வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (16/06/2017)

கடைசி தொடர்பு:15:00 (16/06/2017)

ரோகித் சதம் ஓகே... கோலியின் அந்த கவர் ட்ரைவ்... பாகிஸ்தான் பீ கேர்ஃபுல்! #MatchAnalysis

சர்வதேச கிரிக்கெட் அரங்கில், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் எப்போதுமே அனல் பறக்கும். எதிர்பார்ப்பு எகிறும். இரு நாடுகளின் எல்லைகள் பதற்றமாகும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்றுநோக்கும். ஹர்ஷா போக்ளேக்கள் ஓவர்டைம் பார்ப்பர். இதைப் புரிந்துகொண்ட ஐ.சி.சி ஒவ்வொரு முறையும், லீக் சுற்றில் இந்த இரு அணிகளும் மோதும் வகையில் அட்டவணை அமைக்கும். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அப்படித்தான். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.சி.சி நடத்தும் டோர்னமென்ட் ஒன்றில் இரண்டாவதுமுறையாக இந்தியா – பாகிஸ்தான் மோதுகின்றன. (இதற்கு முன் 2007 டி-20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் இருமுறை மோதின) இதற்கு, முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறிய வங்கதேசத்துக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக வங்கதேச பெளலர்களுக்கு...

விராட் கோலி

‘வங்கதேசத்தை இன்னும் கத்துக்குட்டி அணியாக பாவிக்க வேண்டியதில்லை. ஒன்றை மறந்துவிட வேண்டாம், அவர்கள் ஐ.சி.சி.யின் தரவரிசைப் பட்டியலில் எட்டு இடங்களுக்குள் இடம்பிடித்ததால்தான், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்’ என நடப்பு சாம்பியன் இந்தியாவை எச்சரிக்கை செய்தார் சவுரவ் கங்குலி. உண்மைதான், அவர்கள் நியூஸிலாந்தை வீட்டுக்கு அனுப்பி இருந்தனர். இருந்தாலும், நாங்கள் இன்னும் கத்துக்குட்டிகள்தான் என்பதை நிரூபித்து விட்டது வங்கதேசம். அல்லது இதுபோன்ற பெரிய தொடர்களில் எப்படி வெல்ல வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா. கிட்டத்தட்ட ஒன்சைட் மேட்ச். அரை இறுதிக்கு உரிய விறுவிறுப்பு இல்லை. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் எந்த இடத்திலும் பிடியை இறுக்கவில்லை. இந்தியா ஆரம்பத்தில் இருந்தே பிடியைத் தளர்த்தவில்லை. ஆக, இந்தியா  எளிதில் வெற்றி. இந்தப்போட்டியில் வெற்றி என்பதைக் கடந்து காலத்துக்கும் நிற்கும் நினைவுகளாக பல சாதனைகள் அரங்கேறின. 

விராட் கோலி - இந்திய அணி

இங்கிலாந்தில் முதல் சதம், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் சதம், வங்கதேசத்துக்கு எதிராக இரண்டாவது சதம், ஒட்டுமொத்தமாக 11 சதம் என இது ரோகித்தின் நாள். வங்கதேசம் 264 ரன்களை எடுத்தபோதே தெரிந்து விட்டது, மீண்டும் ரோகித் தாண்டவம் ஆடுவார், இந்தியா வெற்றிபெறும் என்று. ஏனெனில், 264 ரோகித்தின் அதிர்ஷ்ட எண். இல்லையா? ரோகித் மட்டுமல்ல, இது விராட் கோலியின் நாளும் கூட. 42 பந்துகளில் 42வது அரை சதம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 8,000 ரன்களைக் கடந்தவர், அதிலும் இளம் வீரர், முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் கேப்டன் பொறுப்பு என விராட்டுக்கும் இது மெமரபிள் மேட்ச்.

முதன்முறையாக இந்தத் தொடரில் அரை சதம் கடக்க முடியவில்லை என்றாலும், கங்குலியை ஓவர்டேக் செய்து, சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களைக் குவித்த இந்தியர் என்ற பெருமை பெற்றது... அலட்டாமல், அதேநேரத்தில் தஸ்கின் அகமது வீசிய ஷார்ட் பாலில் Pull shot மூலம் சிக்ஸர் அடித்து மிரட்டியது என ஷிகர் தவனுக்கும் இது நல்ல மேட்ச். ஆனால், தன் 300வது போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங்குக்கு மட்டும் சொல்லும்படியான கேரக்டர் ரோல் கிடைக்காதது துரதிர்ஷ்டம். மற்றபடி இந்தியாவுக்கு இது நன்நாள். ஐ.சி.சி நடத்தும் தொடர்களில் ஒன்பதாவது முறையாக ஃபைனல், அதிலும் 2010ம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே நான்காவது முறையாக ஃபைனல், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என இந்தியாவின் கோப்பை கனவுக்கு அச்சாரம் போட்ட நாள்.

