வெளியிடப்பட்ட நேரம்: 05:56 (16/06/2017)

கடைசி தொடர்பு:09:55 (16/06/2017)

#ChampionsTrophy- தொடர் வெற்றிகளுக்கு கோலி பாராட்டும் இருவர் இவர்கள்தாம்!

பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்த்தது போலவே, மிகவும் பலம் பொருந்திய இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட்டின் மினி உலகக் கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா இருக்கும்.

Virat kohli

இந்தத் தொடரில் பல்வேறு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பேட்டிங், பௌலிங் என இரு பிரிவுகளிலும் இந்திய அணி அசத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று குறிப்பாக இருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

இது குறித்து கோலி, 'பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் பிரமாதமாக பந்து வீசி வருகின்றனர். ஆட்டத்தின் தொடக்கத்திலும் சரி, ஆட்ட முடிவிலும் சரி, அவர்கள் பௌலிங் டாப் கிளாஸாக உள்ளது. இலங்கையுடனான போட்டிக்குப் பிறகு அவர்கள் லென்த் மற்றும் துல்லியத் தன்மை அபரிமிதமாக அதிகரித்துள்ளது. விக்கெட்டே எடுக்க முடியாத சூழ்நிலையிலும் கூட, சூப்பரான பௌலிங் மூலம் அவர்கள் விக்கெட் எடுத்தனர்.' என்று புகழாரம் சூட்டினார். 

இந்தியாவின் பரம-எதிரி என்று சொல்லப்படும் பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டி குறித்தும், அந்த அணியின் திடீர் அனல் பறக்கும் ஆட்டம் குறித்தும் கோலி, 'அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டிகளைப் பார்த்து மிரண்டுவிட்டேன். அடி மட்டத்திலிருந்து அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்பியது சிறப்பாக இருக்கிறது. அவர்கள் இறுதிப் போட்டியில் இருக்கிறீர்கள் என்றால், நன்றாக விளையாடியுள்ளார்கள் என்று அர்த்தம். அதற்கான பெருமை அவர்களையே சாரும். மிகவும் வலுவாக தெரிந்த அணிகளை அவர்கள் வீழ்த்தியுள்ளனர். நாங்கள் அவர்களுடனான போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் இதுவரை சிறப்பாக செயல்பட்டது போல மீண்டும் செயல்படவே பார்ப்போம். எனவே நாங்கள் எத்தனிக்கும் முடிவு கிட்டும் என்று நம்புகிறோம்' என்று நம்பிக்கை தெறிக்க பேசியுள்ளார்.