வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (09/06/2017)

கடைசி தொடர்பு:17:47 (09/06/2017)

'என்னைத் திணறடித்த பந்துவீச்சாளர்..’-தோனியின் ‘பளிச்’ பதில்!

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் தான் சந்தித்த கடினமான பந்துவீச்சு குறித்தும், கடினமான பந்துவீச்சாளர் குறித்தும் பதிலளித்துள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

தோனி

வெற்றி பெற்றால் மகிழ்ச்சி,  தோற்றால் வருத்தம் அடைவது  சாதாரண மனிதனின் இயல்பு. இதனை மாற்றி எந்தநிலையிலும் நிதானமாகச் செயல்படுபவர்களே சிறந்த தலைவர்களாக மாறுவார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி. உலகமே கண்டு நடுங்கிய முதல் வரிசை ஆட்டக்காரர். மூன்றாவது வீரராக களமிறங்கி பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிடும் அதிரடி ஆட்டக்காரர். எந்த நிலைக்குச் சென்றாலும் தனது சராசரியை 50க்கு மேலாக வைத்திருக்கும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

இவ்வாறு தோனியில் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பவுலர், ஒரு விக்கெட் கீப்பர், ஒரு கேப்டன் எனப் பல உருவகங்களைக் காணலாம். தனது ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் மைதானத்தையே அதிரவைத்தவரையும், ஒரு பவுலர் அதிர வைத்துள்ளார். இதுகுறித்து தோனி கூறும்போது, ‘எல்லா வேகப்பந்து வீச்சாளர்களுமே எனக்கு கடினமானவர்கள் தான். என்னிடம் உள்ள குறைந்தபட்ச பேட்டிங் நுட்பங்களுடன் வேகப்பந்து வீச்சாளர்களைச் சந்திப்பது கடினம். ஆனால், குறிப்பிட்டு ஒருவரை சொல்ல வேண்டுமானால், அது சோயப் அக்தர் தான்’ என்று குறிப்பிட்டார் தோனி.

மேலும் தோனி கூறுகையில், ‘மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விடுத்து நான் சோயப் அக்தரை குறிப்பிட்டதற்கான காரணம், அவர் வேகமானவர், பவுன்சரும் வரும் யார்க்கரும் வரும், திடீரென பீமரும் எகிறும்’ என அக்தர் குறித்து மனந்திறந்து பாராட்டியுள்ளார் தோனி.

இதுவரையில் தோனி- அக்தர் இணைந்து 10 சர்வதேச போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும், சில ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.