வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (15/06/2017)

கடைசி தொடர்பு:11:29 (15/06/2017)

இந்தியாவுக்காக 300-வது ஆட்டம்: யுவராஜ் சிங் உருக்கம்..!

சாம்பியன் ட்ராபி ஆட்டத்தின் அரையிறுதிப் போட்டியில், இன்று இந்தியாவும் வங்க தேசமும் மோதுகின்றன.  இந்தப் போட்டி, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கிற்கு 300-வது போட்டியாகும். 


சாம்பியன் ட்ராபி போட்டியில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், இன்று இந்தியா மற்றும் வங்க தேச அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதும். இந்தப் போட்டியில் களமிறங்கும் யுவராஜ் சிங்கிற்கு இது 300-வது போட்டியாகும். இதுகுறித்து யுவராஜ் சிங், ''இது எனக்குப் பெருமையான விஷயம். எனது கிரிக்கெட் வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். என்ன தடைகள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடுவதுதான் எனது குணம். அதைத்தான் எப்போதும் கடைபிடித்திருக்கிறேன். இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடுவேன்'' என்றார்.