'எங்களுக்குள் ஒத்துவரவில்லை'... கோலியை மறைமுகமாகச் சாடிய கும்ப்ளேயின் கடிதம்!

kumble

தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமாசெய்த கும்ப்ளே, வெளிப்படையான கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே சமீபத்தில் மோதல் அதிகரித்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபி தோல்விக்குப் பின்னர், நேற்று தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார் கும்ப்ளே.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலும், பயிற்சியாளராக கும்ப்ளேவே நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், அவரின் இந்தத் திடீர் ராஜினாமா பலரையும் அதிர்ச்சியடையவைத்தது. இந்த நிலையில், நேற்று தனது விலகல்குறித்து வெளிப்படையான கடிதம் ஒன்றை வெளியிட்டார் கும்ப்ளே.

kumble

அந்தக் கடிதத்தில், 'நான் பதவியில் இருப்பது பற்றியும், நான் தரும் பயிற்சியின் 'ஸ்டைல்' பற்றியும் கேப்டனுக்கு மாற்றுக் கருத்து இருப்பதாக பிசிசிஐ நிர்வாகிகள் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு கேப்டனுக்கும் கோச்சருக்கும் இடையிலான வரையறையைப் பெரிதும் மதிப்பவன் நான். எனக்கும், கேப்டனுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க பிசிசிஐ பெரிதும் முயற்சித்தது. ஆனால், இருவருக்கும் ஒத்துவரவில்லை என்பதால், விலகிச்செல்வதே மேல் என நான் நினைக்கிறேன். 

முறைகள், ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, நேர்மை, கூடுதலான திறன் ஆகியவற்றை ஒரு பயிற்சியாளராக நான் அணிக்கு எடுத்து வந்தேன். இணைந்து செயல்படுவதற்கு, இந்த முயற்சிகள் மதிக்கப்பட வேண்டும். இந்தச் சூழ்நிலையில், கிரிக்கெட் வாரியம் விரும்பும் நபரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதே சரியானது என்று கருதுகிறேன். அனைவருக்கும் நன்றி ', எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!