வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (09/06/2017)

கடைசி தொடர்பு:08:17 (10/06/2017)

எந்தத் தருணத்தில் இலங்கையிடம் வெற்றியை இழந்தது இந்தியா? #MatchAnalysis

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியை வென்றுள்ளது இலங்கை. இந்தியாவுக்கு இது அதிர்ச்சித் தோல்வி. இந்திய அணி  இலங்கையுடன் தோல்வி அடையும் என  கோலி மட்டுமல்ல இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூட நினைத்திருக்க மாட்டார். நேற்று முன்தினம் தர வரிசைப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இடம்பெற்றிருக்கும் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்காவை தோற்கடித்தது. நேற்று ஆறாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி வலுவான இந்தியாவை தோற்கடித்தது. அதுதான் கிரிக்கெட். எந்த நாள் யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக மாறலாம். அதனால்தான் இந்தியாவும் ஒரு நாள் உலக கோப்பையை வெல்லும் என 1983-க்கு பிறகு 22 வருடம் இந்திய ரசிகர்கள் காத்திருந்தார்கள். நாங்களும் ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்க முடியும் என நம்பிக்கையோடு 27 வருடமாக காத்திருக்கிறார்கள் தென் ஆப்ரிக்க ரசிகர்கள். எங்களால் தொடர்ந்து பல கோப்பைகளை வெல்ல முடியும் என நம்புகின்றனர் ஆஸ்திரேலிய ரசிகர்கள். 

2002 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த  நாட்வெஸ்ட் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 325 ரன்களை சச்சின், கங்குலி என சீனியர்கள் கைவிட்ட பின்னர் யுவராஜ், கைஃப் என இளம் வீரர்கள் தோள் தந்து வெற்றிபெற வைத்தனர். வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அந்த வெற்றி இந்திய அணியின் தோல்விப்  பாதையை அடியோடு மாற்றியது. இதோ இலங்கைக்கு அப்படியொரு அற்புதமான விஷயத்துக்கு உந்துதலான ஒரு நிகழ்வு  நடந்திருக்கிறது. நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் 321 ரன்களை பதற்றப்படாமல் சேஸ் செய்திருக்கிறது. இது சங்கக்காரா, ஜெயவர்த்தனே, தரங்கா என சீனியர்கள் இல்லாத அணி. நிச்சயம் இது பெரிதும்  பாராட்டத்தக்க வெற்றி. 

சரி இந்தியா எங்கே கோட்டை விட்டது? 

டாஸ்  தோற்றபோதே இந்தியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. நேற்று மழை பெரியளவில் வரும் என சொல்லப்பட்டிருந்தது. அதை நம்பி சேஸிங் எடுத்திருந்தார் இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ். மலிங்கா முதல் பந்தையே வெகு சுமாராக வீசினார். அதை விவேகமாக பவுண்டரி விளாசி இன்னிங்க்ஸை ஆரம்பித்தார் ரோஹித் ஷர்மா. முதல் பந்தில் பவுண்டரி அடித்த அந்த நிகழ்வு சேவாக்கை நினைவுபடுத்தியது. நேற்று பிட்சில் பெரிய அளவில் ஈரப்பதம் இல்லை. அதே சமயம் வறண்ட பிட்சாகவும் இல்லை. இதனால் இந்தியாவில் உள்ள பேட்டிங் பிட்ச் போல காட்சியளித்தது.

மலிங்காவோ, லக்மலோ நல்ல பந்துகளை வீசவேயில்லை. பந்துகள் பவுன்ஸ் ஆகாததால் தவானும் ரோஹித்தும் தப்பித்தனர். அவர்களுக்கு ரன்கள் குவிப்பது எளிதாக இருந்தது. திசேரா பெரேராவாலும் எதுவும் செய்ய முடியவில்லை. நேரம் செல்லச்செல்ல மைதானத்தில் பந்துகள் மெதுவாக வர ஆரம்பித்தன. மலிங்கா பந்தில் சிக்ஸர் அடித்த கையோடு அவுட் ஆனார் ரோஹித். கோலியை எரிச்சல்படுத்தும் விதமாக  ஒரு யுக்தியை கையாண்டார் மேத்யூஸ்.

