தர வரிசையில் பாகிஸ்தான் ஆறாவது இடம்! நான்கே போட்டிகளில் ஜமான் அபார முன்னேற்றம்

சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில், இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான். இதன்மூலம் ஐசிசி தர வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்துக்கு முன்னேறியது. இந்தியாவுக்கு எதிராக 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன்மூலம், தனிநபர் பிரிவிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு தர வரிசையில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான்

தர வரிசையில் இலங்கை, வங்கதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி, பாகிஸ்தான் ஆறாவது இடத்துக்கு முன்னேறியதன்மூலம், 2019 உலகக் கோப்பையில் நேரடியாகப் பங்குபெறும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தர வரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் இருக்கும் அணிகள், நேரடியாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். போட்டியை நடத்தும் நாடு என்ற வரிசையில், இங்கிலாந்து நேரடியாகத் தகுதிபெறும்.

சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதியில் இங்கிலாந்தையும் ஃபைனலில் இந்தியாவையும் வீழ்த்தியதன்மூலம், பாகிஸ்தானுக்கு 95 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்தியா 116 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, தர வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

வீரர்கள் வரிசையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி மற்றும் ஃபைனலில் சதம் அடித்த ஃபகார் ஜமான் இருவரும் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளனர். 13 விக்கெட்டுகள் எடுத்து, தொடர் நாயகன் விருதை வென்ற ஹசன் அலி, தர வரிசையில் ஏழாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். வெறும் நான்கு சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார் ஃபகார் ஜமான். ஆனால்,  இங்கிலாந்துக்கு  எதிரான அரையிறுதியில் அவர் அடித்த 57 ரன்கள், இறுதிப் போட்டியில் அடித்த 114 ரன்கள், அவரை தர வரிசையில் 97-வது இடத்துக்குக் கொண்டுசென்றது. நான்கு போட்டிகளில் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்த வீரர் இவராகத்தான் இருக்க முடியும்.  ஃபைனலில் தன் முதல் ஸ்பெல்லில் இந்திய டாப் ஆர்டரை ஆட்டம் காணவைத்த முகமது அமீர், 16 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தைப் பிடித்துள்ளார். சக வீரர் ஜுனைத் கான் 47 -வது இடத்துக்கு முன்னேறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!