வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (18/06/2017)

கடைசி தொடர்பு:11:43 (18/06/2017)

இந்தியா வியூகமா... பாகிஸ்தான் ஆக்ரோஷமா..?! சாம்பியன்ஸ் கோப்பை யாருக்கு? #CT17 #INDvPAK

எட்டாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,  சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியைப் போலவே, இதுவும் இந்தியாவின் வலுவான பேட்டிங்கிற்கும், பாகிஸ்தானின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சுக்கும் இடையிலான சிறந்த மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா - பாகிஸ்தான்

மேலோட்டமாகப் பார்க்கும்போதே, கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் இந்தியா பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. ஆனால் அதற்காக பாகிஸ்தான் அணியை அவ்வுளவு எளிதாகக் கருதிவிட முடியாது. ஏனெனில், எந்த நிலையிலிருந்தும் திடீரென எழுச்சிபெற்று, எப்படிப்பட்ட எதிரணியினரையும் வீழ்த்தும் திறமை கொண்டவர்கள் என்பதை, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலேயே அவர்கள் நிருபித்துவிட்டார்கள்!

இந்திய அணியின் பேட்டிங் & பவுலிங் எப்படி?

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் அசத்தலான பேட்டிங் வரிசை, வேகம் - சுழல் என எந்தவித பந்துவீச்சுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதனை இந்த தொடர் முழுக்க பார்க்க முடிந்தது. குறிப்பாக 6 மாதங்களுக்கு பிறகு, ODI போட்டிகளில் களமிறங்கிய ரோஹித் சர்மா, இந்தியா சார்பில் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களை அடித்திருக்கும் ஷிகர் தவானுடன் இணைந்து, சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்து வருகிறார். அனைத்து ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா - ஷிகர் தவான் - விராட் கோலி ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர்தான் பேட்டிங் செய்துள்ளது.

ஷிகர் தவான்

மிடில் ஆல்டர் பேட்ஸ்மேன்களான யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை; இது ஒரு பிரச்னையாக இருக்காது என்றாலும், இக்கட்டான சந்தர்ப்பங்களில் களமிறங்கும்போது, அவர்கள் செட்டில் ஆவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே முன்வரிசையில் களமிறங்க விரும்பும் தோனியை, யுவராஜ் சிங்கிற்கு முன்பாக விராட் கோலி களமிறக்கலாம். இதனால் அவர் களத்தில் செட்டில் ஆவதற்கு அதிக ஓவர்கள் கிடைக்கும் என்பதுடன், இறுதி ஓவர்களில் தனது பாணியிலான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

புவனேஷ்வர் குமார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணியை சமநிலை அடையச் செய்யும் முக்கியமான நபராகத் திகழ்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர், கடந்த இரு ஆண்டுகளில் இந்தியா விளையாடி இருக்கும் ODI & T20 போட்டிகளில், தொடர்ச்சியாகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமான பெர்ஃபாமென்ஸுக்குப் பிறகு, உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. முகமது ஷமி அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டதுடன், 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ODI போட்டிகளில் விளையாடவில்லை. எனவே ஃபைனலில் அவர் அணியில் இடம்பிடிப்பது மிகவும் கடினம்.

ரவீந்திர ஜடேஜா

மேலும் முக்கியமான இறுதிப்போட்டியில், இதுபோன்ற ரிஸ்க்கை விராட் கோலி எடுக்கமாட்டார் என்றே தெரிகிறது. பாகிஸ்தான் அணியில் வலதுகை பேட்ஸ்மேன்களே அதிகமாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறுவதில், ரவீந்திர ஜடேஜாவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியிட வேண்டி இருக்கும். ஆனால் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறமையை வைத்துப் பார்க்கும்போது, ரவீந்திர ஜடேஜாவையே விராட் கோலி டிக் செய்ய வாய்ப்புள்ளது. நல்ல பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், இந்தத் தொடரில் முகமது ஷமிக்கு ஏற்பட்டிருக்கும் அதே நிலைதான், அஜிங்கிய ரஹானே மற்றும் தினேஷ் கார்த்திக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

பாகிஸ்தான் அணியின் ப்ளஸ், மைனஸ்...

