வெளியிடப்பட்ட நேரம்: 05:03 (22/06/2017)

கடைசி தொடர்பு:11:31 (22/06/2017)

'கடந்த ஆறு மாதங்களாக கோலி, கும்ப்ளே இடையே பேச்சுவார்த்தைகூட சரியில்லை' - வெளிவந்த உண்மை

anil

கடந்த ஆறு மாதங்களாக, இந்தியக் கிரிக்கெட் கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே முறையான பேச்சுவார்த்தை கூட இல்லை எனத் தகவல் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இடையிலான கருத்து வேறுபாட்டின் உச்சமாக, அனில் கும்ப்ளே தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நேற்றைய முன்தினம் விலகியுள்ளார்.

இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் சூழலில், சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கேப்டன் கோலியும் கும்ப்ளேவும் கடந்த ஆறு மாதங்களாக முறையாகப் பேசிக்கொள்வதுகூட இல்லையாம். கடந்த டிசம்பரில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்துப் பரிமாற்றம்கூட முறையாக இல்லாமல் போய்விட்டது எனத் தகவல் கூறப்பட்டது. மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாகத் தங்கள் ஒப்புதலைக் கொடுக்கவில்லையாம். 

பிசிசிஐ நிர்வாகிகளுடன் நேரில் பேசிய கும்ப்ளே, 'விராட்டிடம் எந்தப் பிரச்னையும் இல்லை', எனக் கூறியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலி, கும்ப்ளே இருவரையும் ஒரேநேரத்தில் அழைத்துப்பேசியபோதும்கூட சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதே கடைசிகட்டத் தகவலாக உள்ளது .