வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (06/06/2017)

கடைசி தொடர்பு:05:36 (07/06/2017)

விராட் கோலி அறக்கட்டளை நிகழ்ச்சியில் மல்லையா!

'இந்திய அணியை உற்சாகப்படுத்தும்விதமாக, அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் நேரில் சென்று பார்க்கத் திட்டமிட்டுள்ளேன்' என்று கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய்மல்லையா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


வங்கிகளிடம் வாங்கிய சுமார் 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு  தப்பியோடினார். அவருக்கு பலமுறை பிடிவாரன்ட் பிறப்பித்தும் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், ஞாயிறன்று எட்ன்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை அவர் பார்த்தார். அவருடைய வருகை, உலக அளவில் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.

தற்போது, இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், 'இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் பார்த்ததை ஊடகங்கள் பெரிய அளவில் செய்தியாக்கின. இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில், அனைத்துப் போட்டிகளையும் நான் நேரில் சென்று பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். விராட் கோலி ஒரு உலகத் தரம் வாய்ந்த கேப்டன். வாழ்த்துகள் விராட்கோலி' என்று பதிவிட்டுள்ளார்.

லண்டன் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, அவருடைய தொண்டு நிறுவனம் சார்பில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவிற்கு இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு விஜய்மல்லையாவும் காரில் வருகை தந்திருந்தார்.