வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (17/06/2017)

கடைசி தொடர்பு:10:34 (17/06/2017)

கவாஸ்கரை வெறுத்த கொல்கத்தா ரசிகர்கள்..! 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 3

1987 உலகக் கோப்பை

பாகம் 1/ பாகம் 2

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 1970களில் விளையாடிய இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரரும், பின்னர் வர்ணனையாளராக மாறியவருமான ஜெஃப்ரி பாய்காட் இப்படி சொல்லுவார். ‘80,000 பேருக்கு மேல் காலரியில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தியா பந்துவீசும்போது, பவுலரோ, கீப்பரோ அப்பீல் செய்தால், உட்கார்ந்திருக்கும் அனைவரும் சேர்ந்து அப்பீல் செய்வார்கள். ஒரு பேரலையாக அந்தச் சத்தம் எழுந்து அடங்கும். அடுத்த நிமிடம் இன்னொரு அப்பீல் சத்தம் பேரலையாகக் கேட்கும். மைதானத்துக்கு உள்ளே இடம் கிடைக்காமல், கையில் ட்ரான்சிஸ்டருடன் வெளியே கூட்டமாய் நின்று கமென்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் குரல்தான் அது.’

அந்த அளவுக்கு கிரிக்கெட்டின்மீது பற்றுக்கொண்டவர்கள் கொல்கத்தா வாழ் ரசிகர்கள். 1984-85 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது கவாஸ்கர் நம் அணிக்குக் கேப்டன். இங்கிலாந்து அணிக்குக் கேப்டன் டேவிட் கோவர். டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் கபில்தேவ் நன்கு ஆடியும் கொல்கத்தாவில் நடைபெற்ற மூன்றாம் டெஸ்டில் கபில்தேவை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை கவாஸ்கர். 

Sunil Gavaskar

அதனால் கவாஸ்கரின் மீது பயங்கர வெறுப்பில் இருந்தனர் கொல்கத்தா ரசிகர்கள். கவாஸ்கர் மைதானத்துக்கு உள்ளே வரும்போதும் வெளியே செல்லும்போதும், பேட்டிங் பிடிக்கும்போதும் வெறுப்பில் அவரை நோக்கி கத்திக்கொண்டே இருந்தார்கள். இங்கிலாந்து இந்தப் போட்டியில் வென்றதும் கொல்கத்தா ரசிகர்கள் மாலையை எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள்  ஓடி இங்கிலாந்து கேப்டன் டேவிட் கோவரின் கழுத்தில் போட்டு அவரைத்தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வந்தார்கள். கவாஸ்கரின் முகம் தொங்கிப் போய்விட்டது. அகில உலகத்திலும் எதிரி நாட்டு கேப்டனின் வெற்றிக்கு மாலை மரியாதை செய்தவர்கள் கொல்கத்தா ரசிகர்கள்தான் என்று வரலாற்றில் பதியப்பட்டது. அதன்பின்னர் கொல்கத்தாவில் விளையாடுவதில்லை என்று கவாஸ்கர் சபதமெடுத்துக் கொண்டதாகச் சொல்வார்கள். அதற்கேற்ப 86ல் நடந்த பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை. பிரசித்தி பெற்ற இந்தக் கொல்கத்தா டெஸ்டில்தான் முகமது அசாருதீன் அறிமுகமானார். இந்த டெஸ்ட் தொடங்கி அடுத்துவந்த இரண்டு டெஸ்டுகளிலும் அவர் தொடர்ந்து சதமடித்தார். 

எனவே, இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்துடன் வெற்றிபெற்றால் கொல்கத்தா போய் விளையாட வேண்டுமே என்ற குழப்பத்தாலேயே கவாஸ்கர் அரை இறுதியில் விரைவில் ஆட்டமிழந்ததாகக் கிண்டலாகக் கூறுவார்கள்.  

இந்த அளவுக்கு கிரிக்கெட்மீது பற்றுக்கொண்ட கொல்கத்தா ரசிகர்கள், இந்தியாதான் இறுதிப்போட்டிக்கு வரும் என்று டிக்கெட்டுகளை நம்பிக்கையோடு வாங்கி வைத்திருந்தார்கள். ஆனால் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா என்று முடிவானதும் தளர்ந்து போனார்கள். ஆனாலும் மைதானத்தை நிறைத்தார்கள்.

