வெளியிடப்பட்ட நேரம்: 06:33 (08/06/2017)

கடைசி தொடர்பு:08:16 (08/06/2017)

#INDvSL அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா... இன்று இலங்கையுடன் மோதல்..!

 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இன்று நடக்கும் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

 

India


சாம்பியன்ஸ் டிராபி தொடர், ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. குரூப் - பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. எப்போதும் அனல் பறக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் போல இல்லாமல், பாகிஸ்தான் அணியை எளிதில் வென்றது இந்தியா.


அதேநேரத்தில், தென்னாப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இலங்கை தோற்றது. இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,  இலங்கை அணியுடன் மோதுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்... 50 ஓவர்களில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக, இலங்கை அணியின் தற்காலிக கேப்டனான உபுல் தரங்கா, இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

இதனால், காயம் காரணமாக விலகியிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ், இந்தப் போட்டியில் மீண்டும் இலங்கையின் கேப்டனாகக் களமிறங்க உள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை, இன்றைய போட்டியில் வென்றால், குரூப் -பி பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையைப் பெறும். அடுத்த போட்டி வலுவான தென்னாப்பிரிக்கா அணியுடன் என்பதால், அப்போது எந்த நெருக்கடியும் இல்லாமல் களமிறங்கவே இந்தியா விரும்பும்.


தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள், தலா ஒரு வெற்றியையும் தோல்வியையும் பதிவுசெய்துள்ளன. எனவே, இந்தத் தொடரில் தங்களது இருப்பைத் தக்கவைக்க, இலங்கை இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதனால், பலமான இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெறுவதற்காக, இலங்கை கடுமையாகவே போராட நேரிடும். 


இந்திய அணித் தேர்வைப் பொறுத்தவரை, மைதானத்துக்குத் தகுந்தாற்போல வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது சமி ஆகியோர் இடம் பெறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.