வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (21/06/2017)

கடைசி தொடர்பு:18:56 (21/06/2017)

இவர்கள்தான் சாம்பியன்ஸ் டிராபியின் 11 சூப்பர் ஹீரோஸ்! #BestXI

மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவுற்றிருக்கிறது. இந்தத் தொடரில் விளையாடிய வீரர்களில் மிகச் சிறப்பாக விளையாடிய 11 பேரைக்கொண்டு கனவு அணி உருவாக்கியிருக்கிறோம். தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள், அணிக்கு மேட்ச் வின்னராக திகழ்ந்தவர்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி கனவு அணியில் நான்கு இந்திய வீரர்கள், மூன்று பாகிஸ்தான் வீரர்கள், இரண்டு இங்கிலாந்து வீரர்கள், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளில் இருந்து தலா ஒரு வீரர் எனத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

யார் யாருக்கு அணியில் இடம்? 

 சாம்பியன்ஸ் டிராபி கனவு அணியில்  ஷிகர் தவான்

1. ஷிகர் தவான் : 

இந்திய அணிக்கு வலுவான தொடக்க வீரராகச் செயல்பட்டிருக்கிறார் ஷிகர் தவான். ஐந்து போட்டிகளில் இரண்டு அரை சதம், ஒரு சதம் உட்பட 338 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருநாள் ஃபார்மெட்டில் ஐசிசி தொடர்களில் ஃபார்முக்கு வந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் . 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று தொடர்களிலும் இந்திய அணிக்காக அதிக ரன்களைக் குவித்தவர் ஷிகர் தவான். லீக் சுற்றில் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளைப் புரட்டி எடுத்தார். இந்தத் தொடரில்  அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் இவர்தான். கனவு அணியில் எளிதில் தொடக்க வீரர் இடத்தைப் பிடித்திருக்கிறார் தவான். 

ஃபகர் ஜமான்

2. ஃபகர் ஜமான் : 

லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய  சேஷாத் சொதப்பித் தள்ளினார். அடுத்த போட்டியில் சேஷாத்தை அணியிலிருந்து நீக்கிவிட்டு ஃபகர் ஜமானை அறிமுகப்படுத்தினார் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது. ஃபகர் வரவுக்குப் பிறகு, அணியின் பலம் பல மடங்கு கூடியது. தொடக்க வீரராக அசார் அலியும் ஃபகரும் அசத்தினார்கள். இதுவரை நான்கு போட்டிகளில் இரண்டு அரை சதம், ஒரு சதம் உட்பட 252 ரன்களைக் குவித்திருக்கிறார் ஜமான். முதன்முதலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானது; முதல் அரை சதம் அடித்தது; முதல் சதம் அடித்தது; முதல் ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியது; தான் பங்கேற்ற முதல் ஐசிசி தொடரின்  இறுதிப்போட்டியிலேயே  சதம் அடித்தது, இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வாங்கியது எனப் பல்வேறு விஷயங்களையும் வெறும் நான்கு போட்டிகளில் முடித்துவிட்டார் ஃபகர். அவருக்கு பல உயரங்கள் காத்திருக்கின்றன. அசார் அலி, தமீம் இக்பால், அலெக்ஸ் ஹேல்ஸ், ரோஹித் ஷர்மா எனப் பல வீரர்கள் போட்டிக்கு இருந்தாலும் அறிமுகமான முதல் தொடரிலேயே அசத்தல் ஆட்டம் ஆடியதாலும்,மேட்ச் வின்னராக திகழ்ந்ததாலும் மற்றவர்களை ஓரங்கட்டி கனவு அணியில் தவானுடன் இன்னிங்சை தொடங்குகிறார் ஃபகர் ஜமான்.  

  விராட் கோலி

3. விராட் கோலி : 

இந்தத் தொடரில் மூன்று அரை சதங்கள் விளாசியவர்கள் இரண்டு பேரில் ஒருவர் விராட் கோலி. ஐந்து போட்டிகளில் மூன்று முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் கோலி. இத்தொடரில் கோலியின் சராசரி 129. புள்ளவிவரங்களே விராட் கோலியின் வலிமையை பறைசாற்றிவிடும். இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் ஐந்து ரன்களில் அவுட் ஆனார். இலங்கையுடனான ஆட்டத்திலும் டக் அவுட். எனினும் கோலி தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் அவரது பொறுப்பான பேட்டிங். லீக் சுற்றில்  பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இறுதிக்கட்டத்தில் அடித்து நொறுக்கினார். தென் ஆப்ரிக்காவுடனான ஆட்டத்தில்  குறைந்த ரன்களை துரத்தினாலும், தனது  விக்கெட் விழுந்துவிட்டால் ஆட்டம் மாறிவிடலாம் என்பதை உணர்ந்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிபெறச் செய்தார். வங்கதேசத்துடன் நேர்த்தியாக விளையாடி ஆட்டமிழக்கமால் 96 ரன்கள் குவித்தார். இந்த காரணங்களே அவரைத் தேர்ந்தெடுக்க போதுமானதாக இருந்தன.

