வெளியிடப்பட்ட நேரம்: 01:46 (18/06/2017)

கடைசி தொடர்பு:09:17 (19/06/2017)

'நாங்கள் நினைத்தால் எதிரணிக்கு தோல்வி உறுதி..!' - எச்சரிக்கும் பாகிஸ்தான் பயிற்சியாளர்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் 'பரம-எதிரிகளான' இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வெகு நாள்கள் கழித்து கிரிக்கெட்டின் முக்கியமான தொடரில், அதுவும் இறுதிப் போட்டியில் மோதுவதால் இரு நாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், 'நாங்கள் மட்டும் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எதிரணிக்குத் தோல்வி உறுதி' என்று எச்சரித்துள்ளார்.

அவர் மேலும், 'முன்னர் இந்தியாவுடன் லீக் சுற்றில் விளையாடியபோது, அவர்கள் ஆட்டம் குறித்து விவாதித்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால், இம்முறை எங்கள் ஆட்டத்தையும் திறனையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

ஒரு விஷயத்தை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இந்தியா ஒரு சிறந்த அணி. அவர்கள் பிரமாதமான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஒரு மிகப் பெரும் மக்கள் கூட்டம் முன், பெரும் அழுத்தம் உள்ளப் போட்டிகளில் அவர்கள் தொடர்ச்சியாக விளையாடியதுதான். அதுதான் பாகிஸ்தானைவிட அவர்கள் அதிகமாக பெற்ற ஒரு விஷயம்.

முன்னர் நடந்த லீக் போட்டியின்போது, எங்கள் அணி வீரர்கள் அனைவரும் மிகவும் சாந்தமாக இருந்தனர். ஆனால், இப்போது ஆட்டத்தை முன்னோக்கி எதிர்பார்த்துள்ளனர். ஒரு நேர்மறையான சூழல் அணியினரிடையே நிலவுகிறது. இந்தியாவுக்கு எதிராக எங்கள் உச்சபட்ச ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். அப்படி நாங்கள் செய்தால், எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்.' என்று ஆருடம் சொல்கிறார்.