வெளியிடப்பட்ட நேரம்: 06:11 (14/06/2017)

கடைசி தொடர்பு:07:27 (14/06/2017)

பி.டி. உஷாவுக்கு டாக்டர் பட்டம்!

பெண் தடகள வீராங்கனைகளுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்த பி.டி. உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஐஐடி கான்பூர் முடிவுசெய்துள்ளது.

சில துறைகளில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி முன்மாதிரியாகத் திகழ்ந்து, அந்தத் துறையின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியவர்களுக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன்படி, ஐஐடி கான்பூர் தடகள விளையாட்டுகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த தங்க மங்கை பி.டி.உஷாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்துள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த பி.டி. உஷா, சர்வதேச அளவில் தடகளப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இவர், 'இந்திய தடகளங்களின் அரசி. ‘இந்தியாவின் தங்க மங்கை’, 'பய்யொலி எக்ஸ்பிரஸ்' என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்.

ஐஐடி கான்பூரின் 50-வது பட்டமளிப்பு விழா, வரும் 15,16 தேதிகளில் நடக்க உள்ளது. இந்த விழாவில் பி.டி. உஷாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிறது. இது, அவருக்கு வழங்கப்படும் இரண்டாவது டாக்டர் பட்டம். தொடர்ந்து இளம் தடகள வீரர்களைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் பி.டி. உஷா. தன்னுடைய வாழ்க்கையைப் படமாக எடுக்கலாம் என்ற கோரிக்கையை வைத்தபோது, 'ஒலிம்பிக்கில் இந்தியா தடகளத்தில் தங்கம் வெல்லும் வரை வேறு எதுவும் முக்கியமில்லை' என்று கூறி நிராகரித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க