வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (19/06/2017)

கடைசி தொடர்பு:21:21 (19/06/2017)

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு காரணமான 3 சிங்கங்கள்!

ஞாயிறன்று இந்தியா முழுவதுமே ஒருவித சோம்பல் நிலவியது. எப்போதுமே கூட்டம் நிரம்பிவழியும் ரங்கநாதன் தெருவே குறைவான கூட்டத்துடன்தான் இருந்தது. சென்னையின் இன்னொரு ஷாப்பிங் பகுதியான புரசைவாக்கத்திலும் அவ்வளவு கூட்டமில்லை. காரணம் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி.

இந்தியா

ஒன்றாக இருந்து பிரிந்த இருநாடுகளுக்கிடையில் இன்று வரையில் பல்வேறு பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக தீவிரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடக்கும் பிரச்னைகள் நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கின்றன. இந்தியாவின் தரப்பில் அத்தனை பிரச்னைக்கும் பாகிஸ்தானே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னைகளால், இரு நாடுகளுக்கு இடையே தனிப்பட்ட தொடர் ஏதும் நடத்தப்படுவதில்லை. ஐ.சி.சி நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்கும்.

விளையாட்டில் அரசியல் கூடாது என்று சொல்லப்பட்டாலும் இந்த முடிவை நாட்டு நலனுக்காக எடுத்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில்  ஹாக்கி உலக லீக் போட்டியின் அரை இறுதியில்  பாகிஸ்தானுடன் இந்திய ஹாக்கி விளையாடவேண்டி இருந்தது. ஒரு பக்கம் ஒட்டுமொத்த இந்தியாவே டிவியின் முன் அமர்ந்தும் இணையத்திலும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியையே பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இந்தப்போட்டியும் நடக்கத்துவங்கியது. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. ஆனால் இப்படி ஒரு போட்டி நடப்பது பலருக்கும் தெரியாது. பாகிஸ்தானுடன் இந்தியா தோற்றவுடன்தான் அதை தேற்றும் விதமாக ஹாக்கியில் பாகிஸ்தானை இந்திய அணி வென்ற செய்தியை பகிர்ந்து கொண்டனர் மக்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய மக்களின் மனநிலையைச் சமன் செய்யமுயன்ற இந்திய ஹாக்கி அணியின் நேற்றைய ஆட்டத்தின் சூப்பர் ஸ்டார்கள் இந்த மூவரும்தான். இந்தச் சிங்கங்களின் வேட்டையில்தான் பாகிஸ்தான் வீழ்ந்தது. 

ஹாக்கி

தல்விந்தர் சிங்

"ஹாக்கி விளையாடாத நேரத்தில் என்ன செய்வீர்கள்?" 

"அப்படியான நேரம் குறைவுதான். அப்போது விடியோ கேம் விளையாடுவேன்" என்று பதில் சொன்ன இந்த விளையாட்டுப்பிள்ளையின் வயது 23. பஞ்சாபைச் சேர்ந்த தல்விந்தர் சிங் ரயில்வே அணிக்காக விளையாடத் துவங்கியவர். "எப்போதுமே எனக்கு பெனால்டி கார்னர்களின் மீதுதான் கண், எதிரிகளின் கண்களின் மண்ணைத் தூவி கோல் போடமுடிகிற அதிக வாய்ப்பு அப்போதுதான் கிடைக்கும்". இது அதே பேட்டியில் தல்விந்தர் சொன்னது. பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியிலும் அப்படி ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தித்தான் தல்விந்தர் தன் முதல் கோலினை போட்டார். அதன் பின் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இது ஆட்டத்தின் முதல்பாதியிலே முடிந்து விட்டது. மனதளவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் சோர்வைக் கொடுத்த கோல்கள் அவை இரண்டும். இந்திய ஹாக்கி அணியின் வளமான எதிர்காலம் அதன் ரசிகர்களின் கண்களில் தெரியத் துவங்கியிருப்பதற்கு தல்விந்தரும் ஒருகாரணம்.

இந்தியா ஹாக்கி

ஹர்மன்ப்ரீத் சிங்

பக்கா விவசாயி. பள்ளிக்குப் போய்விட்டு வந்தவுடன் தோட்ட வேலை பார்க்கும் அளவுக்குப் பொறுப்பான பையன். அப்பா இல்லாத நேரத்தில் அவரின் டிராக்டரை எடுத்து வெறும் வயலில் செம ஓட்டு ஓட்டுவது பொழுதுபோக்கு. இவரது ட்ராக் ஃப்ளிக்கிங் டெக்னிக் உலக அளவில் பிரபலம். இந்த திறன் எப்படி வந்தது எனக் கேட்டபோது "அப்பாவின் டிராக்டரில் உள்ள கியர் ராடுகள் கடினமாக இருக்கும் அதை மாற்றி மாற்றிப் போட்டு ஓட்டிப் பழகியது ட்ராக் பிளிக்கிங்கிற்கு உதவுகிறது" என்றார். இந்திய ஹாக்கி லீக் போட்டிக்காக மும்பை தபாங் அணி இவரை 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஆட்டத்தின் 13 நிமிடமே முதல் கோலை போட்டு பாகிஸ்தானை பேஸ்த் அடிக்க வைத்தவர் இந்த 21 வயது ஹர்மன்ப்ரீத் சிங்.

இந்தியா, ஹாக்கி

அக்சதீப் சிங் 

சுரேந்தர் பால் சிங் என்கிற பஞ்சாப் மாநில போலிஸ் இன்ஸ்பெக்டரின் இளையமகன். சுரேந்தருக்கு ஹாக்கி வீரராகி இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்கிற மிகப்பெரிய கனவு இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. தன் கனவை தன் மகன்களின் மூலம் அடைய ஆசைப்பட்டார். அவரது ஆசையை இரண்டு மகன்களுமே நிறைவேற்றினர். அக்சதீபின் அண்ணன் பிரதீப் சிங்கும் இந்திய அணிக்கு விளையாடியவர்தான். இந்திய ஹாக்கி லீக்கில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் இவர்தான். இவரை 54 லட்சத்துக்கு உத்திரபிரதேச விசார்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. கடந்த சில வருடங்களில் இந்திய ஹாக்கி அணி அந்நியமண்ணில் பெற்ற அனைத்து வெற்றிகளிலும் அக்தீப் சிங்கின் கோல்களும் இருந்தன. 

இந்த மூன்று சிங்கங்கள் ஆடிய வேட்டைதான் நேற்று லண்டனில் நடந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் இவர்களின் வேட்டை தொடர வேண்டும் என்பதே ஹாக்கி மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்