வெளியிடப்பட்ட நேரம்: 01:05 (11/06/2017)

கடைசி தொடர்பு:01:15 (11/06/2017)

'இதைச் செய்தால், தென் ஆப்ரிக்காவை ஜெயிக்கலாம்' - கோலி அட்வைஸ்!

 

2017 சாம்பியன்ஸ் டிராபியின் குரூப் - ஏ பிரிவில், இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஆனால் குரூப் - பி பிரிவில், எந்த அணி அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இந்நிலையில், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாழ்வா? சாவா? போட்டியில், இன்று இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமானப் போட்டி. இதனால், இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

 

Virat Kohli

 

இதனிடையே இந்தப் போட்டி குறித்து, இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது எங்களுக்கு மிகவும் முக்கியமானப் போட்டி; நிச்சயம் இரு அணிகளும்120 சதவிகிதம் அர்ப்பணிப்புடன் விளையாடும். நல்ல சம நிலையுடன் கூடிய அணி, போட்டி மனப்பான்மையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்; அதேநேரத்தில் உணர்ச்சிவசப்படக்கூடாது.

முடிந்த அளவுக்கு எந்த சூழ்நிலையிலும் இயல்பாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் வெற்றி பெற முடியும். இது மாதிரியான முக்கியமான போட்டியில், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து, உணர்ச்சிவசப்பட்டு தோற்றவர்கள் அதிகம்; எனவே மிகவும் அமைதியாக இருக்கும் அணியே வெற்றி பெறும். அமைதிதான் இந்தப் போட்டியை வெல்வதற்கான, மிகப்பெரிய உத்தியாக இருக்கும்" என்று கூறினார்.