வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (07/06/2017)

கடைசி தொடர்பு:20:17 (07/06/2017)

குரூப் 'ஏ' வில் அரை இறுதிக்குத் தகுதிபெறப்போவது யார் ? #ChampionsTrophy

சாம்பியன்ஸ் டிராபி பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளில் மழை தன் கைவரிசையைக் காட்டியதால், சில அணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சரி, குரூப் 'ஏ'-வில் எந்தெந்த அணிகள் அரை இறுதிக்குச் செல்லும், ஒவ்வோர் அணிக்கும் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது என  நிறைய முடிவுகள் வர வாய்ப்பு இருப்பதால், கட்டுரையைச் சற்றே பொறுமையாகப் படிக்கவும்.

முதலில் குரூப் - ஏ-வின் தற்போதைய  நிலையை இந்தப் படத்தில் பார்ப்போம்:

Group A  அரையிறுதி

குரூப் ஏ-வில் இனி நடக்கவுள்ள போட்டிகள்:

நியூசிலாந்து Vs வங்கதேசம்         - 09 / 06 /2017

ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து - 10 /06 /17

1. இங்கிலாந்து :

முதல் அணியாக செமி ஃபைனலுக்குள் நுழைந்திருக்கும் இங்கிலாந்து அணி, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தியிருக்கிறது. வரும் சனிக்கிழமையன்று ஆஸ்திரேலிய அணியைச் சந்திக்கவுள்ளது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இங்கிலாந்துக்குப் பாதகமில்லை. குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இப்போதைக்கு முதல் இடத்தில் உள்ளது. நல்ல ரன்ரேட்டும் இருக்கிறது (1.069). ஆஸ்திரேலியாவை வென்றால் முதல் இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி மழையால் கைவிடப்படாலும், இங்கிலாந்து தன் குரூப்பில் முதல் இடம் பிடிக்கும். 

ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் குறைவான ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 45 ஓவர்கள் வரை போட்டி நீடித்துத் தோற்றாலோ பிரச்னை இல்லை. நல்ல ரன்ரேட் என்பதால், இரண்டு அணிகள் நான்கு புள்ளிகள் பெற்றிருந்தாலும் இங்கிலாந்து முதல் இடத்தில்தான் இருக்கும். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை  நூறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ, 35 ஓவர்களுக்குள் சேஸிங்கை முடித்து ஜெயித்தலோ புள்ளிப்பட்டியலில் மாற்றம் நிகழலாம்.  இங்கிலாந்து இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்படக்கூடும். புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தால், குரூப் பி-யில் முதல் இடத்தைப் பிடிக்கும் வலுவான அணியோடு அரை இறுதியில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

2.  வங்கதேசம் :

முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நிச்சயம் தோல்வியடைந்திருக்க வேண்டும். ஆனால், மழையால் தப்பித்தது. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் ஒரு புள்ளி வங்கதேசத்துக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது  மூன்றாம் இடத்தில் இருக்கிறது வங்கதேசம். வங்கதேசத்துக்குப் பிந்தைய இடத்தில் இருக்கிறது நியூசிலாந்து. 

வங்கதேசத்துக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன. நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் நியூசிலாந்தை ஜெயித்தால், வங்கதேசம் இரண்டு புள்ளிகள் பெறும். ஆக, மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும். சனிக்கிழமையன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் நடந்தால் வங்கதேசம் 'குரூப் - ஏ'விலிருந்து அரை இறுதிக்குச் செல்லும்.

வங்கதேசம், நியூசிலாந்தை வென்றுமுடித்தபிறகு... இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால், வங்கதேசம் தொடரிலிருந்து வெளியேறவேண்டியதுதான். ஏனெனில், அப்போது வங்கதேசம் மூன்று புள்ளிகளும், ஆஸ்திரேலியா நான்கு புள்ளிகளும் பெற்றிருக்கும்.

