வெளியிடப்பட்ட நேரம்: 06:13 (19/06/2017)

கடைசி தொடர்பு:12:54 (19/06/2017)

'இனியாவது பாகிஸ்தானுக்கு விளையாட வாருங்கள்'.. பாக்., கேப்டன் உருக்கம்!

'இனியாவது பாகிஸ்தானுக்கு எங்களுடன் கிரிக்கெட் விளையாட வாருங்கள்', எனப் பாக்., கேப்டன் சர்ஃபராஸ் அகமது பேட்டியளித்துள்ளார்.

 

சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.  இரு அணிகள் இறுதிப்போட்டியில் மோதுவதால், உலகம் முழுவதும் யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களின் முடிவில் 338 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானில் ஃபகர் சமான் சதம் விளாசினார்.


இதையடுத்து 339 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. தவான், ரோஹித், கோலி, யுவராஜ், தோனி என முன்னணி வீரர்கள் இந்திய அணி 50 ரன்கள் குவிப்பதற்குள் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான்

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ், 'இது ஒருநாள்.. இருநாள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய வெற்றி அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நெடிய நாள்களுக்கு இந்த வெற்றி நினைவில் நிற்கவேண்டிய ஒன்று. நீண்ட நாள்களாக துபாயைச் சொந்த கிரவுண்டாகக் கொண்டு விளையாடி வருகிறோம். இப்போது நாங்கள் சாம்பியன். இந்த வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும். இனியாவது மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து எங்களுடன் கிரிக்கெட் விளையாட வேண்டும்' என்றார் உருக்கமாக.