வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (21/06/2017)

கடைசி தொடர்பு:13:58 (21/06/2017)

அஷ்வின், ஜடேஜா பந்துவீச்சு குறித்து டிராவிட் புதிய கருத்து

'அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சு, கடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று ராகுல் டிராவிட் கருத்துத் தெரிவித்துள்ளார்.


சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்குப் பிறகு, தனியார் கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் பேசிய ராகுல் டிராவிட், 'இந்திய அணி இனி  2019 உலகக்கோப்பையை மனதில் வைத்துதான் செயல்பட வேண்டும். இந்திய சுழல் கூட்டணியான அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரால் ஃப்ளாட்(flat) ஆடுகளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த மாதிரியான நேரங்களில், ரிஸ்ட் சுழல் பந்து வீச்சாளர்களை (wrist spinners) பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள குல்தீப் யாதவ், இந்த வகைப் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் உலகக்கோப்பையில், தோனி மற்றும் யுவராஜின் நிலைகுறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். சாம்பியன்ஸ் ட்ராபி தோல்வியை அடுத்து, கும்ப்ளே தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியை நேற்று ராஜினாமாசெய்தார். அடுத்த பயிற்சியாளராக டிராவிட்டுக்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. டிராவிட், தற்போது இந்திய இளையோர் மற்றும் இந்திய அணிகளின் பயிற்சியாளராக உள்ளார்.