வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (13/06/2017)

கடைசி தொடர்பு:18:41 (13/06/2017)

டிவில்லியர்ஸுக்கு சரிவு! உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆனார் விராட் கோலி

கோலி

சாம்பியன்ஸ் ட்ராபி அரை இறுதிச் சுற்றை எட்டியுள்ள நிலையில், ஒரு நாள் போட்டிகளுக்கான புது தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது ஐசிசி. பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் நம்பர் ஒன் இடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்குச் சென்றிருக்கிறார். கடந்த மூன்று போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், இந்தச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 

இந்திய வீரர் விராட் கோலி அதிரடியாக முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறார். அவர் மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்துக்குத் தாவியுள்ளார். அவரைவிட ஒரு புள்ளி குறைவாகப் பெற்று, டேவிட் வார்னர் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர், தற்போது பத்தாவது இடத்தில் இருக்கிறார். கேன் வில்லியம்சன் ஹாட்ரிக் அரை சதங்கள் விலகியதால், ஒன்பதாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். ஹாஷிம் ஆம்லா, டீ காக், ரோஹித் ஷர்மா, மார்ட்டின் கப்தில், மகேந்திர சிங் தோனி ஆகியோர் தர வரிசையில் சரிவைச் சந்திருக்கிறார்கள். 

பௌலிங் தர வரிசையில் ஜோஷ்  ஹாசில்வுட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ககிஸோ ரபாடா முதலிடத்திலிருந்து நான்காம் இடத்துக்குச் சரிந்திருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷீத் கான் அதிரடியாக 18 இடங்கள் முன்னேறி, ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார். இது, மாபெரும் முன்னேற்றம் எனக் கருதப்படுகிறது. இங்கிலாந்து வீரர் பிளங்கட் ஏழு இடங்கள் முன்னேறி, தர வரிசையில் ஒன்பதாவது இடத்துக்கு வந்திருக்கிறார். முதல் பத்து இடத்துக்குள் இந்திய பௌலர்களுக்கு இடமில்லை.