வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (13/06/2017)

கடைசி தொடர்பு:16:09 (13/06/2017)

அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானுக்கு ஐசிசி அபராதம்!

இலங்கையுடன் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு அபராதம் விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

பாகிஸ்தான்

'மினி உலகக் கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு முன்னணி அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றுவருகின்றன. இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத்  தகுதிபெற்ற நிலையில், நேற்று இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், இலங்கையை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

இதனிடையே நேற்று நடந்த போட்டியில், 'பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசவில்லை' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மதுக்கு சம்பளத்தில் 20 சதவிகிதத் தொகையும், மற்ற வீரர்களுக்கு 10 சதவிகிதத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்தைச் சந்திக்கிறது.