வெளியிடப்பட்ட நேரம்: 04:21 (17/06/2017)

கடைசி தொடர்பு:07:19 (17/06/2017)

'தலையை உயர்த்தி நாட்டுக்குத் திரும்புங்கள்..!' - வங்காள தேசத்துக்குப் புகழாரம் சூட்டும் சங்ககரா

இந்தாண்டு நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் ஆச்சர்யங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் பஞ்சமே இல்லை. அரையிறுதியில் கண்டிப்பாக இருக்கும் என்று யூகிக்கப்பட்ட அணிகள் லீக் போட்டியிலே கழன்று கொண்டது. இறுதிப் போட்டியில் இவர்கள் இருவருக்கு இடையில்தான் மேட்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் ட்விஸ்ட். ஆனால், இந்த பரபரப்பில் வங்காள தேசம் சாதித்த ஒரு விஷயம் பெரிதாகப் பேசப்படவில்லை. முதன்முறையாக வங்காளதேசம், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் நாக்-அவுட் ஸ்டேஜ் வரை வந்துள்ளது இப்போதுதான்.

Kumar Sangakkara

இதையொட்டிதான் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா, 'இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சாதித்ததை வைத்து தலையை உயர்த்தி வங்காள தேச அணியினர் நாட்டுக்குத் திரும்பலாம்' என்று கூறியுள்ளார்.   

அவர் மேலும், 'இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்காள தேசம் அனைத்துத் துறைகளிலும் வீழ்த்தப்பட்டது. ஆனால் அவர்கள் இந்தத் தொடரில் விளையாடியதை நினைத்து தலையை நிமிர்த்தி சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஷகிப் அல் ஹசன் போன்ற சீனியர் வீரர்களால் அந்த அணி சில ஆண்டுகளாக நல்ல முன்னேறம் அடைந்து வருகிறது. இந்தத் தொடர் முன்னேற்றங்கள் மூலம் அவர்கள் அடுத்து வரவுள்ள கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு ப்ளான் செய்து சாதிக்கலாம். அவர்களிடம் திறமை பொதிந்த அணி உள்ளது. ஆனால், சில நல்ல பௌலர்களை அணியில் இணைத்துவிட்டால், வெற்றிகள் பல அவர்கள் வசம் வர காத்திருக்கின்றன.' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.