வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (20/06/2017)

கடைசி தொடர்பு:08:57 (20/06/2017)

காலங்காலமாக நியூசிலாந்து கறுப்புக்குதிரைதான்..! 1987 உலகக் கோப்பை கிரிக்கெட்.. தெரிந்ததும் தெரியாததும்! Gentleman to CommonMan மினி தொடர் பாகம் 4

 

1987 உலகக் கோப்பை

பாகம் 1/ பாகம் 2பாகம் 3

1987ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை முடிவடைந்து 30 வருடங்கள் ஆகப்போகின்றன. தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான பழக்க வழக்கங்கள் ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டன.  ‘அந்த வீட்டில ரொம்ப மார்டன். அவங்க பொண்ணுக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்திருக்காங்க’ என்பதில் இருந்து ‘அந்தக் குடும்பம் ரொம்ப கட்டுப்பெட்டியானது. பொண்ணுக்கு சுடிதார் தவிர வேறு எதுவும் வாங்கித்தரமாட்டாங்க...’ என்று மாறிவிட்டது. ‘எங்க வீட்ல விசேஷம். அதனால தியேட்டருக்குப் போகாம முதன் முறையா டிவி டெக் வாடகைக்கு வாங்கிப் படம் பார்த்தோம்’ என்பது ‘வீட்ல விசேஷம், அதனால குடும்பத்தோட எல்லோரும் சினிமா தியேட்டருக்குப் போனோம்’ என்று மாறிவிட்டது. ஆனால் மாறாதது ஒன்று. அதுதான் இங்கிலாந்து அணி. தன்னுடைய முதல் மற்றும் உலகின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி விளையாடி 140 ஆண்டுகள் ஆகின்றன. அன்றிலிருந்து இன்றுவரை இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை.

அதற்குக் காரணம் அங்கு உள்ள தொழில்முறை கிரிக்கெட் அணிகள். இந்தியாவில் ஐ பி எல் ஆரம்பித்து10 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனாலும் 20-20 ல் ஏராளமான திறமைகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் கவுன்ட்டி கிளப்கள் என அழைக்கப்படும் தொழில் முறை அணிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகின்றன. அந்த அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணி வெல்ல வேண்டுமென்பதற்காக வெளிநாட்டு ஆட்டக்காரர்களை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்வார்கள். விசேஷ பயிற்சிகள் அளிப்பார்கள். எனவே இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களிலிருந்து பந்துவீச்சாளர் வரை தேர்ந்தெடுக்க ஏராளமான சாய்ஸ்கள் இருக்கும்.

இத்தனை ஆண்டுகளில் எந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டாலும் அது எல்லா நாடுகளுடனும் போட்டி போடும் அணியாகவே இருக்கும். சிஸ்டம் சரியானதாக இருந்தால் அதில் இருந்து சரியானவை தொடர்ந்து கிடைக்கும் என்பதற்கு இது உதாரணம். ஆனால் இங்கிலாந்து எல்லா அணிகளை விடவும் மேன்மையான அணி என்ற  பட்டத்தை இந்த 140 ஆண்டுகளில் பெற்றதே இல்லை. அதற்கு காரணமும் இந்த சிஸ்டம் சரியாக இருப்பதுதான். ஒரு நல்ல சிஸ்டம் சிறந்தவற்றை தொடர்ச்சியாகத் தரவல்லது. ஆனால் மிகச் சிறந்தவற்றை, மேன்மையானதை அதனால் தர முடியாது.  ஏனென்றால் அது குறிப்பிட்ட வரையறைக்குள் நடத்தப்படுவது. கலையிலும், விளையாட்டிலும் வரையறைக்குள் நடத்தப்படுபவற்றில் இருந்து மேன்மையை எதிர்பார்க்க முடியாது. 

உலகக் கோப்பை

இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தொழில்முறைப் போட்டிகளில் ஆடுவதால் தங்களின் தேசிய அணிக்கு ஆடும்போது கிரிக்கெட்டில் வெற்றிக்குத் தேவையான “கில்லர் இன்ஸ்டிங்ஸ்”இல்லாமல் விளையாடுவார்கள், நாளை இன்னொரு நாளே என்பதைப் போலத்தான் அவர்கள் மனநிலை இருக்கும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் வேண்டுமென்றால் அவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் ஆடுவார்கள். ஒருமுறை இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது இரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கு இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. தேசிய அணியில் இருந்த நான்கைந்து ஆட்டக்காரர்கள் தங்கள் கவுன்ட்டி அணிக்காக மூன்றுநாள் போட்டிக்கு  விளையாடப் போனார்கள். இப்படி ஓய்வே இல்லாமல் விளையாடினால் எப்படி முக்கிய போட்டிகளை வெல்லமுடியும்? இதனால்தான் இன்னும் அவர்களால் உலக கோப்பையை ஒருமுறைகூட வாங்க முடியவில்லை. 

இங்கிலாந்து அணியைப் போலவே ஆஸ்திரேலிய அணியுடன் போட்டி மனப்பான்மையில் இருக்கும் அணி நியூசிலாந்து. இந்த அணியும் கடந்த 30 ஆண்டுகளாக அதே நிலைமையில்தான் இருக்கிறது.

