வெளியிடப்பட்ட நேரம்: 22:03 (05/06/2017)

கடைசி தொடர்பு:22:03 (05/06/2017)

#ChampionsTrophy- பாகிஸ்தான் ஆட்டம் குறித்து பொங்கித் தள்ளிய அப்ரிடி!

நேற்று இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து சரமாரியாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி.

Afridi

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது அதிரடி பேட்டிங்கிற்கும் லெக்-ஸ்பின் பௌலிங்கிற்கும் பெயர் போன அப்ரிடி, அவர் தலைமையில் பாகிஸ்தானுக்கு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை ஒன்றையும் வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த இமாலய வெற்றியை அடுத்து அப்ரிடி, 'இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஒரு போட்டி நடக்கிறது என்றால், நம்மை அறியாமல் ஒரு ஆர்வம் தொற்றிக் கொள்ளும். ஆனால் எதிர்பார்ப்புகளைத் தகர்த்தெறிவது போல்தான் நேற்றைய போட்டி அமைந்தது. ஒரு பாகிஸ்தான் ஆதரவாளராக இந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இந்தியா முதலிலிருந்தே போட்டியை வெல்வது போல்தான் ஆடியது. கடைசி வரையிலும் அதை அப்படியே தக்கவைத்துக் கொண்டது.

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் அஹ்மத், மிகவும் முக்கியமான போட்டியின் டாஸை வென்றார். ஆனால், அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மிகவும் மோசமான ஆட்டத் திட்டம், சுமாரான திறன் வெளிப்படுத்தல், மட்டமான ஃபீல்டிங் என அனைத்தையும் ஒன்று சேர்ந்து ஆட்டத்தைப் பாகிஸ்தானிடமிருந்து நழுவச் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஒரு அணி 319 ரன்கள் எடுக்கிறதென்றால், அது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகத்தான் இருக்கும். ஆனால், இரண்டாவதாக விளையாடிய அணி 164 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகிறது என்றால், அதைச் சமாளிக்க எந்தக் காரணமும் கூற முடியாது' என்று அப்ரிடி பாகிஸ்தானை வறுத்தெடுத்துவிட்டார்.