வெளியிடப்பட்ட நேரம்: 04:02 (08/06/2017)

கடைசி தொடர்பு:12:39 (08/06/2017)

#PAKvSA : டிவில்லியர்ஸ் கோல்டன் டக்... வாழ்வா சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி!

மினி உலகக் கோப்பை என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியின் 8-வது எடிஷன், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் உலகின் டாப்-8 அணிகள், இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல்கட்ட லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதிக்குள் செல்லும் வகையில், அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தத் தொடங்கியுள்ளன. இதில், தாம் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று, முதல் ஆளாக இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது.

நேற்று மாலை துவங்கிய போட்டியில், குரூப் - பி பிரிவைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் எட்ஜ்பாஸ்டனில் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களையே அடித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அந்த அணியின் டேவிட் மில்லர் தனிநபராகப் போராடி, அதிகபட்சமாக 75 ரன்களை அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்களையும், ஜுனைத் கான் மற்றும் இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், 27 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 119 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டது. எனவே, டக்வொர்த் லூயிஸ் முறை பின்பற்றப்பட்டது. 27 ஓவர்களில் தென் னாப்பிரிக்கா 100 ரன்களையே எடுத்திருந்தது. ஆனால் பாகிஸ்தான், அதைவிட 19 ரன்களைக் கூடுதலாக அடித்திருந்ததால், அந்த அணியே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆக, ODI கிரிக்கெட் ரேங்கிங்கில் முதலிடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்காவை, 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் வீழ்த்தி, UnPredictable Team என்கிற தனது பட்டப்பெயரை நியாயப்படுத்தியிருக்கிறது.

தென்னாப்பிரிக்கா தரப்பில், மோர்னே மோர்கல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில், கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவில்லியர்ஸ், கோல்டன் டக்கில் வெளியேறினார்; அதாவது, தான் சந்தித்த முதல் பந்திலேயே, அவர் தனது விக்கெட்டை இழந்து அவுட் ஆனார். தனது கிரிக்கெட் வாழ்வில் டிவில்லியர்ஸ், கோல்டன் டக் ஆவது இதுவே முதல் முறை. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் டிவில்லியர்ஸின் இந்த (வே)சாதனை, போட்டியைக் கண்டுகொண்டிருந்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்திய பிறகு, 2013 தொடரில் தோல்விகளையே சந்தித்த பாகிஸ்தானுக்கு, இந்தத் தொடரில் பெற்ற முதல் வெற்றி, தோல்விக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது.

PHOTO COURTESY - ICC

நீங்க எப்படி பீல் பண்றீங்க