வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (20/06/2017)

கடைசி தொடர்பு:09:58 (21/06/2017)

'இந்தியக் கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்!

'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

டிராவிட்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறித்து கேள்விகள் எழுந்தன.

இதையொட்டித்தான் ராகுல் டிராவிட்டும், 'தோனி மற்றும் யுவராஜ் இந்திய அணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து தேர்வுக் குழுதான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அணியில் அவர்களின் ரோல் என்ன? அவர்கள் இருவருக்கும் அணியில் இடம் உண்டா? போன்ற கேள்விகளுக்குக் சீக்கிரம் விடை காண வேண்டும். இன்னும் ஓர் ஆண்டுக்குள் இளம் வீரர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான், எப்படிப்பட்ட அணியை வைத்து உலகக் கோப்பையில் பங்கேற்கலாம் என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். யுவராஜும் தோனியும் இன்னும் சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நன்றாக ஆட்டத்தை முடித்துக் கொடுக்கின்றனர். அதைப் பற்றி யாரும் குறை கூற முடியாது. இருப்பினும் அவர்கள் குறித்து ஒரு நிலையான முடிவை இந்திய தேர்வாளர்கள் எடுத்தே ஆக வேண்டும்.' என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.