ஆஸ்திரேலியா டாஸில் ஜெயித்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் பூன் நிதானமாக ஆடி 75 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 253 ரன்கள் எடுத்திருந்தது. மத்திய வரிசை ஆட்டக்காரர் வெலட்டா 31 பந்துகளில் 45 ரன் எடுத்தது திருப்புமுனையாக அமைந்தது இல்லாவிட்டால் 230-235 தான் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோராக இருந்தது.  இங்கிலாந்து நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. கேப்டன் மைக் கேட்டிங்கும் பில் ஆதேவும் சீராக ஆட்டத்தைக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

இன்னும் 119 ரன் தேவை, 8 விக்கெட்டுகள் உள்ளன. 20க்கும் மேல் ஓவர்கள் உள்ள நிலையில் எல்லோரும் ‘அப்பாடா... ஒரு வழியா இங்கிலாந்து கப் வாங்கிடுவாங்க. மூன்று முறை அவர்கள் நாட்டில் நடத்தி வாங்க முடியாததை இங்கு வந்து வாங்கப் போகிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டார்கள். அப்போதுதான் கிரிக்கெட் கடவுள் சிரித்தார். அலன் பார்டர் வீசிய ஒரு சாதாரண பந்தை தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார் மைக் கேட்டிங். அதற்கு முன், அதற்குப் பின் எத்தனையோ பேர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி இருந்தாலும் சரித்திரத்தில் இடம் பிடித்தது இந்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்தான். இது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து யாரும் நிலைத்து ஆடாத நிலையில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இங்கிலாந்து.

ஆஸ்திரேலியாவிற்கும் மைக் கேட்டிங்குக்கும் அப்படி ஒரு பந்தம். எப்படி கேட்டிங்கின் விக்கெட்டை எடுத்த பின்னால் பல ஆண்டுகளுக்கு உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா கோலோச்சியதோ அதே போல 93ல் ஷேன் வார்னே முதன் முதலாக இங்கிலாந்து மண்ணில் வீசிய பந்து ‘நூற்றாண்டின் பந்து’ எனக் கிரிக்கெட் விமர்சகர்களால் புகழப்பட்டது. அந்தப் பந்தை சந்தித்து ஆட்டமிழந்து வெளியேறியவர் இதே கேட்டிங் தான். அன்றிலிருந்து ஷேன் வார்னேயின் புகழ் குறையவே இல்லை.  

Sunil Gavaskar

87 உலகக் கோப்பை போட்டிகள் ஒரு மாதம் இந்தியாவில் நடந்தது. அது இந்தியாவில் பல மாற்றங்களை, முக்கியமாக இந்திய விளையாட்டு அரங்கிலும், சமூகத்திலும் ஏற்படுத்தியது. விளையாட்டைப் பொறுத்த வரையில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் மக்களின் தேசிய விளையாட்டாக கிரிக்கெட் மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற அலங்கார வார்த்தையை ஏகப்பட்ட விஷயங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையிலேயே இந்தியர்கள் உணர்வொத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஐக்கியமான விஷயம் கிரிக்கெட். இதற்கு 87 உலக்கோப்பைப் போட்டிகள் ஆணிவேராக இருந்தன. 

ஹாக்கி, பேஸ்கட் பால், வாலி பால், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் படிப்படியாக இந்திய மக்களிடமிருந்து குறையத் தொடங்கியது. மற்ற விளையாட்டுகளில் இருந்து கிரிக்கெட்டை நோக்கி மக்கள் வரத்தொடங்கினார்கள். இந்தியர்களுக்கு அரட்டை அடிக்கும் மனோபாவம் இயல்பிலேயே உண்டு. மற்ற விளையாட்டுகளை விட இதில் சிலாகிக்க, அரட்டை அடிக்க ஏராளமான விஷயங்கள் இருந்தன. கிரிக்கெட் மட்டையை கையால் தொட்டுப்பார்க்காதவர் கூட நான்கு ஆட்டங்களைப் பார்த்தால்போதும் விற்பன்னர் போல் பேச ஆரம்பித்து விடலாம். இது இந்தியர்களுக்கு வாகாய் அமைந்தது. மக்களின் நேர் பேச்சுக்களில் அரசியல், சினிமாவுக்கு அடுத்து மூன்றாம் இடத்தைக் கிரிக்கெட் பெறத் தொடங்கியது. சில நட்பு வட்டாரங்களில் சினிமா, அரசியலையும் விஞ்சி முதல் பேசுபொருளாகக் கிரிக்கெட் இடம் பிடித்தது. வீட்டிலேயே கிரிக்கெட் பார்க்கப்படுவதால், பேசப்படுவதால் அடுத்த தலைமுறையினரும் கிரிக்கெட் ஆர்வலராக மாறினார்கள். 

