வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (17/06/2017)

கடைசி தொடர்பு:17:17 (17/06/2017)

இந்தியா - பாகிஸ்தான் மோதல்... 2 ஆயிரம் கோடியில் பெட்டிங்!

ஓட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியை எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சாதாரண லீக் போட்டியில் மோதினாலே அனல் பறக்கும், அதுவும் இறுதிப் போட்டி என்றால் சொல்லவே வேண்டாம்.  சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் சந்திக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

India Pakistan


கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆதரவு பெருகப் பெருக, பெட்டிங்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.  பெட்டிங் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே, அதை தடுப்பது பெரும்பாடாக உள்ளது. இந்நிலையில், பெட்டிங்கிற்கு தடையில்லாத இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டி என்றால் விட்டு வைப்பார்களா?

நாளை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை வைத்து மட்டும் சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்பில் பெட்டிங் நடைபெறும் என்று அனைத்து இந்திய கேமிங் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் இந்திய அணிக்கு சாதகமாக பெட் கட்டுவார்கள் என்பதால் இந்திய அணி மீது பெட் கட்டுவார்களுக்கு குறைந்த அளவிலேயே பரிசு கிடைக்குமாம். அதாவது, இந்தியாவுக்கு 100 ரூபாய் பெட் கட்டினால், 147 ரூபாய் பரிசு கிடைக்குமாம்.

அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு 100 ரூபாய் பெட் கட்டினால், 300 ரூபாய் கிடைக்குமாம். இதனால் பாகிஸ்தான் அணி மீது அதிகளவு பெட் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகளை வைத்து மட்டும், ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பெட்டிங் நடக்கும் என்று கூறப்படுகிறது.