வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (08/06/2017)

கடைசி தொடர்பு:15:10 (08/06/2017)

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற விராட் கோலி!

அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 89-வது இடம் பிடித்துள்ளார்.

கோலி

அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது, 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை. 21 நாடுகளைச் சேர்ந்த 11 வகை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை, ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. இந்தப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 89-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  இவர், 22 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பிடித்த ஒரே வீரர், விராட் கோலி.

ஆண்டுக்கு 93 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 2-வது இடத்தையும், கால்பந்து வீரர் மெஸ்ஸி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மகளிர் டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ், 51-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே வீராங்கனை இவர் மட்டும்தான். செரினாவின் ஆண்டு வருமானம், 27 மில்லியன் டாலர்கள்.