வங்கதேசம் - நியூசிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டாலும், வங்கதேசத்துக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வென்று, ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் வங்கதேசத்தின் ரன்ரேட்டைவிட சரிந்தால் வங்கதேசம் செமி ஃபைனல் செல்லும்.

வங்கதேசம்

ஒருவேளை நியூஸி-யை வென்று, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டால் ஆஸ்திரேலியாவும் வங்கதேசமும் மூன்று புள்ளிகளுடன் இருக்கும். அப்போதைய நிலைமையில் ரன்ரேட் பார்க்கப்படும். வங்கதேசத்தின் தற்போதைய ரன்ரேட்( -0.407). ஆஸ்திரேலியாவின் ரன்ரேட்( 0). ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஒரு புள்ளி கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், ரன்ரேட்டில் மாற்றம் இருக்காது. வங்கதேசம் நியூசிலாந்து அணியுடன் வென்று மைனஸ் ரன்ரேட்டிலிருந்து ப்ளஸ் ரன்ரேட்டுக்கு வர வேண்டும். அப்போதுதான் வங்கதேசம் அரை இறுதிக்குத் தகுதி பெற முடியும். நியூசிலாந்துடன் வென்று மைனஸ் ரன்ரேட்டிலேயே வங்கதேசம் இருந்தால், நிச்சயம் தகுதிபெற முடியாது. ஒரு வெற்றி பெற்றும் வங்கதேசம் வெளியேறும். ஒரு வெற்றிகூட பெறாத ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் செல்லும்.

ஒருவேளை  நியூசிலாந்திடம் வங்கதேசம் தோற்றுவிட்டால், வெறும் ஒரு புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து, தொடரிலிருந்து வெளியேறும். இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால், வந்தேசம் மூன்றாவது இடத்தில் இருக்கும். ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் சென்றுவிடும்.

நியூசிலாந்து :

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் வெற்றியை நோக்கிப் பயணித்தது நியூசிலாந்து. அந்தப் போட்டியில் மழை வரவே போட்டி கைவிடப்பட்டு, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது நியூசிலாந்துக்குப் பெரும்பின்னடைவாகிப்போனது. இங்கிலாந்துடனான போட்டியிலும் சேஸிங்கில் ஒருகட்டத்தில் நல்ல நிலைமையிலிருந்தது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் அவுட் ஆன பிறகு, மற்ற வீரர்களும் பெவிலியனுக்குப் படையெடுத்ததால் படுதோல்வி அடைந்தது. 

நியூஸி-க்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. வங்கதேசத்துக்கான அதே நிலைமைதான் நியூசிலாந்துக்கும். 9 ஆம் தேதி நடக்கும் போட்டியில் வங்கதேசத்தை வென்றால்தான் நியூசிலாந்து, அரை இறுதி வாய்ப்பைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியும். வங்கதேசத்தை வென்றாலும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதற்காகக் காத்திருக்க வேண்டும். இரண்டு முடிவுகளும் சுபமாக அமைந்தால், மூன்று புள்ளிகளுடன் அரை இறுதிக்குச் செல்லும் நியூசிலாந்து.

நியூசிலாந்து அணி

வங்கதேசம் - நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டால், நியூசி. ஒரு  புள்ளிபெறும். இப்போது இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தாலும் வங்கதேசத்துக்குக் கிடைத்ததுபோல ஒரு வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில், நியூசிலாந்து வங்கதேசத்தைவிட ரன்ரேட் அடிப்படையில் பின்தங்கியிருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து, ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தைவிட ரன்ரேட்டில் பின்தங்கினாலும்கூட அரை இறுதிக்குச் செல்லமுடியாது நியூசி. இப்படியொரு நிலைமையில் ஆஸ்திரேலியா கடைசி இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தையும் பிடிக்கும். வங்கதேசம் அரை இறுதிக்குச் சென்றுவிடும். 

