வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (15/06/2017)

கடைசி தொடர்பு:09:30 (15/06/2017)

'நெருக்கடி எங்களுக்கல்ல இந்தியாவுக்குதான்!'- ஆரூடம் சொல்லும் வங்காள தேச கேப்டன்

சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியில், இந்தியா - வங்காள தேசம் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. 

Mashrafe Mortaza

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குச் சென்றுவிடும் என்று பலர் நினைத்தனர். ஆனால், எதிர்பார்ப்புகளை மீறி பாகிஸ்தான் இங்கிலாந்தை எளிமையாகத் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், வங்காள தேச கேப்டன் மஷ்ரஃபே மொர்டசா இந்தியாவுடனான அரையிறுதிப் போட்டிகுறித்து பேசியுள்ளார். அவர், 'நாங்கள் அரையிறுதிப் போட்டியில் விளையாடுகிறோம். இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டிதான். ஆனால், எங்களைவிட இந்தியாதான் அதிக அழுத்தத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஜனத் தொகை மற்றும் இந்திய மக்கள் மத்தியில் இருக்கும் கிரிக்கெட் மீதான காதல்தான், அவர்கள் மீதான நெருக்கடிக்கு முக்கியக் காரணம்.

இரு அணிகளுமே நன்றாக விளையாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இது ஒரு கிரிக்கெட் போட்டி. போட்டியன்று யார் நன்றாக விளையாடுகிறார்களோ, அவர்களே வெற்றிபெறுவர். என் அணியினரிடம், இது ஒரு அரையிறுதிப் போட்டியாக நினைத்தீர்கள் என்றால், கண்டிப்பாக அதிக அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், இதுவும் ஒரு போட்டியாக அணுகினீர்கள் என்றால், அப்படி இருக்காது' என்று அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.