வெளியிடப்பட்ட நேரம்: 23:16 (08/06/2017)

கடைசி தொடர்பு:08:20 (09/06/2017)

#INDvSL இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது இலங்கை..!

சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட்டில், இந்தியாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை.

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், குரூப்-பி பிரிவில் இன்று நடந்த போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி, பௌலிங்கைத் தேர்வுசெய்தது. இதையடுத்து, தனது இன்னிங்ஸை நிதானமாக ஆரம்பித்த இந்தியா, பிற்பாதியில் அதிரடி காட்டியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான், 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். தோனி அதிரடியாக விளையாடி, 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் வேகமெடுக்க உதவினார். ரோகித் ஷர்மாவும் 79 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 321 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. 

இதைத் தொடர்ந்து, 322 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது.  48.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குஷால் மெண்டிஸ் 89, குணதிலகா 34 ரன்கள் எடுத்தனர். மேத்யூஸ் 52, குணரத்னே 34 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட்டில், அதிகபட்ச ஸ்கோர் சேஸ் இதுதான். 

ஐசிசி தொடரில் 300+ ரன்கள் எடுத்து, இந்தியா தோற்பதும் இதுவே முதல்முறையாகும்.