வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (16/06/2017)

கடைசி தொடர்பு:18:46 (16/06/2017)

ரியல் மாட்ரிட்டிலிருந்து ரொனால்டோ வெளியேறுகிறார்?

போர்ச்சுகலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் க்ளப்பிலிருந்து வெளியேற முடிவுசெய்துள்ளார். 

ரொனால்டோ 2009-ம் ஆண்டிலிருந்து ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாகப் புகைப்பட உரிமம் மூலம் சம்பாதித்த பணத்தை, அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்து, ஸ்பெயினில் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட 14.7 மில்லியன் யூரோஸ் (106 கோடி ரூபாய்) வரை வரி ஏய்ப்பு செய்ததாக, ஸ்பெயின் அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு, விசாரணையில் உள்ளது.

ரொனால்டோ

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, ரொனால்டோ எங்கு சென்றாலும் பத்திரிகைகள் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றன. ‘என் மனசாட்சி தெளிவாக உள்ளது’ என்பது மட்டுமே ரொனால்டோவின் பதில். தற்போது அவர் கான்ஃபெடரேஷன் கோப்பையில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ளார். அங்கும் இதே கேள்விகள் துரத்தியதை அடுத்து, இன்ஸ்டாகிராமில், வாயில் விரல்வைத்து ‘உஷ்ஷ்’ என்று சொல்லும் தன் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார். இதற்கிடையே ரியல் மாட்ரிட் க்ளப் நிர்வாகமும் ரொனால்டோவுக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால், அது தாமதமாக வந்த அறிவிப்பு. க்ளப் நிர்வாகம் சரியான நேரத்தில் தனக்கு ஆதரவாக இல்லை என்ற வருத்தம் ரொனால்டோவுக்கு இருப்பதாகத் தெரிகிறது. 

பார்சிலோனா க்ளப்பின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியும், இதேபோல வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கினார். அவருக்கும் ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்தது. ஆனால், பார்சிலோனா க்ளப் மெஸ்சிக்கு, முழு ஆதரவு தந்தது. அதேபோன்ற ஆதரவை ரொனால்டோவுக்கு ரியல் மாட்ரிட் சரியான நேரத்தில் வழங்க தவறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், CR7 அடுத்த சீஸனில் ரியல் மாட்ரிட்டிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டதாக, போர்ச்சுகல் நாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை ரியல் மாட்ரிட் ஐந்து ஆண்டுகள் நீட்டித்தது. ரொனால்டோவும் ரியல் மாட்ரிட் மீதான தன் ப்ரியத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார். ‛ரியல் மாட்ரிட் உடனான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட இந்த நாள், என் வாழ்வின் சிறந்த நாள். ஒன்றைத் தெளிவுபடுத்துக்கொள்கிறேன். இது இந்த க்ளப் உடனான என் கடைசி ஒப்பந்தம் அல்ல. என் 41-வது பிறந்த நாள் வரை ரியல் மாட்ரிட் க்ளப்பில் விளையாடவே விரும்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகள் ரியல் மாட்ரிட்டுக்காக அதிக கோல்கள் அடித்து, அதிக கோப்பைகள் வெல்ல முயற்சிப்பேன். என் கால்பந்து வாழ்க்கையை இந்த க்ளப்பில் முடிக்க விரும்புகிறேன்’ என்றார் ரொனால்டோ. ஆனால், இன்று நிலைமை வேறு.

ரொனால்டோ

ஸ்பெயின் அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கைகளில் ரொனால்டோ ரொம்பவே எரிச்சலடைந்துள்ளார். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதே சிறந்தது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டதாகவே பேச்சு அடிபடுகிறது. போர்ச்சுகல் நாட்டிலிருந்து வெளிவரும் ‘A Bola’ பத்திரிகையும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், ரொனால்டோ தரப்பிலிருந்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ரியல் மாட்ரிட் நிர்வாகமும் வாய் திறக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, `ரொனால்டோ அடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கே மீண்டும் திரும்புகிறார்' என்ற தகவலும் பரவுகிறது. மான்செஸ்டர் யுனைடெட் அவரது தாய் க்ளப். இங்குதான் அவர் சர் அலெக்ஸ் பெர்குஷன் தலைமையில் பாலபாடம் பயின்றார். எனவே, `மீண்டும் அவர் இங்கிலாந்துக்குத் திரும்ப வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் கால்பந்து நிபுணர்கள். மான்செஸ்டர் யுனைடெட் க்ளப்பிலும் அடுத்த சீஸனுக்கு ஸ்ட்ரைக்கர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் வீரர் கிரீஸ்மனை வளைக்கப் படாதபாடுபட்டார்கள். ஆனால், டீலிங் சரிவரவில்லை. அதே நேரத்தில் இப்ராஹிமோவிச்சின் ஒரு வருட ஒப்பந்தத்தையும் நீட்டிக்க நிர்வாகம் விரும்பவில்லை. ஆக, CR7 வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க