Bangladesh player congrats Rohit


  அரையிறுதியில் இந்தியா – வங்கதேசம் மோதல் என்றதுமே உறுதியாகி விட்டது இது இந்தியாவின் பேட்டிங்குக்கும், வங்கதேச பெளலிங்குக்கும் இடையிலான போட்டி என்று. கடந்த ஏழு ஆண்டுகளில் ஆறாவது முறையாக ஐ.சி.சி தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது இந்தியா. எனவே, எப்போது எதிர் அணி தவறு செய்யும், அதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சூட்சுமம் இந்தியாவுக்கு அத்துப்படி. செளமியா சர்க்கார் (0), சபீர் ரஹ்மான் (19) இருவரையும் புவனேஸ்வர் குமார் சொற்ப ரன்களில் அவுட்டாக்கினாலும், தமீம் இக்பால், முஷ்ஃபிகுர் ரஹ்மான் இருவரும் அரைசதம் அடித்து நங்கூரமிட்டனர். 25 ஓவர்களில் 142/2 என வலுவாகவே இருந்தது வங்கதேசம்.

bhuvneshwar kumar bowling action

நிச்சயம் ஸ்கோர் 300 ரன்களைத் தாண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மெயின் ஸ்பின்னர்களை அற்புதமாக கையாண்டு, ஹர்திக் பாண்டியாவின் மூன்று ஓவர்களில்  28 ரன்கள் விளாசிய தமீம்  இக்பால், முஷ்ஃபிகுர் ஜோடி, பார்ட் டைம் பவுலரான கேதர் ஜாதவின் ஸ்பின்னில் ஏமாந்ததுதான் பரிதாபம். வங்கதேசத்தின் சரிவு தொடங்கியதும் அங்குதான். ஜஸ்ப்ரிட் பும்ரா தன் கடைசி ஸ்பெல்லில் (5-0-27-1) நேர்த்தியாக வீசினார் எனில், ஃபைனலுக்கு இவர் வேண்டுமா என யோசிக்க வைக்கும் வகையில் இருந்தது  ஹர்திக் பாண்டியாவின் பெளலிங். ஐந்தாவது பவுலர் குறித்து இந்தியா சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

இந்தியா இந்த ஸ்கோரை சேஸ் செய்யும் என்பது தெரியும். எப்படி சேஸ் செய்யும், யார் சதம் அடிப்பர் என்பது மட்டுமே கேள்வி. ரோகித் சதம் அடித்தார். ஓகே. இந்தத் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர், புல் லெந்த்தில் வீசப்பட்ட பெரும்பாலான பந்துகளை ட்ரைவ் அல்லது தன் பிரத்யேக புல் ஷாட் மூலம் பவுண்டரிக்கு அனுப்பி உள்ளார். ரோகித் அவுட்டாகாமல் 123 ரன்கள் எடுத்தார் என்றாலும், விராட் கோலியின் ஷாட்கள்தான் பக்கா.

இந்தியா - வங்கதேசம் மோதல்... களமிறங்கியது முதல் வெளியேறியது வரை... ஆல்பம்!

ஸ்டெம்புகள் தெறிக்க ஒரு பேட்ஸ்மேனை போல்டாக்குவது பெளலருக்கு அழகு எனில், ஃபீல்டர் யாரும் தொடாத வகையில், விரட்ட முடியாத வகையில், இடைவெளியில் பவுண்டரி விரட்டுவது பேட்ஸ்மேனுக்கு அழகு. விராட் கோலி நேற்று அடித்த ஒவ்வொரு பவுண்டரியும் அவ்வளவு அழகு. 

Virat Kohli Cover drive


முஷ்டஃபிசுர் ரஹ்மான் வீசிய 20வது ஓவரில் கோலி அடித்த ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், மீண்டும் அவர் ஓவரில் அடித்த கவர் ட்ரைவ் பவுண்டரி எல்லாம் ப்ப்ப்பா… சான்சே இல்லை. பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த ஷாட்டைப் பார்த்து, வர்ணனையில் இருந்த ஷேன் வார்னே இப்படிச் சொன்னார், ‘ஷாட் ஆஃப் தி மேட்ச்.’ 

அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்ட அந்த பந்தை அவ்வளவு நளினமாக பவுண்டரிக்கு விரட்டினார் விராட். ஃபுட்வொர்க், ரிஸ்ட் வொர்க் என எல்லாமே அவ்வளவு நேர்த்தி. இந்தத் தொடரில் இதுவரை விராட்டிடம் இருந்து இப்படியான ஷாட்கள் வரவில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து நேற்று மொத்தமாக விருந்து வைத்தார். அடுத்து ரூபெல் ஹுசைன் பந்தில் மீண்டும் ஒரு கவர் ட்ரைவ்.  அதை ‘டெக்ஸ்ட் புக் கவர் ட்ரைவ் ஃபரம் கிளாஸ் பிளேயர்’ என வர்ணித்தனர் வர்ணனையாளர்கள். மொசதேக் பந்தில்  மீண்டும் ஒரு ட்ரைவ்..  மிட் ஆஃப் - எக்ஸ்ட்ரா கவர் இடையே பாய்ந்த அந்த பவுண்டரி எல்லாம் கிளாசிக். இப்படிப்பட்ட ஷாட்கள்தான்,  கோலியை அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன் ஆக்குகிறது என்பதை மறுக்கவே முடியாது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் 2016 டி-20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அஃப்ரிடியின் பந்திலும் இதேமாதிரிதான் கவர் ட்ரைவ் விளாசினார் விராட். சேஸிங், முக்கியமான போட்டிகள் என்றாலே உக்கிரமாகி விடுகிறார். அதுமட்டுமல்லாது அவரது பெஸ்ட், பெர்ஃபெக்ட் ஷாட்கள் வெளிவருகிறது.  ஐ.சி.சி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள விராட், ஒரு கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் முழு அளவில் தயாராகி விட்டார்.

பாகிஸ்தான் பீ கேர்ஃபுல்!

இந்தியா களத்தில் வங்கதேசத்தை அடித்து நொறுக்க, நெட்டிசன்ஸ் இணையத்தில் மீம்களால் வெளுத்து வாங்கிய தொகுப்பு

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்