரன்களாக எடுத்துக் கொண்டிருந்த மனுஷன் வெறியேற்றிக் கொண்டு பவுண்டரிகளை விளாச ஆரம்பித்தார். இந்திய அணியின் ரன் ரேட் விர்ரென எகிறியது. கடைசி ஓவரில் பாண்டியாவின் அந்த மூன்று சிக்ஸர்கள் பாகிஸ்தான் பவுலர்களை மனரீதியாக தளர்வுறச் செய்தது. யுவராஜ் வருவதற்கு முன்பாக 14 ஓவர்களில் 55 ரன்கள் குவிந்திருந்த இந்திய அணி, கடைசி நான்கு ஓவரில் 72 ரன்கள் விளாசியது. என்னவொரு விந்தை! 

யுவராஜ் இந்தியாவின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர். இதுவரை ஐசிசி நடத்திய உலகக்  கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அதிகமுறை 'மேன் ஆஃப் தி மேட்ச்' விருதை ஜெயித்தது சச்சின் டெண்டுல்கர்தான். அவர் பத்து முறை வென்றுள்ளார். அதில் ஒரு மகுடமாக 2003 உலகக் கோப்பையில் 'மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்' விருதையும் வென்றுள்ளார்.

ஐசிசி தொடர்களில் யுவராஜ்,  ‛மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது ஜெயிப்பது இது ஒன்பதாவது முறை. இந்தியா உலகக் கோப்பையை வென்ற 2011-ல் யுவிதான் 'மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்'.  "22 ஆண்டுகள்  இந்தியாவை தோளில் சுமந்தவர் சச்சின் டெண்டுல்கர். இப்போது அவரை நாங்கள் தோளில் சுமக்க வேண்டிய தருணம்" என ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் கோலி. அதுதான் நிதர்சனம். சச்சினுக்கு அடுத்தபடியாக அதிகமுறை தோளில் சுமந்திருப்பவர் யுவராஜ்தான். 

அவருக்கு புற்றுநோய் வந்தது, 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டி போன்ற கடுமையான சோதனை காலங்கள் வந்துபோனது. இன்னமும் அவருக்கு பல சோதனைகள் வரலாம். ஆனால் வரலாறு  அவர் சோதனைகளை  முறியடித்து சாதனைகள் படைத்த கதைகளை நம் அடுத்த சந்ததியினருக்குச் சொல்லும். 140 கோடி மக்களை மட்டுமல்ல, இன்னுமொரு 140 கோடி மக்களுக்கும் அவர் எனெர்ஜி டானிக்காக இருப்பார். அவரது சாதனைகள் பாடமாகும். ஏனெனில் "Once a Champion always a Champion."