MALINGA

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை  கையாளுவதில் கோலி  தேர்ந்தவர் அல்ல. இங்கிலாந்து வீரர்கள் இந்த யுக்தியைத் தான் கோலிக்கு எதிராக பயன்படுத்துவார்கள். மேத்யூஸ் அதே  யுக்தியை பயன்படுத்தி பிரதீப்பிடம் ஒரு புத்திசாலித்தனமான லெந்த்தில் பந்து வீசச் சொன்னார். அவர்கள் பொறியில் சிக்கினார் விராட். டக் அவுட்!  யுவராஜ் மெதுவாக வரும் பந்துகளை கையாளுவதில் சுமார் ரகம் தான். பிட்ச் தனக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்தார் யுவி.

இந்த சூழ்நிலையில் புத்திசாலித்தனமாக குணதிலகாவை பயன்படுத்தினார் மாத்யூஸ். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அவர் தனது ஓவருக்கு சராசரியாக ஐந்து ஆறு ரன்களுக்கு மேல் விக்கெட் தரவில்லை. யுவராஜ் - தவான் இருவரும் மந்தமாக ஆடினார்கள். குறிப்பாக தவான் இத்தகைய கட்டத்தில் கூடுதல் வேகம் காட்டியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை. குணாதிலகாவை போலவே  அசேலா குணரத்னேவும் ரன்களைக் கட்டுப்படுத்தினர். யுவியின் விக்கெட்டையும் தகர்த்தார். அதன் பின்னர் தோனி களம் புகுந்தார். 

இந்தியா - இலங்கை போட்டியில் தோனி

அவர் ரஞ்சி போட்டிகளில் விளையாடி பழகிய பிட்ச் போலவே  இருந்ததை உணர்ந்தவுடன் அதிரடியாக ஆட முடிவெடுத்தார். பந்துகள் பவுன்ஸ் ஆகாது என்பதை  தெரிந்து கொண்டு ஒரு கட்டத்தில் ஹெல்மெட்டையும் கழட்டிவிட்டு பேட்டிங் செய்தார். தவான் - தோனி நல்ல இன்னிங்ஸ் ஆடினர். கேதர் ஜாதவ் இறுதிக்கட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத் தந்தார். இந்தியா 321 ரன்களை குவித்தது. முப்பது ரன்கள் குறைவாக இருப்பது போல தெரிந்தாலும் இலங்கையின் மோசமான பேட்டிங் மற்றும் இந்தியாவின் அபாரமான பவுலிங்கை கணக்கில் கொண்டு இதுவே போதுமான இலக்கு என நினைத்தனர் ரசிகர்கள்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக  விளாசல் ஆட்டம் ஆடிய டிக்வெல்லாவை  புவனேஷ்வர் எளிதில் வெளியேற்றினார். 200 -250 ரன்களில் இலங்கை சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குணதிலகா  ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 7 ஓவர்களில் 22/1  என்ற நிலையில் இருந்தது இலங்கை. எட்டாவது ஓவரை உமேஷ் யாதவ் வீச வந்தார். முதல் பந்தில் ஒரு சிக்ஸர், மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் குணதிலகா. அதன் பின்னர் இலங்கை எந்த இடத்திலும் இந்தியாவுக்கு பிடி கொடுக்கவே இல்லை. இலங்கை அணி  321 எனும் இலக்கை கண்டு பயப்படாமல் பதற்றமடையாமல்  ரன்களை குவித்தது. 

