'பக்குவமடைந்த வங்காளதேசம்... அரையிறுதிப் போட்டி...' - கேப்டன் கோலி சொல்வது இதுதான்!

சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பை போட்டியில் இன்று நடக்க இருக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதுகின்றன. வலுவான நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்காள தேசத்தை மிகச் சுலபமாக வென்றுவிடும் என்று கூறப்பட்டாலும், அதுகுறித்து கவனமாக இருக்கிறார் கேப்டன் விராட் கோலி. 

Virat kohli

ஏற்கெனவே இலங்கையுடன் லீக் போட்டியில் தோல்வியடைந்ததால், வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் கூடுதல் கவனத்துடன் இருப்போம் என்று கூறும் கோலி, 'வங்காள தேசம் இப்போது சர்வதேச அளவில் டாப் 8 அணிகளில் ஒன்றாக உள்ளது. எனவே, அவர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்களிடத்தில் மிகவும் திறமைவாய்ந்த, நாட்டுக்காக மிகுந்த ஆர்வத்துடன் விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். நிறைய போட்டிகளில் வெற்றிபெறவேண்டுமென்று அவர்கள் நினைப்பது களத்தில் நன்றாகவே தெரிகிறது. 

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில்கூட அவர்கள் மிக நன்றாக விளையாடி வெற்றிபெற்றனர். பக்குவமடைந்த ஒரு அணியின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். எனவே, அவர்கள் போட்டி மிகுந்த அணி என்பதில் சந்தேகமில்லை' என்று கூறினார். 

இந்தியா எப்படி இந்தப் போட்டியை அணுகும் என்ற கேள்விக்கு கோலி, 'இந்தத் தொடரில், எங்களுக்குக் கிடைத்த நேர்மறை விஷயங்களை ஒன்றுதிரட்டி களத்தில் இறங்குவோம். முன்னர் எப்படி விளையாடி இருக்கிறோம் என்பதைப் பற்றி பார்க்காமல், இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதில்தான் எங்கள் கவனம் இருக்கும். கடைசிப் போட்டியில் எப்படிப்பட்ட மனநிலையுடன் விளையாடக் களமிறங்கினோமோ... அப்படியே இப்போதும் களம் காண உள்ளோம்' என்று முடித்துக்கொண்டார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!