'நான் திணறினேன்... யுவராஜ் கலக்கினார்!'- கேப்டன் கோலி ஓபன் டாக்


நேற்று இந்தியாவுக்கும் அதன் 'பரம எதிரியான' பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், அனைவரும் எதிர்பார்த்தது போல், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி கெத்து காட்டியது. 

Kohli


இந்திய அணி 319 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியடைந்தது. இதில் குறிப்பாக, இந்திய அணியின் எந்த பேட்ஸ்மேன்களும் சதம் அடிக்கவில்லை. மாறாக, களமிறங்கிய ஐந்து பேரில் நான்கு பேர் அரை சதம் அடித்தனர். அதுவும் கம்-பேக் கொடுத்த யுவராஜ் சிங், 32 பந்துகளுக்கு 52 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அணிக்கு அழுத்தம் இருந்த சமயத்தில் யுவராஜ் விளையாடியதுதான், வெற்றிப் பாதைக்கு இந்தியாவை நகர்த்தியது.


இந்நிலையில் யுவராஜின் அதிரடி ஆட்டம் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, 'நான் 40 ரன்கள் எடுக்கும் வரை அடித்து ஆடவில்லை. அதற்குள்ளாகவே மழை காரணமாக நான்கு முறை பெவிலியனுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறை மைதானத்துக்கு வரும்போதும், பழையபடி விளையாடுவது கடினமாக இருந்தது. ஆனால் யுவராஜ், என் மீதிருந்த அழுத்தத்தை இலகுவாக்கினார். 
அதுவும் அவர் விளையாடிய விதம் இருக்கிறதே... யார்க்கர் போல் வரும் பந்துகளை கூட சிக்ஸர் நோக்கி பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.

அது பாகிஸ்தானியர்களை கொஞ்சம் கலக்கமடையத்தான் செய்தது. என் மீதிருந்த அழுத்தம் இதனால் முழுவதுமாக எடுக்கப்பட்டது. அவர் அவுட்டான உடன், நான் அடித்து ஆட ஆரம்பித்தேன். ஆனால், அவரது ஆட்டம் தான் போட்டியின் போக்கையே மாற்றியது. அவர் இப்படி விளையாடினால், அணி வெற்றி பெறுவது நிச்சயம். ஐந்தில் மூன்று முறை யுவராஜ் இதைப் போல விளையாடி அசத்துகிறார்.' என்ற யுவராஜ் சிங்குக்கு புகழாரம் சூட்டினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!