வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (08/06/2017)

கடைசி தொடர்பு:10:52 (09/06/2017)

183*, ஹெலிகாப்டர் ஷாட், அரை சதம் - இலங்கை என்றாலே குஷியாகிறாரா தோனி? #Statistics

சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கையுடன் இன்று விளையாடி வருகிறது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக ஆடி 321 ரன்களைக் குவித்திருக்கிறது. ரோஹித் ஷர்மா - தவான் இணை அருமையாக விளையாடியது. ரோஹித் அரை சதம் எடுத்தார். இலங்கைக்கு எதிராக அவர் ஆயிரம் ரன்களைக் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 78 ரன்களுக்கு அவுட் ஆனார். 

கோலி களம் புகுந்தவுடன் ஆராவாரம் எழுந்தது. ஆனால் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். பாகிஸ்தானை புரட்டி எடுத்த யுவராஜ் இன்று அடக்கி வாசித்தார். அவர் வெளுத்துக் கட்ட ஆரம்பிக்கும் முன்னரே பெவிலியன் அனுப்பி வைத்தார் அசேலா குணரத்னே. தோனி களமிறங்கியதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அவர் தவானுடன் இணைந்து அசத்தலாக ஆடினார்.

தவான் சதமும், தோனி அரை சதமும் கடந்தனர். 46 பந்துகளில் அரை  சதமடித்திருந்தார் தோனி. கடைசி ஓவரில் தோனி அவுட் ஆனார். அவர் 52 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 63 ரன்களை எடுத்தார். கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் அதிரடி சிக்ஸர், பவுண்டரிகள் விளாச ஸ்கோர் 320ஐ கடந்தது.

தோனி

இன்று தோனி அடித்த அரை சதத்தின் மூலம் ஒரு புது சாதனை நிகழ்ந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், சயீத் அன்வர் ஆகியோருக்கு அடுத்தபடியாக  இலங்கைக்கு எதிராக அதிக முறை ஐம்பது ரன்களுக்கும் மேல் எடுத்த பெருமைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார். இதுவரை சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 25 முறை  இலங்கைக்கு எதிராக 50 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். சயீத் அன்வர் 20 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவரைத்தொடந்து இன்சமாம் உல் ஹக்கும், தோனியும் 18 முறை இலங்கைக்கு எதிராக ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். 

டாப் 3-ல் தற்போது கிரிக்கெட் ஆடுபவர் தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சரி சச்சின் டெண்டுல்கர், தோனி இருவரும் இலங்கைக்கு எதிராக  இதுவரை எப்படி விளையாடி வந்துள்ளனர் என்பதை பார்ப்போமா? 

சச்சின் டெண்டுல்கர் -  இலங்கைக்கு எதிராக 

போட்டிகள் -  84

இன்னிங்ஸ் - 80

ரன்கள் -  3113

அதிகபட்சம் - 138

சராசரி -  43.84 

ஸ்ட்ரைக் ரேட் - 87.54

சதம் -  8

அரை சதம் - 25 

மேன் ஆப் தி மேட்ச் -  6

 

மகேந்திர சிங் தோனி  -  இலங்கைக்கு எதிராக 

போட்டிகள் - 58

இன்னிங்ஸ் - 47

ரன்கள் -  2149

அதிகபட்சம் -  183*

சராசரி - 61.40

ஸ்ட்ரைக் ரேட் -  91.21 

சதம் - 2

அரை சதம் -  17 

மேன் ஆப் தி மேட்ச் - 6

2005-ல் தோனி இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் விளாசியதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 2011 உலக கோப்பையில் அவர் அடித்த அபாரமான அரை சதமும், அந்த ஹெலிகாப்டர் ஷாட்டும் இன்னமும் கண்களுக்குள் இருக்கின்றன. இப்போதும் இலங்கைக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார் தோனி. ஒவ்வொரு வீரர்கள் ஒவ்வொரு நாட்டுக்கு எதிராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் இலங்கையின் பவுலிங்கை நொறுக்கித் தள்ளுவதில் தோனி டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்.