'இனி உலகக் கோப்பையில்தான் கவனம்!'- தோல்வியிலிருந்து மீண்டெழ ஜோ ரூட்டின் யோசனை

'சாம்பியன்ஸ் டிராபியில் நடந்ததை மறந்துவிட்டு, உலகக் கோப்பை நோக்கி இங்கிலாந்து வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும்.' என்று கூறியுள்ளார் இங்கிலாந்தின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஜோ ரூட்.

Joe Root

சாம்பின்ஸ் டிராபி 2017, இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை செய்யவுள்ளன. ஆனால், இறுதிப் போட்டியில் கண்டிப்பாக களத்தில் இருக்கும் என்று பெரும்பாலானவர்களால் யூகிக்கப்பட்ட 'இன்-ஃபார்ம்' அணியான இங்கிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிக மோசமான முறையில் தோல்வியடைந்து வெளியேறியது. இங்கிலாந்தில் நடக்கும் தொடர், வலுவான அணி, லோக்கல் சப்போர்ட் என்ற பல நேர்மறை பலத்துடன், சாம்பியன்ஸ் டிராபியில் களம் இறங்கியது இங்கிலாந்து. ஆனால், இந்த அதிர்ச்சிகரமான தோல்வி அவர்களை துவண்டு போகச் செய்துள்ளது.

எனவே, தோல்வியிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மீண்டு வரும் நோக்கில் அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஜோ ரூட், 'பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது மிக மிக ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த சில மாதங்களாகவே நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடி வருகின்றோம். ஆனால், சரியான நேரத்தில் அதைத் தொடர தவறிவிட்டோம். ஆனால், துவண்டுவிடாமல் முன்னோக்கிப் போவதற்கு இங்கிலாந்து அணிக்கு நிறைய இருக்கிறது. 

இப்போது இங்கிலாந்து அணி வீரர்கள் நடந்ததை மறந்துவிட்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரப் போகும் உலகக் கோப்பையில் எப்படி வெற்றி பெறுவது என்று கவனம் செலுத்த வேண்டும். தோல்வி நிறைய கற்றுக் கொடுத்தது. உலகக் கோப்பை வரும்போது, அதற்கு எல்லா விதத்திலும் தயாராகி எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.' என்று நம்பிக்கை ததும்ப பேசியுள்ளார். 

ஜோ ரூட்தான், இங்கிலாந்தின் தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன். முதன்முதலாக அவர் தலைமையில் இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இன்னும் சில வாரங்களில் களம் காணவுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!