வெளியிடப்பட்ட நேரம்: 00:48 (14/06/2017)

கடைசி தொடர்பு:10:02 (14/06/2017)

'இந்தியாவுடனான தோல்வியே, நீண்ட நாள்களுக்குப் பிறகு எங்கள் மோசமான ஆட்டத்துக்கு உதாரணம்!' - டு பிளசிஸ்

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடங்கும்போது, கோப்பையை வெல்லும் வாய்ப்பிருப்பதாக ஆரூடம் சொல்லப்பட்ட அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. ஆனால், லீக் சுற்றைக்கூட தாண்டாமல், தொடரிலிருந்து வெளியேறியுள்ளது அந்த அணி. தோல்வி அடைந்தாலும் குறைந்தபட்சம் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவுடன் நடந்த லீக் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, தென்னாப்பிரிக்கா. 

எளிமையான ஸ்கோரை சேஸ் செய்து, இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. மறுபடியும் உலகக் கோப்பை போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களில் சொதப்பியது, தென்னாப்பிரிக்கா. இந்தமுறையும் அந்த அணி சோபிக்காததை ஆடுத்து, பல தரப்புகளிலிருந்து தென்னாப்பிரிக்கா மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில்தான், அந்த அணியின் துணை கேப்டன் டு பிளசிஸ் இந்தியாவுடனான ஆட்டம்குறித்து பேசியுள்ளார். அவர், 'மிக நீண்ட நாள்களில், நாங்கள் விளையாடிய மிக மோசமான ஆட்டமாக இந்தியாவுடன் நாங்கள் விளையாடிய போட்டியைக் கூறலாம். நாங்கள் வெற்றிபெறுவதற்கு அனைத்து மட்டத்திலும் தயார் நிலையிலேயே இருந்தோம். குறிப்பாக, இந்த ஆண்டு நாங்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறோம். நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய அணி. ஆனால், அப்படிப்பட்ட ஆட்டத்தை அன்று வெளிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவோ, முக்கியமான தொடர்களிலும் தருணங்களிலும் தங்கள் விளையாட்டுத் திறமையை அதிகரித்துக்கொள்ளக்கூடியவர்கள். அன்று அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.' என்று விளக்கினார்.

பெரிய தொடர்களில் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 'அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. இந்தத் தொடருக்கு முன்னர் அதற்கு என்னிடம் பதில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை.' என்று முடித்துக்கொண்டார்.