முப்பது, நாற்பது ஆண்டுகளாகவே ஒரு அணியை, இந்த அணி ஒரு எதிர்பாராத ஆச்சர்யங்களை நிகழ்த்தக்கூடிய கறுப்புக்குதிரை, இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பு இதற்கு உண்டு என்று குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அது நியூசிலாந்து அணிதான். எந்த அணியுமே இத்தனை ஆண்டுகள் கறுப்புக் குதிரையாக இருந்ததே இல்லை. அலுவலகமாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் போன்ற குறைந்த பட்சம் ஒரு சிறு குழுவாவது ஒழுங்காக ஆடி ஜெயிக்கும் ஆட்டமாக இருந்தாலும் சரி. அதன் தலைமையை நோக்கிய ஒரு ஈர்ப்பு கீழ் உள்ளவர்களிடம் இருக்க வேண்டும். அது அந்த மேலாளர் அல்லது கேப்டனுடைய தனித்திறமையாக இருக்கலாம், அல்லது இவர் நமக்கு நல்லது செய்வார் என்ற எண்ணமாக இருக்கலாம். அல்லது இவருடன் இருந்தால்தான் நமது பிழைப்பு ஓடும் என்ற சர்வைவல் காரணமாகவும் இருக்கலாம். ஒரு கடினமான வேலை வரும்போது அந்த மேலாலளருக்கு மற்றவர்கள் தங்கள் பணியை செய்தாலும், அவருக்கு நெருங்கிய குழு அந்த நேரத்தில் தன் தலைமேல் அந்தப் பணியை போட்டுக்கொண்டு வேலை செய்யும். இது நல்ல நடைமுறையா எனத் தெரியவில்லை. ஆனால் இது பல சமயம் வெற்றிகளைக் கொடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் இதுபோல அணித்தலைவருக்கு அணுக்கமான குழு என்று ஒன்று அமைந்தது மிகக்குறைவு. 1992 உலக்கோப்பையில் மார்ட்டின் குரோவின் தலைமையில் அவர்கள் ஆடும்போது கிரேட் பாட்ச், தீபக் பட்டேல், ஆண்ட்ரு ஜோன்ஸ் என அவருக்கு அணுக்கமான சிலர் இருந்தார்கள். மற்றபடி நியூசிலாந்து வீரர்களிடையே ஒரு குழுவாக இணைந்து அடுத்தவருக்கு உதவி விளையாடும் சூழல் குறைவாகவே இருந்து வருகிறது. மற்ற நாட்டு அணிகளுக்கும் ஆசிய நாட்டு அணிகளுக்கும் இடையே இருக்கும் முக்கிய வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.  இம்ரான் கான், அர்ஜுனா ரணதுங்கா, சவ்ரவ் கங்குலி, மகேந்திர சிங் தோனி என ஆசியாவின் மிகச்சிறந்த கேப்டன்களை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு அணுக்கமான ஒரு குழு எப்போதும் உடன் இருக்கும் அல்லது அணியில் உள்ள எல்லோருமே அணித்தலைவரின் மீது ஒரு பிரியத்தில் இருப்பார்கள். 

வெள்ளையர்களிடம் அது போல தனி மனித ஸ்துதி இருக்காது என்பதால் அவர்கள் இயல்பாகவே ஆசிய அணி வீரர்கள்போல இருக்க மாட்டார்கள். ஆனால், ஒரு பந்தில் ஆட்டம் தலைகீழாக மாறிப் போய் விடுகிற கிரிக்கெட் போன்ற ஆட்டத்துக்கு அணி வீரர்களிடையே ஒரு அணுக்கமான சூழல் அவசியம். எல்லோரும் சிறப்பாக ஆடும் ஆஸ்திரேலியா போன்ற அணியில், சிக்கலான கட்டங்களில் யாராவது ஒருவர் தேவையான திருப்புமுனையைத் தந்துவிடுவார். ஆனால், நியூசிலாந்து போன்ற அணியில் அனைவரிடமும் ஒரு ஒருங்கிணைப்புத் தேவை. அது அங்கே அமையவே இல்லை. அதனால்தான் எந்த கோப்பைக்கான போட்டியிலும் நியூசிலாந்து  வீரர்களின் பட்டியலைப் பார்க்கும்போது ‛நல்லாத்தானே இருக்கு...’ எனத்தோன்றும். எனவே வல்லுநர்களும் இந்த கோப்பையில் நியூசிலாந்து கணிக்க முடியாத அணி. கோப்பையை வென்றாலும் வென்று விடும் என்பார்கள். ஆனால் அது பெரும்பாலும் வெறுங்கையுடனே திரும்பும். சர் ரிச்சர்ட் ஹேட்லி, ஜெப் குரோ, மார்ட்டின் குரோ, ஜான் ரைட் என வலுவான ஆட்டக்காரர்கள் இருக்கும்போது கூட அந்த அணியால் உலக அளவில் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. 