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்புவரை, பாகிஸ்தான் தொடக்க ஜோடியான அசார் அலி - அகமது ஷேசாத் ஜோடியின் ரன் சராசரி 33 ஆகவே இருந்தது.  இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சொதப்பிய அகமது ஷேசாத்துக்குப் பதிலாகக் களமிறங்கிய பஹர் ஜமான், இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தொடக்க ஆட்டக்காரராக அதிரடியாக ஆடியதால், இறுதிப்போட்டியில் இவர் அசார் அலியுடன் இணைந்து ஆடுவார் என நம்பலாம். இந்தியாவுக்கு விராட் கோலி போல, பாகிஸ்தானின் ஒன் டவுன் பேட்ஸ்மேனாக இருக்கும் 22 வயதே நிரம்பிய பாபர் அசாம், வெறும் 26 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், அதில் 5 சதங்கள் அடித்துள்ளார் என்பதுடன், ODI சராசரியும் 45-க்கு குறைவில்லாமல் வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான்

இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் அவர் விரைவாக ஆட்டமிழந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இறுதிப்போட்டியில் அவரது வழக்கமான பேட்டிங் வெளிப்பட்டால், அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமையும். இவருக்கு அடுத்தபடியாகக் களமிறங்கும் முகமது ஹபீஸ் மற்றும் சர்ப்ராஸ் அகமது, சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இறுதிப் போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடுவது அந்த அணிக்கு நல்லது. இந்தியா என்றாலே குஷியாகிவிடும் ஷோயப் மாலிக், இந்தியாவுக்கு எதிராக 50 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

சர்ப்ராஸ் அகமது

எனவே அவர் களத்தில் கொஞ்ச நேரம் நீடித்துவிட்டாலே, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றிவிடுவார். பாகிஸ்தானின் புதிய ஆல்ரவுண்டரான ஃபாஹிம் அஷ்ரப், இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் தன்னை நிரூபிப்பதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் என நம்பலாம்.  இந்திய அணியின் பேட்டிங்குடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பது போல தெரிகிறது.  இருந்தாலும் போட்டியின் தினத்தில் அவர்கள் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் பாகிஸ்தானும், இந்தியாவைப் போலவே பலம் வாய்ந்த பந்துவீச்சைக் கொண்டிருக்கிறது.

முகமது ஆமிர், ஜூனைத் கான், ஹசன் அலி ஆகிய மூவர் கூட்டணி, பேட்டிங்கிற்குச் சாதகமான இங்கிலாந்து மைதானங்களில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கக் கூடும். இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் காயமடைந்த முகமது ஆமிர், இந்த போட்டியில் களமிறங்குவது பாகிஸ்தானுக்கு பெரிய ப்ளஸ்.  மேலும், காயமடைந்திருக்கும் வகாப் ரியாஸுக்குப் பதிலாக, விராட் கோலிக்குச் சவால் விடுத்த ஜூனைத் கான் அணியில் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், முகமது ஆமிருடன் பந்துவீச்சைத் துவக்கிய இமாத் வாசிமுக்கு, மீண்டும் ஒருமுறை அந்த வாய்ப்பை சர்ப்ராஸ் அகமது தருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.  

சாம்பியன்ஸ் டிராபி

எதனால் முக்கியத்துவம்?

சமூக அரசியல் காரணமாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் போட்டிகளை விட, இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி, அனைத்து வயதினராலும் சுவாரஸ்யமாக விரும்பிப் பார்க்கப்படுகிறது. எனவே இரு அணிகளில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும், இது மற்றுமொரு ஆட்டம்தான்; ஆனால் தீவிரமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு, பலத்த எதிர்பார்ப்புடன் தமது ஆதர்ஷ ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருக்கும் அணி வெற்றிபெற வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலிக்கு, பாகிஸ்தானின் பவுலர்களை எப்படி மைதானத்தின் நாலாபுறமும் அடித்துவிரட்ட வேண்டும் என்பது தெரிந்திருக்கும். ஆனால் அவர் ஒரு கேப்டனாகத் தற்போது, ஒட்டுமொத்த அணியையும் வீழ்த்துவதற்கான வியூகங்களுடன் களமிறங்க உள்ளார். இதனால் இதற்கு முன்பு விராட் கோலி எப்படி இருந்திருந்தாலும், ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான தொடர்களில், தனது கேப்டன்ஸி எந்தளவுக்கு இருக்கும் என்பதைக் காட்டுவதற்கான மேடையாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டி அமைந்திருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

விராட் கோலி

சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை இந்த இரு அணிகளும் 4 ஆட்டங்களில் மோதியுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில், மழையின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்தது. ஆனால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ள இந்தப் போட்டியில், இம்முறை வருண பகவான் எந்த இடையூறும் செய்யாமல், கிரிக்கெட் ரசிகர்களுடன் சேர்ந்து போட்டியை ரசிப்பார் என்றே நம்பலாம். ஓவலில் நடைபெறும் இந்த ஹை-வோல்டேஜ் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. 

மகேந்திர சிங் தோனி

உத்தேச இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

உத்தேச பாகிஸ்தான் அணி:

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அசார் அலி, பாபர் அசாம், பஹர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், ஷதப் கான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது ஆமிர்.

இந்தியா - பாகிஸ்தான் வீரர்களின் பிராக்டிஸ், பிரஸ் மீட், கோப்பை அறிமுகப் படங்கள்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க