கேன் வில்லியம்சன்

4. கேன் வில்லியம்சன் : 

நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன்சியை சரிவரச் செய்யவில்லையென்றாலும் பேட்டிங்கில் பின்னியெடுத்தார். அவர் களத்தில் நின்ற வரை எல்லா போட்டிகளிலும் நியூசிலாந்து நல்ல நிலைமையில் இருந்தது. அவரது விக்கெட் விழுந்ததும் தாறுமாறாக எதிரணிக்கு வெற்றி வாய்ப்பு எகிறியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் என விளையாடிய மூன்று அணிகளுக்கு எதிராகவும்
50 ரன்களுக்கு மேல் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளாசிய சதமும் கிளாஸ் இன்னிங்ஸ். 

பென் ஸ்டோக்ஸ்

5. பென் ஸ்டோக்ஸ் :

இந்தத் தொடரில் நூறு ரன்களுக்கு மேல் குவித்தவர்களில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக சராசரி வைத்திருப்பவர் பென் ஸ்டோக்ஸ். பேட்டிங் பிடித்த மூன்று இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 184 ரன்கள் குவித்திருக்கிறார். சராசரி 92. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 35/3 என  அணி தடுமாறியபோது இயான் மோர்கனுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார் ஸ்டோக்ஸ். அவரது மேட்ச் வின்னிங் சதத்தால் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்குத்  தகுதிபெற இயலாமல் மெல்பர்னுக்கு மூட்டைகட்டியது. பவுலிங்கில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இவரை பேட்ஸ்மேன் என்ற அடிப்படையிலே அணியில் சேர்த்திருக்கிறோம். எனினும் இவர் 10 ஓவர்களும் வீசக்கூடிய நல்ல பவுலர் என்பதால், அணிக்கு பெரும் பலம் கூடுகிறது.

சர்ஃபராஸ் அகமது

6. சர்ஃபராஸ் அகமது : 

ஐந்து போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களில்தான் இவருக்கு பேட் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒரு அரை சதம் உட்பட 76 ரன்கள் எடுத்திருக்கிறார். லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராகத் துவண்டுபோய் கிடைந்த பாகிஸ்தான் வீரர்களைத் தேற்றி தன்னம்பிக்கையை விதைத்ததில் சர்பராஸுக்கு மிகப்பெரிய பங்குண்டு. குறைந்தது ஒரு வெற்றியுடனாவது ஊருக்குத் திரும்புமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கோப்பையுடன் திரும்பி பாகிஸ்தான் மக்களுக்கு உற்சாகமளித்திருக்கிறார் சர்ஃபராஸ் அகமது. விக்கெட் கீப்பிங்கிலும் ஓரளவு சிறப்பாகவே பணியைச் செய்தார். தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் சரியாகச் செய்ததில் கனவு அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகத் தேர்வானது மட்டுமின்றி கேப்டனாகவும் தேர்வு செய்யப்படுகிறார். ஐசிசியும் தனது கனவு அணியில் இவரை கேப்டனாக அறிவித்துள்ளது. 

ஹர்டிக் பாண்டியா

7. ஹர்டிக் பாண்டியா : 

ஒருநாள் போட்டிகளை  டி20 பாணியில் டீல் செய்கிறார் ஹர்டிக் பாண்டியா. எந்த பவுலராக இருந்தாலும் சிக்ஸர் விளாச தயக்கம் காட்டுவதில்லை. இந்தத் தொடரில் ஒருநாள் போட்டிகளுக்கு இந்தியா கண்டெடுத்த நம்பிக்கை வீரர் ஹர்டிக் பாண்டியாதான். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒட்டுமொத்தமாகவே அதிக ஸ்ட்ரைக் ரெட் வைத்திருப்பது (194.44) இவர்தான். இறுதிப் போட்டியில் இந்திய அணி சேஸிங் செய்தபோது இவர் களத்தில் நின்றது இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கை கீற்று இருந்தது. பவுலிங்கிலும் மிளிரத் தொடங்கியிருக்கிறார் பாண்டியா. 135 கி.மீ வேகத்தில் வீசுகிறார். பாண்டியாவின் பந்துகள் பேட்ஸ்மேனின் நெஞ்சை குறிவைக்கின்றன. பவுலிங்கில் துல்லியம் கூட்டினால் பென்ஸ்டோக்ஸ்போல இவரும் மிகப்பெரிய சொத்தாக இந்திய அணிக்கு இருப்பார்.

