வெளியிடப்பட்ட நேரம்: 04:26 (18/06/2017)

கடைசி தொடர்பு:09:12 (19/06/2017)

'அவருக்கு கீழ் இந்திய அணி பல உச்சங்களைத் தொடும்!'- கோலிக்கு புகழாரம் சூட்டும் டிவில்லியர்ஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோலி குறித்து டிவில்லியர்ஸ், 'பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடப் போகும் இந்திய அணியை விராட் கோலி, செவ்வென வழி நடத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தற்போது இந்தியாவில், விராட் கோலிக்கு இருக்கும் அழுத்தம் வேறு யாருக்கும் இருக்காது என்றுதான் நினைக்கிறேன். எந்தவொரு நகரத்துக்குப் போனாலும் கோலியின் படத்தைக் கொண்டுள்ள ஏதாவதொரு பதாகையை பார்த்துக் கொண்டே இருக்க முடியும். இந்தியாவில் மிகவும் பிரபலமான மனிதராக கோலி இருப்பதால், அவர் மீது எப்போதும் அபரிமிதமான அழுத்தம் இருக்கும். ஆனால், அதை அவர் கையாளும் விதம் அசாத்தியமானது. 

எப்போதாவது கோலி, அவர் நினைத்தபடி திறமையை வெளிக்கொணர முடியாமல் தவித்தால், நெட் பயிற்சியில் கடுமையாக ஈடுபடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். இன்னும் இன்னும் கடுமையாக உழைத்து அவர் மீதிருக்கும் அதீத நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ முயல்வார். அவருடன் கடந்த ஆறு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் அல்லாமல், ஒரு வீரராக அணிக்கு அவர் கொண்டு வரும் பாசிட்டிவ்-வைப் அசாத்தியமானது. அவரின் கீழ் இந்திய அணி மேலும் மேலும் சிறக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.