இங்கிலாந்து, நியூசிலாந்தைப் போலவே 30 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் இன்னொரு அணி ஜிம்பாப்வே. பொதுவாக சில வீடுகளில் விசேஷங்கள் நடக்கும் போது சில உறவினர்களைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். “அவங்க வந்தா சந்தோஷம் வராட்டி ரொம்ப சந்தோஷம்” என்று. அது போலத்தான் ஜிம்பாப்வே அணியையும் போட்டி நடத்துபவர்கள் எண்ணிக் கொள்வார்கள். அவர்கள் உள்ளே வருவதால் போட்டித்தொடரில் எந்த சுவராஸ்யமும் கூடப்போவதில்லை. பார்வையாளர்களும் அதிகரிக்கப் போவதில்லை. அவர்கள் நாட்டில் நிலவும் பிரச்னைகளும் இதற்கு முக்கிய காரணம். ஆனாலும் பிரச்னைகள் உள்ள இடங்களின் மக்கள் தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்ள கலை, இலக்கியம், விளையாட்டு என்றுதான் திசை திரும்புவார்கள். ஆனால், ஜிம்பாப்வேயில் என்னவோ பெருவாரியான மக்களின் ஆதரவு கிரிக்கெட்டின் பக்கம் திரும்பவில்லை. 

Philip DeFreitas 1987 உலகக் கோப்பை

பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து ஆடீயோ கேசட், சிடிக்களாக வெளியிட ஒரு நிறுவனம் முடிவு செய்தது. பட்டிமன்றங்களில் நேரடியாக பதிவு செய்தால் ஒலியமைப்பு துல்லியமாக இருக்காது என்று, பேச்சாளர்களை அழைத்து  தனி அறையில் பதிவு செய்ய தீர்மானித்தது. அவர்களுக்கு நன்றாக பேசவே வரவில்லை. பின்னர் ஒரு பத்துபேரைக் அழைத்து வந்து,  இடை இடையே கைதட்ட வைத்தார்கள். பேச்சாளர்களும் நன்றாகப் பேச ஆரம்பித்தார்கள். எந்த ஒரு கலையானாலும் சரி, விளையாட்டானாலும் சரி, பார்வையாளர்கள் இல்லாவிட்டால் அது மேன்மையுறாது. அப்படி யார் பாராட்டாமலும் ஒருவர் தொடர்ந்து சிறப்பான படைப்புகளை வழங்கிக் கொண்டேயிருக்கிறார் என்றால் அவர் மிகப்பெரும் ஆளுமையாக இருப்பார். ஜிம்பாப்வே மற்ற நாடுகளில் விளையாடும் மேட்சுகளை விடுங்கள், அவர்கள் நாட்டில் விளையாடும் ஆட்டங்களிலேயே மைதானங்கள் காலியாகத்தான் இருக்கும். அருமையான கவர் டிரைவ் அடித்து நிமிர்ந்தாலோ, அட்டகாசமான அவுட் ஸ்விங்கரை வீசி பேட்ஸ்மெனை திணறடித்த பின்னாலோ யாராவது கைதட்டினால் தானே அது முழுமை அடையும். அடுத்த உச்சத்துக்கு மனம் ஆசைப்படும். ஆனால் அது எதுவுமே ஜிம்பாப்வே பிளேயர்களுக்கு பெரும்பாலும் நடக்கவே இல்லை.

இதே சூழ்நிலையை வங்கதேசத்துக்குப் பொருத்திப் பார்க்கலாம். அங்கே அவர்கள் சாதாரணமாக விளையாடினாலும் ரசிகர்கள் ஆரவாரிக்கிறார்கள். வெற்றி பெற்றுவிட்டாலோ உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விடுகிறார்கள். அவர்கள் உலக்கோப்பையெல்லாம் வாங்கிவிட்டால் அந்த நாட்டிற்கு காலவரையற்ற விடுமுறை கூட அறிவித்து விடுவார்கள். அந்த நாடு தப்பித்தவறி அமெரிக்கவை போரில் வென்றுவிட்டால் கூட அவ்வளவு சந்தோஷம் அடையமாட்டார்கள். இந்த அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதாலேயே அவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என நினைக்கிறார்கள். தோற்றால் கன்ணீர் சிந்த நமக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே ஆட்டக்காரர்களுக்கு பெரும்பலம் தரும். இம்மாதிரி ஜிம்பாப்வே அணிக்கு ஒரு ஆதரவுத்தளம் அமையவில்லை என்பது அந்த அணிக்கு ஒரு இழப்பே.

இன்னிங்ஸ் தொடரும்

1992ல் ஜாண்டி ரோட்ஸ் செய்த பீல்டிங்தான் மற்ற அணிகளின் பீல்டிங்கில் ஒரு பெரிய மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தார்...

மேற்கு நாடுகளுக்கு தெற்காசிய நாடுகள் என்றாலே ஒரு இளக்காரம். ‘இங்கிலாந்திற்கு அடிமைப்பட்டு கிடந்த நாடுகள்தானே...

கவாஸ்கரை வெறுத்த கொல்கத்தா ரசிகர்கள்..!  எதிரணி கேப்டனின் வெற்றிக்கு மாலை மரியாதை செய்தவர்கள் கொல்கத்தா ரசிகர்கள்தான்