வங்கதேசத்துடனான போட்டியில் வெற்றி கிடைத்து, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டால்,  இன்னொருவிதமான முடிவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நியூசிலாந்து வங்கதேசத்தை அபாரமாக வென்று ப்ளஸ் ரன்ரேட்டில் இருந்தால், மூன்று புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளில் இருந்து நியூசி. அரை இறுதிக்குச் செல்லும். ஒருவேளை வங்கதேசத்தை வென்றாலும் ரன்ரேட் மைனஸில் இருந்தால், ஒரு வெற்றிகூட பெறாத ஆஸ்திரேலியா செமி ஃபைனலுக்குச் செல்லும். நியூசிலாந்து தனது பிரிவில்  மூன்றாம் இடத்தைப் பிடிக்கும்.

வங்கதேசம் - நியூசிலாந்து  போட்டியும் மழையால் கைவிடப்பட்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியும் மழையால் கைவிடப்பட்டால்,  நியூசிலாந்து அரை இறுதிக்குத் தகுதிபெற முடியாது. வங்கதேசத்துடனான போட்டியில் தோற்றால் அப்போதே அரை இறுதியிலிருந்து வெளியேறவேண்டியதுதான்.

ஆஸ்திரேலியாவுக்கு என்ன நிலைமை? 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை வென்றால், எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. நேரடியாக  அரை இறுதிக்குச் செல்லும். 

மறைமுக வாய்ப்புகள் :

1.   வங்கதேசம் Vs நியூசிலாந்து  - மழையால் டிரா 

  ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  - இங்கிலாந்து வெற்றி 

- இப்படியொரு சூழ்நிலையில் வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளும் பெற்றிருக்கும். ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் இப்போதைக்கு மற்ற இரண்டு அணிகளையும்விட நன்றாக இருக்கிறது. இங்கிலாந்துடன் படுதோல்வி அடைந்தும் வங்கதேசத்தைவிட ரன்ரேட் அதிகமாக இருந்தால் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் செல்லும். 

ஒருவேளை வங்கதேசத்தைவிட ரன்ரேட் சரிந்தால் மூன்றாவது இடத்துக்கும், நியூசிலாந்தைவிட ரன்ரேட் சரிந்தால் நான்காவது இடத்துக்கும் ஆஸ்திரேலியா தள்ளப்படும். 

2. வங்கதேசம் Vs நியூசிலாந்து  - மழையால் டிரா 

   ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  -  மழையால் டிரா 

இப்படியொரு சூழ்நிலை வந்தால் ஆஸ்திரேலியா மூன்று புள்ளிகள்பெறும். மற்ற இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகளில் இருக்கும். ஆஸ்திரேலியா அரை இறுதிக்குச் செல்லும்.

3. வங்கதேசம் Vs நியூசிலாந்து  -   வங்கதேசம் வெற்றி 

   ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  -  மழையால் டிரா 

இந்தச் சூழ்நிலையில் வங்கதேசம், ஆஸ்திரேலியா இரண்டும் மூன்று புள்ளிகளில் இருக்கும். வங்கதேசம் நியூசிலாந்தை வென்று ப்ளஸ் ரன்ரேட்டுக்குச் செல்லவில்லையெனில், ஆஸ்திரேலியா அரை இறுதிக்குத் தகுதிபெறும். 

4. வங்கதேசம் Vs நியூசிலாந்து  -   நியூசிலாந்து  வெற்றி 

  ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து  -  மழையால் டிரா 

இந்தச் சூழ்நிலையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா இரண்டும் மூன்று புள்ளிகளில் இருக்கும். நியூசிலாந்து, வங்கதேசத்தை வென்று ப்ளஸ் ரன்ரேட்டுக்குச் செல்லவில்லையெனில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குத் தகுதிபெறும். நியூசிலாந்து  ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கியுள்ளதால் வங்கதேசத்தை 120 ரன்கள் வித்தியாசத்திலோ, 30 -35 ஓவர்களில் சேஸிங் செய்தோ வென்றால் மட்டுமே ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு பாதிக்கப்படும். 


டிரெண்டிங் @ விகடன்