இலங்கை அணி

இந்திய அணி பந்துவீசும்போது சுழலும் இல்லை, நல்ல உயரத்துக்கு பந்துகள்  எழும்பவும் இல்லை. இவை இலங்கைக்குச் சாதகமாக அமைந்தன. எனினும் கோலி பெளலர்கள் மீது அதீத நம்பிக்கையில் இருந்தது போல் தெரிந்தது. ஆரம்பத்திலேயே விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பது குறித்த அக்கறை இல்லை. இந்திய அணியின்  ஃபீல்டிங்கும் மிக சுமாராகவே இருந்தது. 20 வது ஓவரில் நூறாவது ரன்னைக் கடந்த இலங்கை அணி, 26வது ஓவரில் 150 ரன்களை எட்டியது. ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியாவை பிரித்து மேய்ந்தனர் இலங்கை பேட்ஸ்மேன்கள். 

உடனடியாக சுதாரித்த கோலி, கேதர் ஜாதவை அறிமுகப்படுத்தினார். அவர்  சுமாராக வீசினார். அவர் ஓவரில் ரன்கள் வரவில்லை. இதையடுத்து கோலி பந்துவீச வந்தார். அவரது ஓவரில் பெரிய ஷாட்கள் ஆட முடியாமல் தடுமாறினார்கள் இலங்கை வீரர்கள். கோலியின் ஓவரில் உமேஷ் யாதவ் - தோனி இணையின் அபாரமான செயல்பட்டால் ஒரு ரன் அவுட் கிடைத்தது. தேவையே இல்லாமல் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு வீழ்ந்தார் குணதிலகா. கோலி - கேதர் இணை வீசிய ஆறு ஓவர்களில் 35 ரன்கள் வந்தது. முக்கியமான கட்டத்தில் புவனேஷ்வர் பந்தில் குஷால் மெண்டிஸ் 89 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து இரண்டு பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தேவையின்றி அவுட் ஆனதால் இலங்கை ரசிகர்கள் பதறினார்கள். மேத்யூஸ் களமிறங்கினார். ஒரு கேப்டனுக்கே உரிய பொறுப்புடன் விளையாடினார். ஒரு மேட்சை எப்படி வெல்ல வேண்டும் என்ற வித்தை அவருக்குத் தெரிந்திருந்தால் கோலியின் பாச்சா அவரிடம்  பலிக்கவில்லை. மேத்யூஸ் - குஷால் பெரேரா இணை அருமையாக ஆடியது. 33 ஓவர்களில் 196 ரன்களில் இருந்த இலங்கை 43 ஓவர்களில் 271 ரன்களை எடுத்திருந்தது. இந்தியா - இலங்கை என இருவருக்கும் வெற்றி வாய்ப்பு இருந்த சூழ்நிலையில் இந்த பத்து ஓவர்களில் தான் இலங்கைக்கு வெற்றியை தாரை வார்த்தது இந்தியா. 

இலங்கை அணி

புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா என சீனியர் பவுலர்கள் பந்து வீசியும் இந்த பத்து ஓவர்களில் 75 ரன்கள் குவித்தது இலங்கை அணி. இந்தியாவை போலவே  தாழ்வாக வரும் பந்துகளில் பதுங்கிய  இலங்கை  அணியின் பலவீனத்தை கோலி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஜடேஜாவை போலவே  யுவராஜும் அதிக ரன்கள் கொடுக்கக் கூடும் என்பதால் கோலி எடுத்த முடிவு ஒரு வகையில் சரிதான். எனினும் பெரிய ஷாட் விளையாட முடியாத வகையில் பந்து வீசிய கேதர் ஜாதவுக்கு இன்னும் ஓவர்கள் கொடுத்திருக்கலாம். கோலி நேற்று மூன்று ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அவர் கூட இன்னும் இரண்டு ஓவர்களாவது வீசியிருக்கலாம். 

பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லை, பவுன்ஸ் ஆகவில்லை, வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று நல்ல லைனில் பந்து வீசவில்லை, லெந்த் பந்துகளும் குறைவு என வேகப்பந்து துறையே தடுமாறிய போது 35 ஓவர்களிலேயே மீண்டும் புவனேஷ்வர்,உமேஷ், பும்ரா ஆகியோருக்கு வாய்ப்புத் தந்தார் கோலி. இடைப்பட்ட ஓவர்களில் இலங்கை நன்றாக விளையாடியதால், இறுதிக் கட்ட ஓவர்களில் இலங்கையை நெருக்கும் அளவுக்கு இலக்கு இல்லை. மேத்யூஸ் - குஷால் பெரேரா இணையின் இந்த விவேகமான ஆட்டத்தால் இலங்கை வெற்றியை நோக்கி நகர்ந்தது. குஷால் பெரேரா ஓய்வெடுக்க சென்ற போது அசேலா குணரத்னே வந்தார். இவர் டி20 பாணியில் விளாசினார். 

இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையுடன் ஆடிய இலங்கை அணி எளிதில் வென்றது. 321 ரன்கள் என்பது எந்த இடத்திலும் இலங்கைக்கு சிக்கலான இலக்காக தோன்றவில்லை. நேற்று  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் கூட நல்ல லெந்த்தில் பந்துகள் வீச வில்லை. பேட்ஸ்மேனின் நெஞ்சுக்கும், தலைக்கும் குறி வைக்கவில்லை. இடுப்புக்கும் மார்புக்கு கீழும் வரும் பந்துகளை எப்போதுமே இலங்கை வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள். இலங்கை அணியின் பலமான அம்சத்தில் நமது வீரர்கள் பலவீனமாக பந்து வீசியது தோல்விக்கு காரணமாக அமைந்தது. அஷ்வின் இல்லை அதனால் தான் இந்தியா தோற்றதா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்திய  ரசிகர்கள். 

அஷ்வின்

அஷ்வின் ரவிச்சந்திரன் இலங்கைக்கு எதிராக  20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது எகானமி ரேட்டும் 4.64 மட்டுமே. பவுன்ஸ் ஆகாத ஆடுகளங்களில் அஷ்வின் எப்போதுமே சிறப்பாக வீசக் கூடியவர். அது மட்டுமல்ல தனது மணிக்கட்டை பயன்படுத்தி இதுபோன்ற ஆடுகளங்களில் நன்றாக பந்துகளை திருப்பக் கூடியவர். அவர் இருந்திருந்தால் 30 - 40 ஓவர்களில் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் இருந்திருக்கலாம். எனினும், அஷ்வினின் கடந்த கால பெர்பார்மென்ஸ் குறித்து கவலைப்பட வேண்டிய அம்சமும் இருக்கிறது. 2015  அக்டோபருக்கு பிறகு ஐந்து ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார் அஷ்வின். இந்த ஐந்து போட்டிகளிலும் 60 ரன்களுக்கு மேல் விட்டுத் தந்திருக்கிறார். மூன்று போட்டிகளில் விக்கெட் எடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆகவே அஷ்வினை எடுத்திருந்தாலும் கண்டிப்பாக இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. 

இந்தியாவின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் சொதப்பல்களைத் தாண்டி இலங்கை  அணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ததையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் சகஜம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 99% அஷ்வின் களமிறங்குவார் என நம்பலாம். எனினும் தென் ஆப்ரிக்காவுடனான வெற்றி எளிதானதல்ல. இப்போது இந்திய அணியின் முதல் இலக்கு தென் ஆப்ரிக்காவை வெல்ல வேண்டும் என்பதே. இந்தியா, தென் ஆப்ரிக்கா இரண்டுமே மிகச்சிறந்த அணிகள். நாக் போட்டிகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரியும். தென் ஆப்பிரிக்காவுக்கு தோல்விகளில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது தெரியும். தவிர நேர்த்தியான ஆட்டத்தையும் வெளிப்படுத்துவார்கள். இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்ரிக்க அணி இந்தியாவுடன் மோதும்போது சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்திருக்கிறது. அந்த வரலாறு தொடருமா? தென் ஆப்ரிக்கா அரை இறுதி செல்லுமா? இந்தியா அதிர்ச்சித் தோல்வி அடையுமா அல்லது ஆவேச வெற்றி கொள்ளுமா என்பதற்கான விடையை  தெரிந்து கொள்ள இந்த  ஞாயிற்று கிழமை இரவு வரை பொறுத்திருப்போம்.