வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (17/06/2017)

கடைசி தொடர்பு:12:10 (17/06/2017)

#ChampionsTrophy- இறுதிப் போட்டியில் வெற்றி பெற கோலியின் ப்ளான் இதுதான்!

மீண்டுமொரு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி. இரு நாட்டின் ரசிகர்கள் மட்டுமன்றி, உலகத்திலிருக்கும் அத்தனை கிரிக்கெட் ரசிகர்களும் ஞாயிற்றுக்கிழமை இந்த இரு அணிகளுக்கும் இடையில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியைத்தான் ஆர்வமுடன் நோக்கியுள்ளனர்.

விராட் கோலி

சமீபத்திய வரலாறு இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தாலும், பாகிஸ்தான், எப்படிப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று யூகிக்க முடியாத நிலைவுள்ளதால் போட்டியின்மீது கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. 

 

இறுதிப் போட்டிக்கு இரு நாடுகளும் கடுமையாகப் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது 'கேம்-ப்ளான்' பற்றிக் கூறியுள்ளார். அது குறித்து, 'சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நாங்கள் விளையாடியதைப் போலவே மீண்டும் ஒருமுறை விளையாட முயல்வோம். பாகிஸ்தான் அணியினரின் நேர்மறை மற்றும் எதிர்மறை விஷயங்களுக்கு ஏற்ப சில மாறுதல்களைச் செய்வோம் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், ஓர் அணியாக நாங்கள் மாற்ற வேண்டியது நிறைய இல்லை. பெரிதாக எதைப் பற்றியும் கவலைப்படாமல், எங்கள் திறமையை இறுதிப் போட்டியன்று வெளிக்கொண்டுவருவதில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும்.

கிரிக்கெட் ஒரு விசித்திரமான விளையாட்டு. ஆட்டத்தின் கடைசி பந்து போடப்படும் வரை, யார் வெற்றி பெறுவார் என்று சொல்ல முடியாது. அதேபோல, யாரையும் போட்டிக்கு முன்பே 'இவர்தான் வெற்றி பெறுவார்' என்றெல்லாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. எனவே, எங்கள் முழுத் திறனை வெளிப்படுத்திக் கோப்பையை வெல்ல முயல்வோம்' என்று கச்சிதமாகப் பேசி முடித்தார் கேப்டன் கோலி.