நியூஸிலாந்தை வீட்டுக்கு அனுப்பியது பங்களாதேஷ்... அரையிறுதிக்கு தகுதி பெறுமா?


2017 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், குரூப் - ஏ பிரிவில் நேற்று நடந்த போட்டியில் நியூஸிலாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதின. தொடரில் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பைத் தக்கவைக்க, இரு அணிகளுக்கும் இது முக்கியமானப் போட்டி என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் (57 ரன்கள்) மற்றும் ராஸ் டெய்லர் (63 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில், எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது. பங்களாதேஷ் சார்பில் ஹுசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு, ஆரம்ப ஓவர்களில் நியூஸிலாந்து அணியின் பௌலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதைச் சமாளிக்க முடியாமல் தமீம் இக்பால், சவுமியா சர்கார், சபீர், முஸ்பிகுர் ரஹீம் ஆகிய முதல் நான்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினர். இவர்களில் ரஹீம் மட்டும் அதிகபட்சமாக 14 ரன்கள் எடுத்தார்! மற்றவர்கள் ஒற்றை இலக்கில் அவுட் ஆகினர். இதனால் ஒரு கட்டத்தில், 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து பங்களாதேஷ் தடுமாறியது. 


இதனால் நியூஸிலாந்து எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷகிப் அல் ஹசனும், மஹமதுல்லாவும் இணைந்தனர். முதலில் நிதானமாக இன்னிங்ஸை தொடங்கிய அவர்கள், இலக்கை நோக்கி நிதானமாகப் பயணித்தனர். சிறப்பாக ஆடிய இவர்கள் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். அதிலும் குறிப்பாக 224 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி எடுத்ததால், ஆட்டத்தை நியூஸிலாந்து அணியிடமிருந்து பறித்தது பங்களாதேஷ்! ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணியின் பெஸ்ட் பார்ட்னர்ஷிப் இதுதான்.


இந்த சாதனைகளால், 47.2 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. ஷகிப் அல் ஹசன் 114 ரன்களையும்,  மஹமதுல்லா 102 ரன்களையும் எடுத்தனர். நியுசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம், பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை சற்று தக்கவைத்துள்ளது. அதேநேரத்தில் நியூஸிலாந்து அணி தொடரை விட்டு முதல் அணியாக வெளியேறியுள்ளது!


தற்போது குரூப்-ஏ பிரிவில் பங்களாதேஷ் அணி இரண்டாமிடத்தில் உள்ளது. இன்று நடக்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில், பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!