இந்த உலக்கோப்பை கொண்டுவந்த இன்னொரு விஷயம் நுகர்வுக் கலாச்சாரம். தொலைக்காட்சி வீட்டில் இடம்பிடித்த ஆரம்ப வருடங்கள் அவை. ராமாயணம் ஒளிபரப்பப்பட்டு நாடு முழுவதும் பார்த்தார்கள். அதில் பொருள்களை விளம்பரப்படுத்த கடும் போட்டி இருந்தது. ஆனால், அது அதிகபட்சமாக ஒரு மணி நேர நிகழ்ச்சி. 52 வாரம் மட்டும். மேலும், ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்தான் விளம்பரங்கள் போட முடியும். ஆனால் உலக்கோப்பைப் போட்டியைப் பொறுத்த வரை அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை ஒரு மாதம் நடந்தது. தினமும் எட்டு மணி நேரம். ஓவருக்கு ஒரு முறை விளம்பரம் போடலாம். விக்கெட்டுகள் விழுந்தாலும். இது போக ஹைலைட்ஸ் சமயத்திலும் விளம்பரங்கள் நிறையப் போடலாம். எனவே நிறைய பொருள்களுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வந்தன. அவை வாங்கும் சக்தியுடையோரை சென்றும் அடைந்தன. ரெப்ரிஜிரேட்டரெல்லாம் ஆடம்பரப் பொருள் என்ற கேட்டகிரியிலிருந்து அத்தியாவசியப் பொருள் கேட்டகிரியில் சேருவதற்கெல்லாம் இந்த விளம்பரங்கள்தான் துணை நின்றன. 

Sunil Gavaskar

உலகக் கோப்பை போட்டிகள் முடிவடைந்த பின்னர் எல்லா அணிகளிலும் சில மாற்றங்கள் வந்தன. 30 ஆண்டுகள் கழித்து இந்த 2017 ஆம் ஆண்டில் பார்த்தால் இரண்டு அணிகள் தங்கள் நிலையிலிருந்து பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளன. அவை இலங்கையும், மேற்கு இந்திய தீவுகள் அணியும். தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறிய இலங்கை அணி, அடுத்த சில ஆண்டுகளிலேயே கிரிக்கெட் உலகின் முக்கிய அணிகளுள் ஒன்றாக மாறியது. உச்சமாக 1996 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. டெஸ்ட் அரங்கிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. இதனோடு ஒப்பிட்டால் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்து தேய்ந்து கொண்டே வருகிறது. பிரையன் லாரா, அம்புரோஸ் என அவ்வப்போது துருவ நட்சத்திரங்கள் அதன்பின்னர் தோன்றினாலும் ஒரு வலிமையான அணியாக மேற்கிந்தியத் தீவுகளை உணருவது குறைந்து கொண்டே வருகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி 2017ல் அதனால் தகுதி பெறக்கூட முடியாமல் போனது. இத்தனைக்கும் மேற்கிந்தியத் தீவின் ஆட்டக்காரர்கள் ஐ பி எல், பிக்பாஷ் போன்ற 20-20 டோர்னமென்டுகளில் பெரும் கிராக்கி உள்ளவர்கள். 

ஒரே வித்தியாசம்தான். கிரிக்கெட் வாரியம். இலங்கையின் கிரிக்கெட் வாரியம் தன்னுடைய அணி வெற்றி பெறும் அணியாக இருக்க வேண்டும் என நினைத்தது. டேவ் வாட்மோர் முதல் டாம் மூடி வரை, இப்போது கிரஹாம் போர்ட் எனத் தொடர்ந்து நல்ல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமித்து தன் அணிக்குப் பயிற்சியளிக்க வைத்தது. வீர்ர்களுடன் நல்ல உறவைப் பேணியது. அரசியல் செல்வாக்குடன் அவர்கள் வளைய வர அனுமதித்தது. மாறாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீர்ர்களுக்கு முறையான சம்பளம் வழங்கக் கூட யோசித்தது. அப்புறம் எங்கே உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்கள்? கிரிக்கெட்டில் உலகத்தரம் என்பதே முதலில் மேற்கிந்தியத் தீவுகளில் சென்று டெஸ்ட் தொடரை வென்று வருவதுதான் என்று இருந்தது. ஆனால் ஆட்டக்காரர்கள் வேறு பயிற்சியாளர்கள் வேறு. 

இலங்கையும், மேற்கிந்தியத் தீவுகளும் பொருளாதார ரீதியாக பெரிய நாடுகள் இல்லை. இருந்தும் அந்த நாடு கிரிக்கெட்டுக்குக் கொடுத்த முக்கியத்துவம் அணியை பலமுள்ளதாக்கியது. அமைப்பு சரியில்லாததால் திறமையான வீரர்கள் இருந்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தள்ளாடி வருகிறது.

விக்கெட் விழும்!

1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. 

மேற்கு நாடுகளுக்கு தெற்காசிய நாடுகள் என்றாலே ஒரு இளக்காரம். ‘இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டு கிடந்த நாடுகள்தானே...