இம்ரான் தாகீர்

8. இம்ரான் தாகீர் : 

இந்தத் தொடர் முழுவதுமே சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறினர். பிட்ச் சுழற்பந்துக்கு சாதகம் இல்லை என்பதால் விரலால் பந்தைச் சுழற்றும் பவுலர்கள் தடுமாறினர். மணிக்கட்டை சுழற்றி பந்தைச் சுழலச் செய்த இம்ரான் தாகீர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரது பந்துகளைக் கவனமாகவே கையாண்டார்கள் பேட்ஸ்மேன்கள். ஓவருக்குச் சராசரியாக 4.32 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இலங்கை எளிதாகத் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்துவிடும் என்பதுபோலத் தெரிந்த சமயத்தில்
டி வில்லியர்ஸ் தாகீரை அழைத்தார். தன் கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் இம்ரான். அவரது ஸ்பெல்லில் சுழற்பந்தை நன்றாக கையாளக்கூடிய இலங்கை பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அன்றைய தினம் மேட்ச் வின்னர் இம்ரான் தாகீர்தான். அடில் ரஷீத் இவரைவிட கூடுதலாக இரண்டு விக்கெட் எடுத்திருந்தாலும், பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து திணறடித்த பவுலர் என்ற அடிப்படையில் இம்ரான் கனவு அணிக்கு தேர்வாகிறார். 

 புவனேஷ்வர் குமார்

9. புவனேஷ்வர் குமார் :

ஐந்து போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக வீசிய ஒரே பவுலர் இவர்தான். இந்திய பவுலர்களில் ஓவருக்கு சராசரியாகக் குறைவான ரன்களை (4.64) கொடுத்த பவுலரும் இவரே. இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக நன்றாக ஸ்விங் ஆகும். ஆனால், இந்த சாம்பியன்ஸ் டிராபியில் எல்லாமே பேட்டிங் பிட்சாகவே இருந்தன. இயல்பாக பந்துகள் ஸ்விங் ஆகவேயில்லை. எனினும் தனது  திறமையால் சரியான இடத்தில் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் கொடுத்தார் புவனேஷ்வர். இறுதிப் போட்டியில் அவர் வீசிய முதல் ஸ்பெல் அட்டகாசம். 

ஹசன் அலி

10. ஹசன் அலி : 

சாம்பியன்ஸ் டிராபியின் நம்பர் -1 பவுலர் மற்றும் தொடர் நாயகன் ஹசன் அலி. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஸ்டம்புகளைத் தகர்த்தெறிந்தார் ஹசன். லீக் சுற்றில் முதல் போட்டியில் யுவராஜின் கேட்சைக் கோட்டை விட்டார்.  அதன் பிறகு, இவர் பந்துவீச வந்தபோது யுவராஜ் வெளுத்துவாங்கினார். முதல் போட்டி மோசமாக அமைந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளில் இருந்து உடனடியாகப் பாடம் கற்றுக்கொண்டு அபாரமாக வீசினார். 

ஐந்து போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, இந்தத் தொடரில் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் (4.29) பெற்றுள்ளார். சராசரியாக இவர் வீசிய 14.69 பந்துகளில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருக்கிறார். புள்ளிவிவரங்களிலும் சரி, பெர்ஃபாமென்ஸிலும் சரி இந்தத் தொடரின் ஆகச்சிறந்த பவுலர் ஹசன் அலி.

11. லயம் பிளங்கட் :

இரண்டு முறை ஒரே போட்டியில்  நான்கு விக்கெட்டுகளை  வீழ்த்திச் சாதனை படைத்திருக்கிறார் லயம்  பிளங்கட். வங்கதேசத்துக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் வங்கதேசம் 350 ரன்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. தமீம் இக்பால் சதமடித்த கையோடு அடுத்தடுத்து சிக்ஸர்கள் விளாச தயாரான  இருந்தார். அவருக்கு பக்கபலமாக முஷ்பிகுர் ரஹீமும் இருந்தார். இந்நிலையில் ஒரே ஓவரில் இவர்கள் இருவரின் விக்கெட்டையும் காலி செய்தது மட்டுமின்றி அடுத்து வந்த சபீர்  ரஹ்மானையும் அவுட் ஆக்கினார். இவரது அபாரமான பந்துவீச்சில் நான்கு வங்கதேச பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினார்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னும் 20 - 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வங்கதேசம் வெற்றி பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்பட்டது. வங்கதேசத்தை 305 ரன்களுக்குள் அடக்கியதில் பிளங்கட்டுக்கு பெரும் பங்கு உண்டு. 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார் பிளங்கட். முகமது ஆமீர் இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்றாலும்கூட, மற்ற போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. பிளங்கட் விக்கெட் வீழ்த்தும் பிரதான பவுலர் என்பதாலும், இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பதன் அடிப்படையிலும் கனவு அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.