வெளியிடப்பட்ட நேரம்: 01:17 (14/06/2017)

கடைசி தொடர்பு:10:55 (14/06/2017)

100 சதங்கள் அடித்தார் சங்ககரா... குவியும் வாழ்த்துகள்!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா, 'ஃபர்ஸ்ட்- கிளாஸ் மற்றும் லிஸ்ட்- ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சங்ககரா, கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்- கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார். இந்த நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ரன்கள் ஸ்கோர் செய்து, 100-வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில், 100 சதங்கள் அடிக்கும் 37-வது நபர்தான் அவர் என்பது, இந்தச் சாதனையின் வீச்சைப் பற்றி அறியச்செய்யும். 

 

இந்தச் சாதனைகுறித்து சங்ககரா, 'இந்தச் சாதனை படைத்ததில் மிக நன்றாக உணர்கிறேன். எனக்கு உண்மையில் 100 சதங்கள்குறித்து எந்த ஞாபகமும் இல்லை. ஆட்டத்தை முடித்துக்கொண்டு பெவிலியன் திரும்பிய பின்னர்தான், அதைப் பற்றி கூறினார்கள். நான் கிரிக்கெட்டை இன்னும் நேசித்துதான் ஆடிக்கொண்டிருக்கிறேன். எதுகுறித்தும் நான் டென்ஷனாகவில்லை. முறையான பணி-வாழ்க்கை சமநிலையே இந்தச் சாதனைக்குக் காரணம்' என்று நெகிழ்ந்துள்ளார்.

தற்போது விளையாடி வரும் தொடரோடு, ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டிலிருந்தும் சங்ககரா ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.