வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (21/06/2017)

கடைசி தொடர்பு:19:52 (21/06/2017)

கோலி-கும்ப்ளே மோதல்... அடுத்த பயிற்சியாளர் எப்போது நியமனம்... ராஜீவ் சுக்லா முக்கியத் தகவல்!

இலங்கைத் தொடருக்கு முன்னர் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என பி.சி.சி.ஐ அதிகாரி ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

ராஜீவ்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது ஓராண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, கும்ப்ளே நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது. மேலும், 'கோலிக்கு என்னுடைய பயிற்சி முறைகளில் சில முரண்பாடுகள் இருந்தன' என்று கும்ப்ளே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பி.சி.சி.ஐ அதிகாரி ராஜீவ் சுக்லா இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் குறித்து பேசியபோது, 'கோலி-கும்ப்ளே இடையிலான இவ்விவகாரத்தைத் தீர்க்க பி.சி.சி.ஐ முயற்சி செய்தும், எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. மேலும், கும்ப்ளேவை இலங்கையுடனான தொடர் வரை நீட்டிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர் மேற்கிந்தியத் தீவு சுற்றுப்பயணத்துக்கே செல்லப்போவதில்லை என முடிவெடுத்துவிட்டார். இதையடுத்து அடுத்த பயிற்சியாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கையுடனான தொடருக்கு முன்னர், புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார்' என்று கூறியுள்ளார்.